டெங்கு தடுப்பிலும் இருக்கிறது, தி.மு.க-வின் கோஷ்டி அரசியல்!

கசாயம் வழங்கும் முகாம்

நெல்லை மாவட்டத்தில் டெங்கு பாதிப்பு தீவிரம் அடைந்து வரும் நிலையில், தி.மு,.க-  வினர் நிலவேம்புக் கஷாயம் வழங்குகின்றனர். அதிலும் கோஷ்டி பூசல் நிலவுவதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். 

நெல்லை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. டெங்கு நோயைப் பரப்பும் ஏடிஸ் வகை கொசுக்களைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அத்துடன், பொதுமக்கள் ஒத்துழைப்புடன் நோயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன. வணிக நிறுவனங்கள், வீடுகளில் கொசு உற்பத்தி ஆகாமல் தடுக்கவும் விழிப்பு உணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

தி.மு.க-வினர் முகாம்

இந்த நிலையில், நெல்லை மாவட்டத்தில் பரவி வரும் டெங்கு நோயைக் கட்டுப்படுத்த பல்வேறு அரசியல் கட்சியினர் சமூக நல அமைப்பினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். பல்வேறு தரப்பினரும் நிலவேம்புக் கஷாயம் வழங்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, நெல்லை மாநகர  தி.மு.க- வினரும் நிலவேம்புக் கஷாயம் வழங்கி வருகின்றனர். பாளையங்கோட்டை தி.மு.க சட்ட மன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான டி.பி.எம்.மைதீன்கான் தனது தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நிலவேம்புக் கஷாயம் வழங்கும் முகாம்களை தொடர்ச்சியாக நடத்தி வருகிறார்.    

தற்போது டெங்கு நோயின் தீவிரம் காரணமாக மீண்டும் நிலவேம்புக் கஷாயம் வழங்கும் முகாம்களை அவர் நடத்தி வருகிறார். பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் காய்ச்சல் பாதிப்பு காரணமாக வருகிறார்கள். அவர்களில் சிலருக்கு டெங்கு இருப்பது உறுதி செய்யப்படுகிறது,. இந்த நிலையில், வெளியூர்களில் இருந்து வரக்கூடிய நோயாளிகள், அவர்களின் உறவினர்கள் பயனடையும் வகையில் அரசு மருத்துவமனை வாயிலின் எதிரில் நிலவேம்புக் கஷாயம் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 3 தினங்களாக டி.பி.எம்.மைதீன்கான் முயற்சியில் இந்தப் பணிகள் நடைபெற்று வருகிறது. 

தி.மு.க

அத்துடன், மேலப்பாளையம் பகுதியில் 13-ம் தேதியில் தொடங்கும் நிலவேம்புக் கஷாயம் வழங்கும் முகாம் 16-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. பாளையங்கோட்டையில் நடக்கும் முகாமில் டி.பி.எம்.மைதீன்கான், முன்னாள் எம்.எல்.ஏ-வான மாலைராஜா, தி.மு.க மாநகர மாவட்டப் பொருளாளர் அருண்குமார், தலைமைச் செயற்குழு உறுப்பினர் வின்சர், முன்னாள் கவுன்சிலர்கள் கோபி நமச்சிவாயம், ரேவதி அசோக் மற்றும் கார்டன் சேகர், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாவட்டத் தலைவர் உமாபதி சிவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நெல்லை மாநகர மாவட்டப் பகுதியில் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் மாநகர மாவட்டச் செயலாளரான அப்துல் வஹாப் மற்றும் அவரது ஆதரவாளர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். கோஷ்டிப் பூசலை வளர்க்கும் வகையில் தனது ஆதரவாளர்களை மட்டுமே வைத்து மைதீன்கான் இந்த நிகழ்ச்சியை நடத்தி வருவதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து கட்சி மேலிடத்திலும் புகார் செய்யப்பட்டிருப்பதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர். அதேசமயம் அப்துல் வஹாப்பை தாங்கள் அழைத்தாலும் அவர் தங்களுடைய நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருவதில்லை என எதிர்த்தரப்பினர் குற்றம் சாட்டுகின்றனர். மக்கள் நலனுக்கான திட்டத்திலும் கோஷ்டி அரசியலா? என பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!