அரசு நடுநிலைப் பள்ளி கட்டடம் இடிந்து விபத்து!

கோவை அருகே, அரசு நடுநிலைப் பள்ளி கட்டடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்து

கோவை அருகே, நீலாம்பூரில் அரசு நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்நிலையில், நேற்று அதிகாலை அந்தப் பள்ளிக் கட்டடம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இரண்டு மணி நேரம் தாமதமாக இந்த விபத்து ஏற்பட்டிருந்தால் பெரும் உயிர்ச் சேதம் ஏற்பட்டிருக்கும். அந்தப் பள்ளியில் 257 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த விபத்தால் மாணவர்கள் மற்றும் பெற்றோர் கடும் அதிர்ச்சியடைந்தனர்.

மரத்தடியில் வைத்துதான் மாணவர்களுக்குப் பாடம் எடுக்கப்படுகிறது. "எங்க பசங்கள நாங்க கூப்ட்டு போறோம். உசுரு ரொம்ப முக்கியம்" என்று மாணவர்களை அழைத்துச் செல்வதற்காக, பள்ளிக்கு பெற்றோர்களும் வருகை தந்தபடி உள்ளனர். இந்த விபத்து குறித்து சமூக ஆர்வலர் ராமமூர்த்தி கூறுகையில், "இந்தப் பள்ளி 106 ஆண்டுகளாக இயங்கிவருகிறது. இந்தப் பள்ளிக்கு கடந்த 2008-09 நிதியாண்டில், புதுக் கட்டடங்கள் கட்டப்பட்டன. அது 2010-ம் ஆண்டில் திறக்கப்பட்டது. பின்னர், 2014-ம் ஆண்டு இந்தக் கட்டடம் ஆல்டர் செய்யப்பட்டது. ஆனால், 2015-ம் ஆண்டில் பள்ளியில் மழை நீர் ஒழுகுவதாக தலைமை ஆசிரியர் மூலம், கோவை மாவட்டக் கல்வித்துறையிடம் புகார்
அளிக்கப்பட்டது.

விபத்து

இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை. கடந்த ஆண்டு மழை பெய்யாததால் விபத்து ஏதும் ஏற்படவில்லை. ஆனால், இந்த ஆண்டு தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், வட்டார வளர்ச்சி அலுவலகம், வட்டாட்சியர், மாவட்டக் கல்வித்துறை ஆகியோரிடம் கடந்த மாதம் 19-ம் தேதி புகார் அளித்தோம். பள்ளியின் நிலைகுறித்து, புகைப்படங்களுடன் புகார் அளித்தோம்.

20 நாள்கள் ஆகியும் அதிகாரிகள் அதைக் கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில், இன்று அதிகாலை சீலிங் இடிந்து விழுந்துள்ளது. மாணவர்கள் அமர்ந்து படிக்கும் இடித்தால்தான் விபத்து ஏற்பட்டுள்ளது. 36 மாணவர்கள் விபத்து நடந்த இடத்தில் அமர்ந்துதான் படிப்பார்கள். சற்று தாமதமாக விபத்துநடந்திருந்தாலும், மாணவர்களின் உயிருக்கே ஆபத்து ஏற்பட்டிருக்கும். சோமனூர் பேருந்து நிலையத்தைக் கட்டிய கான்ட்ராக்டர் வெங்கடாச்சலம்தான், கடந்த 2014-ம் ஆண்டு அந்தப் பள்ளியின் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார்" என்றார். விபத்து நடந்த பிறகு பி.டி.ஓ நாகராஜ், பொறியாளர் ஹரிதாஸ் மற்றும் போலீஸ் அதிகாரிகள் பார்வையிட்டனர். ஆனால், மதியம் வரை கல்வித்துறையிலிருந்து அதிகாரிகள் வரவில்லை என்று குற்றம்சாட்டப்படுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!