வெளியிடப்பட்ட நேரம்: 20:40 (11/10/2017)

கடைசி தொடர்பு:16:26 (23/07/2018)

இலங்கை அரசால் விடுவிக்கப்பட்ட படகுகளை மீட்கச் சென்றது மீனவர்கள் குழு

இலங்கை அரசால் விடுவிக்கப்பட்ட நாகை மாவட்ட விசைப்படகுகளை மீட்டு வர நாகை மாவட்ட மீனவர்கள் இன்று இலங்கை சென்றனர்.
பாக் நீரிணைப் பகுதியில் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களையும் அவர்களது படகுகளையும் இலங்கைக் கடற்படையினர் சிறை பிடித்துச் செல்வது தொடர்ச்சியாக நடந்து வருகிறது. சிறை பிடிக்கப்பட்ட மீனவர்கள் விடுவிக்கப்பட்டாலும் அவர்களது படகுகள் விடுவிக்கப்படுவதில்லை. ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் காரைக்கால் பகுதிகளைச் சேர்ந்த 180-க்கும் மேற்பட்ட படகுகள் இலங்கைக் கடற்படையினரால் இதுவரை சிறைபிடிக்கப்பட்டுள்ளது.

படகுகளை மீட்க இலங்கை சென்ற நாகை மீனவர்கள்

இந்நிலையில், சிறைபிடிக்கப்பட்ட படகுகளை விடுவிக்க வலியுறுத்தி மீனவர்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தியதன் விளைவாக மத்திய, மாநில அரசுகள் படகுகளை விடுவிக்க இலங்கை அரசுக்கு கோரிக்கை விடுத்தன. இதைத்தொடர்ந்து 42 படகுகளை மட்டும் விடுவிக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்தப் படகுகளில் 10 படகுகள் மீட்க முடியாத நிலையில் சேதமாகிப் போனது. எஞ்சிய படகுகளை மீட்க மீனவர்கள் குழு குழுவாக இலங்கை சென்று வருகின்றனர்.

நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 6 படகுகளை மீட்டு வர  5-ம் கட்டமாக  நாகை மாவட்ட மீனவர்கள் 42 பேர் இன்று மண்டபத்தில் இருந்து யாழ்ப்பாணம் சென்றனர். ஏற்கெனவே சென்ற 4 மீனவர் குழுக்கள் இதுவரை 10 படகுகளை மீட்டு வந்துள்ளனர். மேலும், 3 படகுகள் மீட்க முடியாத நிலையில் மூழ்கிப் போனதால் அவற்றை மீட்க முடியாமல் நேற்று முன்தினம் ஒரு குழு நாகைக்கு ஏமாற்றத்துடன் திரும்பினர். இவர்கள் திரும்பி வரும் வழியில் இந்தியக் கடற்படையினரால் தாக்கப்பட்ட சம்பவமும் நடந்தது குறிப்பிடத்தக்கது.