வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (11/10/2017)

கடைசி தொடர்பு:22:00 (11/10/2017)

`மத்தியில் காவி, மாநிலத்தில் ஆவி, இனி மக்கள் நலன் காலி'- கொந்தளித்தார் வீரமணி

மத்தியில் காவி, மாநிலத்தில் ஆவி, இனி மக்கள் நலன் காலி என்று அதிரடியாக மத்திய, மாநில அரசுகளை விமர்சித்திருக்கிறார் திராவிடர் கழகத் தலைவர் வீரமணி.

 

 


அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் நடைபெற்ற  திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசினார் வீரமணி. அப்போது அவர், தமிழ்நாட்டில் தற்போது நிலவேம்பு கஷாயமும் பப்பாளியும்தான் மக்களைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறது. மக்களைக் காப்பாற்றவதற்கான எந்த முயற்சிகளையும் தமிழக அரசு எடுக்கவில்லை. அதுமட்டுமல்லாமல் வருமுன் காப்பதற்கான நிகழ்ச்சியை நடத்தப்படவில்லை. டெங்கு மட்டுமல்லாமல் மக்களுடைய நலம் சார்ந்த பிரச்னைகள் நிறைய உள்ளன. அவற்றை ஒருங்கிணைத்து செயலாற்ற வேண்டும். அனைத்துக் கட்சிகளையும் இணைத்து ஆங்காங்கே குழுக்கள் அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற மனப்பான்மையே தமிழக அரசிடம் இல்லாதது வருத்தத்துக்குறியது.  

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்று கலைஞர் மற்றும் பெரியார் சொல்லிக்கொண்டே இருந்தார்கள். தமிழகத்தில் பயிற்சி பெற்ற அர்ச்சகர்கள் ஏராளமானோர் இருக்கின்றனர் அவர்களை அர்ச்சகர்களாக நியமிக்க வேண்டும். அவர்கள் பல ஆண்டுகளாகப் போராடி வருகின்றார்கள். அதற்காக திராவிடர் கழகம் சார்பில் கடிதம் ஒன்றும் அனுப்பப்பட்டுள்ளது. அதற்கு நடவடிக்கை ஏதும் இல்லாதபட்சத்தில் அனைத்துக்கட்சியினரையும் அழைத்து ஒரு மாபெரும் போராட்டத்தை அறிவிக்க இருக்கிறோம்.  

       


தீபாவளிப்பண்டிகை என்பது நரகாசுரனை மையப்படுத்தி கொண்டாடக்கூடிய ஒரு பண்டிகையாகும்.  நரகாசுரன், மகிளாசுரன் என்ற திராவிடர்களை அடிமைப்படுத்தி வைத்திருந்தார்கள்.  அதனை நினைவு கூறும் வகையில் கொண்டாடும் பண்டிகைதான் தீபாவளி.  அது ஒரு பண்பாட்டு திருவிழாவாக கொண்டாட திராவிடர் கழகம் ஏற்பாடு செய்திருக்கிறது. அது இந்த ஆண்டுமுதல் நடைபெறும்' என்று பி.ஜே.பி பக்கம் தாவினார்.

'தற்பொழுது அரசியல் சூழ்நிலையில் மத்தியில் காவி,மாநிலத்தில் ஆவி, மக்கள் நலன் காலி' என விமர்சனம் செய்தார் . மேலும், நீட் தேர்வில்  பல சட்ட பிரச்னைகள் நடந்துகொண்டிருக்கிறது விதிகளுக்கும் புறம்பாக நடந்துகொண்டு இருக்கின்றன. இது முற்றிலும் தவறான ஒன்று. நீட் தேர்வை  திராவிடர் கழகம் மற்றும் அதனுடன் ஒத்த கருத்துடைய அனைத்து கட்சிகளும் இணைந்து ஒரு மாபெரும் வழக்கினை தொடுப்பதற்காக ஆயத்தமாகிக்கொண்டிருக்கின்றோம். நீட் தேர்வால் நடத்தப்பட்ட தேர்வும் சட்ட விரோதமானது. அதற்கான போதிய ஆதாரங்களை திரட்டி பிரபல சட்ட வல்லுநர்களுடன் ஆலோசணை நடத்தி வருகின்றோம்.  நீதிமன்றத்தில், மக்கள் மன்றத்தில் அதைப்பற்றி பிரசாரம் செய்ய இருக்கிறோம் என்று முடித்தார்.