Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

1600 வகை அந்துப்பூச்சிகளுக்கு ஏற்காட்டில் ஓர் பூங்கா கேட்கும் இயற்கை ஆர்வலர்கள்!

அந்துப்பூச்சிஅந்துப்பூச்சி

வண்ணத்துப்பூச்சி போன்ற தோற்றம் உடைய ஒரு வகை பூச்சியை அந்துப்பூச்சி அல்லது விட்டில் பூச்சிகள் என்று அழைக்கின்றோம். இது இரவு நேரத்தில் வருவதால் 'இரவு வண்ணத்துப்பூச்சி' என்றும் அழைக்கப்படுகிறது. ”உலகில் சுமார் 1,60,000 அந்துப்பூச்சி இனங்கள் இருக்கின்றன. இவற்றில் பெரும்பாலான சிற்றினங்கள் பற்றி இதுவரை சரியாக வகைப்படுத்தி, விவரித்து எழுதாமலும் இருக்கிறது” என்கிறார் ஏற்காட்டைச் சேர்ந்த அறிவியல் எழுத்தாளர் இளங்கோ.

”வண்ணத்துப் பூச்சிகள் பகலில் உலாவுகின்றன. ஆனால், பெரும்பாலான அந்துப்பூச்சிகள் இரவில் மட்டுமே உலாவுகின்றன. இருப்பினும் பகல் நேர உலாவிகள் மற்றும் மாலை நேர உலாவிகளும் உள்ளன. இரவில் ஒளியின் வெளிச்சத்தால் கவரப்படுவதால் அந்துப்பூச்சிகள் விளக்கைச் சுற்றி வட்டமிட்டு பறக்கின்றன. அந்துப்பூச்சிகள் மந்த நிறம் கொண்டவை.  அவை வண்ணத்துப்பூச்சிகளைப் போல பிரகாசமான நிறத்தைக் கொண்டிருக்காது. இதன் உணர்கொம்புகள் சீப்பு போல் அல்லது இறகுபோல் இருக்கும். இறக்கையானது செதில் போன்றது. சிறகுகளை தனது பக்கவாட்டில், ஓய்வு நிலையில் தட்டையாக வைத்திருக்கும். இவை பகலில் உறங்கிக் கொண்டே இருக்கும். அந்துப்பூச்சிகள் தடித்த உடலமைப்பைக் கொண்டிருக்கும்” என்கிறார் இளங்கோ.

அந்துப்பூச்சிகளை நன்மை செய்பவை மற்றும் தீமை செய்பவை என இரண்டு வகையாகப் பிரிக்கின்றனர். பூக்களில் மகரந்த சேர்க்கை ஏற்பட உதவுகின்றன. பட்டு நூல் தயாரிக்க உதவும் அந்துப்பூச்சிகளும் இருக்கின்றன. சில வகை அந்துப்பூச்சிகளின் புழுக்களை ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் உணவாக உண்கின்றனர். பல வகையான அந்துப்பூச்சிகள் விவசாயப் பயிர்களில் தொற்று நோயை ஏற்படுத்துவதன் மூலம் விவசாயத்துக்கு தீங்கு விளைவிக்கின்றன.

அந்துப்பூச்சிகள் 7 -14 நாள்கள் மட்டுமே உயிர் வாழ்கின்றன. இவற்றின் வாழ்க்கைச் சுழற்றியானது 4 நிலைகளைக் கொண்டது. முட்டைப் பருவம், புழுப்பருவம், கூட்டுப்புழு பருவம் மற்றும் இறக்கையுடன் முழு அந்துப்பூச்சி பருவம் என்பனவாகும். மிகச் சிறிய 5 மி.மீ முதல் 35 செ.மீ அளவுக்குப் பெரிய அந்துப்பூச்சிகள் உள்ளன. இந்தியாவில் சுமார் 10,000 வகையான அந்துப்பூச்சிகள் உள்ளன. சேலம் மாவட்டம் ஏற்காட்டில் 1600-க்கும் மேற்பட்ட அந்துப்பூச்சி வகைகள் உள்ளன.

ஓசனிச் சிட்டு அந்துப்பூச்சி:
பகல் பொழுதில் தேன் நிறைந்த மலர்களில் பறந்துகொண்டே தேனை உறிஞ்சிக் கொண்டிருக்கும் ஓர் அந்துப்பூச்சியை ஓசனிச்சிட்டு பருந்து அந்துப்பூச்சி என்கின்றனர். இந்த அந்துப்பூச்சிகளின் முன் இறக்கைகள் பழுப்பு நிறமும், அதன் மீது கறுப்பு அலை, அலையாக வரிகளைக் கொண்டிருக்கும். இதன்பின் இறக்கைகள் ஆரஞ்சு மற்றும் கறுப்பு விளிம்பைக் கொண்டிருக்கும். இதன் இறக்கை விரிப்பானது 40-45 மில்லி மீட்டர் நீளம் கொண்டிருக்கும். இதற்கு நீண்ட உறிஞ்சு குழல் உள்ளது. இது பறந்துகொண்டே தனது நீண்ட உறிஞ்சு குழலை மலரினுள் செலுத்தி தேனை உறியும். இறக்கைகளை வேகமாக அசைப்பதால் அதிலிருந்து ரீங்கார ஒசை எழும். இதன் காரணமாக ரீங்கார அந்துப்பூச்சி என்றும் இதை அழைப்பர்.

அலரி அந்துப்பூச்சி:
உலகில் மிக வேகமாகப் பறக்கும் அந்துப்பூச்சிகளின் ஒன்றுதான் அலரி பருந்து அந்துப்பூச்சி. இது மணிக்கு சுமார் 45 கி.மீ வேகத்தில் பறக்கும். இந்த அந்துப்பூச்சியானது தனது முட்டைகளை அலரி செடியில் இடும். அதன் புழுக்கள் அலரி இலைகளை தின்று வளர்ச்சி அடையும். அதனாலேயே இதை அலரி அந்துப்பூச்சி என்கின்றனர். இதன்  இறக்கைகள் ராணுவ பச்சை நிறத்தில் இருக்கும். வயிறு பச்சை அல்லது சாம்பல் பச்சை நிறத்தில் இருக்கும்.

அட்லஸ் அந்துப்பூச்சி:
அந்துப்பூச்சிகளில் மிகப்பெரியது அட்லஸ் அந்துப்பூச்சி. இது இந்தியாவின் இமயமலைப்பகுதி, சீனா, மலாய், ஆஸ்திரேலியா ஆகிய இடங்களில் வசிக்கின்றன. இதுவே உலகின் மிகப் பெரிய அந்துப்பூச்சி ஆகும். இதனுடைய இரண்டு சிறகுகள் விரிந்த நிலையில் 25-30 செ.மீ நீளம் இருக்கும். மொத்த பரப்பளவானது சுமார் 400 சதுர செ.மீ இருக்கும். சிறகு விரித்து நிற்கும்போது அதில் உள்ள டிசைன் மிகப் பெரிய ஆச்சர்யத்தை தரும். பார்ப்பதற்கு அட்லஸ் அதாவது உலக வரைப்படம் போன்று இருக்கும் அதனால் இது அட்லஸ் அந்துப்பூச்சி என்கிறோம்.

ஆந்தைக்கண் அந்துப்பூச்சி:
இந்த வகை அந்துப்பூச்சிகளின் மேல் இறக்கையில் ஆந்தை பறவையின் கண் போன்ற உருவம் இருக்கும். ஆகவே, இது ஆந்தைக் கண் அந்துப்பூச்சி என்கிறோம். இது வெளிறிய மந்தமான பழுப்பு கலந்த கருமை நிறத்துடன் காணப்படுகின்றன. இதுவரை 6 வகையான ஆந்தைக் கண் அந்துப்பூச்சிகள் ஏற்காட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றின் அளவு, நிறம் மாறுபட்டுள்ளது.

நிலா அந்துப்பூச்சி:
ஆகஸ்ட் மாதத்தில் மட்டும்  இரவு நேரத்தில் பட்டம் பறந்து வருவதுபோல் நிலா பட்டாம்பூச்சி பறந்து வருவதைக் காண முடிகிறது. இது ஒரு அரிய காட்சி எனலாம். இதை இரவில் மட்டுமே காணமுடியும். நிலா பட்டாம்பூச்சி மிக அரிதானது. எளிதில் பார்க்க முடியாது. இந்தியாவில் உள்ள அந்துப்பூச்சிகளில் இரண்டாவது பெரிய அந்துப்பூச்சியாகும். வட அமெரிக்காவின் பெரிய அந்துப்பூச்சி என்கின்ற அந்தஸ்து இதற்கு உண்டு. இதை மூன் அந்துப்பூச்சி, லூனா அந்துப்பூச்சி என்றும் அழைப்பர். இந்தியாவில் மேற்குத் தொடர்ச்சி மலையில் இது இருப்பதைக் கண்டுப்பிடித்துள்ளனர். ஆனால், கிழக்குத் தொடர்ச்சி மலையில் இதுவரை கண்டுபிடித்தற்கான ஆதாரம் இல்லை. தற்போது ஏற்காட்டில் இந்த நிலா அந்துப் பூச்சி இருப்பதைக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இளங்கோ

”ஏற்காட்டில் 400க்கும் மேற்பட்ட அந்துப்பூச்சிகள் வாழ்ந்துகொண்டிருக்கிறது. இரவு நேரத்தில் மின் கம்பத்தில் உள்ள மின் விளக்குகளின் ஒளியால் கவரப்பட்டு வெகுதொலைவில் இருந்து வருகின்றது. வழி தவறியும், ஒயர் கம்பிகளில் அடிபட்டும் ஒரு நாளைக்கு 1000க்கும் மேற்பட்ட அந்துப்பூச்சிகள் அழிந்து போகின்றன. பல்லுயிர் வளத்தைப் பாதுக்காக வேண்டிய அவசியம் உள்ளதால் அந்துப்பூச்சிகளையும் பாதுகாக்க வேண்டும். வண்ணத்துப்பூச்சிகளுக்கு திருச்சி சீரங்கத்தில் பூங்கா இருப்பது போல ஏற்காட்டில் அந்துப்பூச்சிகளைப் பாதுகாக்க ஒரு பூங்கா அமைக்க வேண்டும்'' என்றார் இளங்கோ.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement