முதல்வரிடம் திருமாவளவன் வைத்த 4 கோரிக்கைகள்!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், இன்று தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தார். இந்த சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கக்கூடும் என்று பேசப்பட்ட நிலையில், சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், 'அரசியல் குறித்து எந்த விஷயமும் முதல்வரிடத்தில் பேசப்படவில்லை. எங்கள் தரப்பு கோரிக்கைகள் சிலவற்றை அவரிடம் எடுத்துக் கூறினோம். மற்றபடி சந்திப்பு நன்றாகவே இருந்தது' என்று விளக்கம் அளித்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். 

பழனிசாமி மற்றும் திருமாவளவன்

அரசியல் குறித்து இந்த சந்திப்பில் எதுவும் பேசப்படவில்லை என்பதை திருமாவளவனே உறுதிசெய்து விட்டாலும், இந்த சந்திப்பின் நோக்கம் ஒரு பிரதான கோரிக்கையை முன் வைத்தே இருந்தது என்பதை திருமாவளவன் முதல்வரிடம் கொடுத்துள்ள கடிதத்தின் வாயிலாக தெரிகிறது. 

'அனைத்து சாதியினரும் அர்ச்சகர்களாக நியமனம் செய்வது தொடர்பாக' என்று தலைப்பிட்ட அந்த கடிதத்தில்,

'1. இந்து அறநிலையத் துறைக்கு உட்பட்ட கோயில்கள் சிலவற்றில் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வழிபாடு செய்ய முடியாத நிலை உள்ளது. இந்தத் தடைகளை கலைந்து இந்து அறநிலையத் துறைக்கு உட்பட்ட கோயில்கள் அனைத்திலும் அனைவரும் சமமாக வழிபாடு செய்யும் உரிமையை உறுதிபடுத்த வேண்டும். 

2. இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் வராத கோயில்களே தமிழ்நாட்டில் அதிகமாக உள்ளன. அக்கோயில்கள் பலவற்றில் தலித்துகள் வழிபாடு செய்ய அனுமதிக்கப்படுவதில்லை. அவை சாதியவாதிகளின் பிடியில் சிக்கியுள்ளன. அத்தகைய கோயில்களில் சமத்துவத்தை நிலைநாட்டிட அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அனைவரும் வழிபட அனுமதிக்காத கோயில்களை அரசு கையகப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். 

3. கோயில் அறங்காவலர் பதவிகளில் தலித் மக்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப பிரதிநிதித்துவம் வழங்கிட தமிழக அரசின் சார்பில் நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும். 

4. தலித் பகுதிகளில் அந்த மக்களால் கட்டப்பட்டு வழிபாட்டில் இருக்கும் கோயில்களை சீரமைத்துப் பராமரித்திட ரூபாய் 5 லட்சம் தமிழக அரசு நிதி உதவி அளித்திட வேண்டும்' என்ற நான்கு விஷயங்கள் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளன. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!