நீதிமன்றங்களில் தமிழ்: நூறாண்டுகளுக்கு முன்பே குரல் கொடுத்த பிதாமகர்!

மாயூரம் வேதநாயகம் பிள்ளை என்ற பெயரைச் சொன்னாலே, தமிழின் முதல் புதினமான பிரதாப முதலியார் சரித்திரத்தை எழுதியவர் என்ற அடையாளம் மட்டுமே பரவலாக அறியப்படுகிறது. தமிழ்ச் சமூகத்துக்கு இவர் ஆற்றிய இன்னும் ஏராளமான பங்களிப்புகள் அனைத்துமே காலத்தை வென்ற மைல் கற்கள். இன்று இவரது பிறந்த தினம். நீதிமன்றங்களில் தமிழ் அனுமதிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை தற்பொழுது வலுப்பெற்று வருகிறது. இவர் நூறாண்டுகளுக்கு முன்பே இதற்காக குரல் கொடுத்த பிதாமகன்.

திருச்சி மாவட்டம், குளத்தூரில் பிறந்த வேதநாயகம் பிள்ளை தமிழ், ஆங்கிலம் இரண்டிலுமே புலமை மிக்கவர். இளம் வயதிலேயே தமிழ் இலக்கண, இலக்கியங்களில் புலமை மிக்கவராக திகழ்ந்தவர். ஆங்கிலத்திலும் வல்லமை மிக்கவர். ஆங்கிலேயர்கள் மட்டுமே நீதிபதிகளாக அமர்த்தப்பட்ட அக்காலத்தில் அவர்களுக்கு துணையாக ஆங்கிலம், தமிழ் இரண்டும் அறிந்த வேதநாயகம் பிள்ளை, மொழிப்பெயர்ப்பாளராக பணியமர்த்தப்பட்டார். மாவட்ட நீதிமன்றங்களுக்கு மேலாக இயங்கிய சதர்ன் கோர்ட் தீர்ப்புகளை மாவட்ட நீதிமன்றங்கள் முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டு தீர்ப்புகள் வழங்கிய காலம் அது. அத்தீர்ப்புகள் அனைத்தும் ஆங்கிலத்தில் மட்டுமே இருந்ததால் வழக்கறிஞர்கள் பெரும் சிரமத்துக்கு ஆளானார்கள். இதனால் அத்தீர்ப்புகளை தமிழில் மொழிப்பெயர்க்கும் பணியில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். மாவட்ட நீதிபதியாக பதவியில் அமர்ந்த பிறகும் தமிழ்த் தொண்டினை இவர் குறைத்துக் கொள்ளவில்லை. நீதிமன்றங்களில் தமிழ் பயன்படுத்தப்பட வேண்டும் என தொடர்ச்சியாக குரல் கொடுத்தார். ஆங்கில மோகம் கொண்ட வழக்கறிஞர்களைக் கிண்டல் செய்து ‘ஆங்கிலம் ஒன்றையே கற்றார். ஆக்கையோடு ஆவியை விற்றார். தாங்களும் அந்நியர் ஆனார். இன்பத் தமிழின் தொடர்பற்றுப் போனார்’ என பாடல் எழுதினார். தரங்கபாடி, சீர்காழி, மயிலாடுதுறை ஆகிய ஊர்களில் நீதிபதியாக பணியாற்றினார். வேதநாயகர், நல்ல நீதிநாயகர் என மக்களால் புகழப்பட்டார். அக்காலத்தில் கடுமையான வறட்சி ஏற்பட்டபோது தனது சொத்துகள் அனைத்தையும் விற்று அரசாங்கத்திடம் பஞ்சம் போக்கும் நிதியாக வழங்கினார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!