Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

“யானைகளின் காட்டுக்குள் நாம இருக்கோம்!” வனப்பேச்சி நீலாப்பாட்டி

பாட்டி

பசுமையும் குளிரும் சூழ்ந்த மலைக்கிராமம் அது. குழந்தைத் தொழிலாளர் நலப் பள்ளியைச் சுற்றி நான்கைந்து வீடுகள் இருக்கின்றன. பள்ளி என்றதும் பெரிய கட்டடம் என நினைத்துவிட வேண்டாம். ஒரு வகுப்புக்கான இடத்தின் மேல் தகரக் கூரை அமைக்கப்பட்டிருக்கும் அவ்வளவுதான். அந்தப் பகுதியின் மற்ற வீடுகள் தூரத்தில் உள்ளன. அன்று மாலை பெய்திருந்த மழையின் ஈரத்தில் கட்டப்பட்டிருந்த மாடுகள் கால்களை மாற்றி, மாற்றி நின்று கொசுக்களை விரட்டிக்கொண்டிருந்தன. வானத்து நட்சத்திரங்களே அந்தப் பகுதியின் பொதுவான வெளிச்சம். வீடுகளில் ஒளிரும் பல்புகளின் வெளிச்சத்தில் உறங்கும் நாய்கள் தெரிகின்றன. குளிரைச் சுமந்து வீசும் காற்று அந்தக் குடிசையைக் கடக்கும்போது அதோடு, அங்கு பாடப்படும் பாடலும் இணைந்துகொள்கிறது. ஊராளி மொழியும் தமிழும் கலந்த அப் பாடல் அந்தப் பகுதியில் நிறைகிறது.

நான்கைந்து குடிசைகளில் இருப்பவர்களுக்கும், பள்ளியில் படுத்திருப்பவர்களுக்கும் அந்தப் பாடல்தான் தாலாட்டு. விளையாடிய களைப்பில் அயர்ந்து தூங்கிக்கொண்டிருக்கும் குழந்தைகளின் காதுகளிலும் அந்தப் பாடல் நுழைகிறது. அநேகமாக அவர்களின் கனவில் காட்சியோடு அந்தப் பாடல் தோன்றக்கூடும். கடுமையான குளிரில் கொஞ்சமும் நடுக்கமில்லாமல் ஒலித்த அந்தப் பாடலுக்குச் சொந்தக்காரர் நீலாப்பாட்டி. 

ஈரோடு மாவட்டம், அந்தியூரிலிருந்து பிரியும் சாலையில் பர்கூரைக் கடந்தால், நாம் செல்லக்கூடிய மலைக்கிராமங்களில் ஒன்றுதான் அக்னிபாவி. அந்தக் கிராமத்தில் வாழும் நீலாப்பாட்டிக்கு எழுபத்தி ஐந்து வயது. கணவர் மாதன். (தாடி வைத்திருந்ததால் தாடி மாதன்) இவர்களின் வாழ்வில் இசை, பிரிக்கமுடியாத அளவு கலந்திருந்தது.  இவர்களின் பாடல்களைத் தெரியாதவர்கள் அந்தப் பகுதியில் இருக்கமாட்டார்கள். குளிரும் காலை நேரத்தில் நீலாப்பாட்டியோடு சில நிமிடங்கள் பேசும் வாய்ப்புக் கிடைத்தது.

neelapatti

"சின்ன வயசுலேர்ந்தே கூத்துன்னா உசுரு. எவ்வளவு தூரத்துல கூத்து நடந்தாலும் போயிருவேன். அடுத்த நாள், கூத்துல பாடுன பாட்டுகள பாடிப் பார்ப்பேன். சில பேரு கிண்டல் பண்ணுவாங்க. அதை நான் கண்டுக்க மாட்டேன். என் வீட்டுக்காரும் நல்லா பாடுவாரு. பொட்டியும் வாசிப்பாரு. (ஆர்மோனியம் போன்ற இசைக்கருவியைக் காட்டுகிறார்) இரண்டு பேரும் சேர்ந்து ஊர் ஊராகப் பாட்டுப் பாடப்போவோம். அவரு பொட்டி வாசிப்பாரு. நான் பாடுவேன். சில இடத்துல ஆடுவேன்.  கொடுக்கிற காசை வாங்கிப்போம். 
கூத்து நடக்கும்போது எங்கள கூப்பிடுவாங்க. ரெண்டு பேருமே போய்ப் பாடுவோம். எப்போவாச்சும் காட்டு வேலைக்குப் போவோம். ரெண்டு படி ராகிக்கு நாள் முழுக்க வேலைப் பார்க்கணும். இந்த ஊரைப் பத்தி பாடுவோம். காட்டைப் பத்தி, யானையைப் பத்தி... இப்படி எல்லாத்தைப் பத்தியும் பாடுவோம்" என்று கண்களில் அந்தத் தருணம் ததும்பச் சொல்லிக்கொண்டிருக்கும் பாட்டி இப்போதெல்லாம் எங்கும் பாட்டுப் பாடச் செல்வதில்லை. அதற்கான காரணத்தை, அந்தப் பகுதி குழந்தைகளின் கல்விச் செயல்பாடுகளில் ஈடுபட்டிருக்கும் சுடர் அமைப்பின் தலைவர் நடராஜனிடம் கேட்டோம். 

sudar nadarasan "நீலாப்பாட்டியோட தனிச்சிறப்பே தான் பார்க்கிற, கேட்கிற எல்லா விஷயங்களையும் பாட்டாக மாற்றிவிடுவதுதான். அதை ஊராளி கலந்த தமிழில் பாடுவதைக் கேட்க அவ்வளவு ஆசையாக இருக்கும்.   பினாச்சி இசையை வாசித்துக்கொண்டே நடனம் ஆடுவாங்க. பாட்டு என்பது அவர்களுக்கு எவ்வளவு பிடிக்கும் என்றால்... தினமும் இரவில் இருவரும் பாடுவார்கள். தூக்கம் வருகிற வரை பாடுவார்கள். ஒருவர் தூங்கினால் மற்றவர் பாடிக்கொண்டிருப்பார். 
எங்கள் பள்ளியில் பெளர்ணமி அன்றைக்கு நிலாப் பள்ளி என்ற நிகழ்ச்சியை நடத்துவோம். அதில் இந்தப் பகுதியில் மறைந்துவரும் கலைகளை நிகழ்த்திக்காட்ட வைப்போம். ஒவ்வொரு மாதமும் நீலாப்பாட்டி வந்து பாட்டு பாடுவார். ரொம்ப அன்பாக இருப்பதுபோலவே கோபத்தையும் நம்ம மேல காட்டுவார். எதையும் மனசுக்குள் மறைத்துப் பேசத் தெரியாது.

'யானை முருகியவனே...' என்ற பாட்டை அடிக்கடி பாடுவார். யானையோட காட்டுக்குள்ளதான் நாம வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பதுதான் அந்தப் பாட்டோடு அர்த்தம்.  யானையை அண்ணன், பெரிய சாமி எனப் பல பேர் வைத்து கூப்பிடுவார். ஒன்றரை வருஷத்துக்கு முன் பாட்டியோட கணவர் இறந்துவிட்டார். அப்போதிருந்து வெளியூருக்குப் போய்ப் பாடுவதை விட்டுவிட்டார். நாங்க பாடச் சொன்னால் வந்து பாடுவார். காட்டு வேலைக்குத்தான் இப்பப் போய்கொண்டிருக்கிறார்.

இவர்கள் பணி என்பது பாடல்களைப் பாடி, மக்களை மகிழ்வித்தது என்பதாகச் சுருக்கிப் பார்த்துவிட முடியாது. அந்தப் பாடல்களில் வழியே இந்த மலையின் கதையை, இந்த மனிதர்களின் வாழ்வைப் பதிவு செய்திருக்கிறார். குறிப்பாக, மலை வாழ் மக்களின் இயற்கை சார்ந்த அறிவைப் பாடலாக்கியிருக்கிறார். ஊராளி மொழி என்பது எழுத்து வடிவம் இல்லாத பேச்சு மொழி. அதில் பாடல்களைப் பாடி அந்த மொழிக்கான இருப்பதை உறுதியாக்கியாக்கிறார். அவற்றைத் தொகுக்கவும் முறையாகப் பதிவு செய்யப்படவும் வேண்டும். ஏனென்றால், உணவு முறை, சடங்குகள் பற்றி, மருத்துவம் சார்ந்து, விலங்குகளுடன் பழகுவது தொடர்பாக என ஏராளமான குறிப்புகள் இவர்களின் பாடல்களில் ஆவணமாக உள்ளடங்கியிருக்கின்றன. காலத்தைப் பதிவு செய்யும் வேலையை, கலைகள்தானே செய்துவருகின்றன." என்றார் நடராஜன்.

 "எங்களுக்கான ஒரு பாட்டு பாட முடியுமா?" என்றதும் 'இரு பொட்டியை எடுத்துட்டு வாரேன்' என்று சொல்லி, வீட்டுக்குச் சென்று, அந்தப் பெட்டியை எடுத்து வருகிறார். கொஞ்சமும் பிசிறில்லாத குரலில் அழகான பாடலைப் பாடத் தொடங்கியதும் அந்த வழியாகச் சென்றவர்கள் பாடலைக் கேட்டு வந்தனர். நீலாப்பாட்டி எனும் வனப்பேச்சியில் பாடலைக் கேட்க, சூரியனும் மேகங்களைக் கிழித்துக்கொண்டு வெளியே வந்தான்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement