சுத்தப்படுத்தப்பட்ட கோயில் தெப்பக்குளம்... விநாயகர் சிலை கிடைத்ததால் பக்தர்கள் பரவசம்! | Temple tank is cleaned by devotees, while cleaning they found a Ganesh idol

வெளியிடப்பட்ட நேரம்: 22:20 (11/10/2017)

கடைசி தொடர்பு:22:20 (11/10/2017)

சுத்தப்படுத்தப்பட்ட கோயில் தெப்பக்குளம்... விநாயகர் சிலை கிடைத்ததால் பக்தர்கள் பரவசம்!

நெல்லை மாவட்டம், வள்ளியூரில் உள்ள முருகன் கோயிலின் தெப்பக்குளம் பக்தர்களால் சுத்தம் செய்யப்பட்டது. இந்தப் பணியின்போது விநாயகர் சிலை கிடைத்ததால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

நெல்லை மாவட்டம், வள்ளியூரில் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது. நெல்லை, நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையின் அருகில் அமைந்துள்ள இந்தக் கோயில், குடைவரைக் கோயிலாகும். மிகவும் பிரசித்திபெற்ற இந்தக் கோயிலின் தெப்பக்குளத்தின் அடிப்பகுதியில் குப்பை கூழங்கலாகவும் மண் சேர்ந்து கழிவாகவும் கிடந்தது. இதை சீரமைக்க பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். அத்துடன் சீரமைப்புப் பணியில் தாங்களே ஈடுபட்டு பணிகளை மேற்கொள்ளவும் பக்தர்கள் முன்வந்தனர். 

விநாயகர் சிலை

அதைத்தொடர்ந்து இந்தக் கோயிலின் அர்ச்சகரான கணேச பட்டர் சீரமைப்புப் பணிக்கான வேலைகளை ஒருங்கிணைத்தார். வள்ளியூர் சுப்பிரமணிய சுவாமி பக்தர்கள், வேலாண்டித் தம்பிரான் சுவாமி பக்தர்கள், மகான் பரதேசி சுவாமிகள் பக்தர்கள் ஆகியோர் இந்தப் பணியில் முழுமையாக ஈடுபட்டனர். கடந்த 11 தினங்களாக இந்தப் பணிகள் நடைபெற்றன. இரு ஜே.சி.பி எந்திரங்கள், 6 டிராக்டர்கள் உதவியுடன் பக்தர்களும் இணைந்து பணிகளைச் செய்தனர். 

தொடக்கத்தில், தெப்பக்குளத்தில் இருந்த நீர் அகற்றப்பட்டது. பின்னர், கழிவுகளை பக்தர்கள் எந்திரங்களின் உதவியுடன் அகற்றும் பணியில் ஈடுபட்டனர். தற்போது தெப்பக் குளமானது முழுமையாக சுத்தம் செய்யப்பட்டு விட்டது. இந்தப் பணியின்போது கோயிலின் தெப்பக்குளத்தில் மண்ணில் புதைந்து கிடந்த விநாயகரின் கல் சிலை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதால் பக்தர்கள் பரவசம் அடைந்தனர். 

தெப்பக்குளம்

தூர் வாரும் பணிகள் முடிந்தபோதிலும், அடுத்த கட்டமாக படிக்கட்டுகளை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. உடைந்த சுற்றுச் சுவர்களையும் சீரமைக்க பக்தர்கள் முடிவு செய்துள்ளனர். தொடர்ந்து பக்தர்கள் தெப்பக்குளத்தின் சீரமைப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அனைத்துப் பணிகளும் முடிவடையும் வரையிலும் தொடர்ந்து பணிகளை மேற்கொள்ள இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.