ராமநாதபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சோதனை: கணக்கில் வராத பணம் சிக்கியது

ராமநாதபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் திடீர் சோதனை மேற்கொண்டு, கணக்கில் காட்டப்படாத பணத்தைக் கைப்பற்றியுள்ளனர்.

தமிழகம் முழுவதும் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் லஞ்சம் பெற்றுக்கொண்டு முறைகேடுகள் நடப்பதாக லஞ்ச ஒழிப்புத் துறையினருக்கு புகார் வந்துள்ளது. இதையடுத்து, மாநிலம் முழுவதிலும் உள்ள முக்கிய வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு கண்காணிப்பு போலீஸார் திடீர் சோதனை மேற்கொண்டனர். இதில் பல இடங்களில் கணக்கில் காட்டப்படாத பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.

சோதனை யில் சிக்கிய கணக்கில் வராத பணம்

இந்நிலையில் ராமநாதபுரத்தில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு ஆய்வாளர்கள் விமலா, ஜானகி தலைமையில் திடீர் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின்போது போக்குவரத்து ஆய்வாளர், கண்காணிப்பாளர் மற்றும் போக்குவரத்து அலுவலக ஊழியர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. மேலும், வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஓட்டுநர் உரிமம் மற்றும் சான்றிதழ்கள் பெற வந்திருந்த பொதுமக்களிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.  இந்த சோதனையின்போது விண்ணப்பங்களுடன் வைக்கப்பட்டிருந்த கணக்கில் காட்டப்படாத சுமார்  30 ஆயிரம் ரூபாய் கைப்பற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சோதனை நடத்திய ஆய்வாளர்

மேலும் வட்டாரப் போக்குவரத்து அலுவலக ஊழியர்களுடன் தொடர்பில் இருந்து வரும் 10-க்கும் மேற்பட்ட ஏஜண்டுகளிடமும் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் ராமநாதபுரத்தில் பரபரப்பு நிலவி வருகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!