‘நோய்த் தடுப்பில் முன்னோடி’ என்பதை விட டாஸ்மாக் வருமானம்தான் முக்கியமா அமைச்சர்களே?

டெங்கு

மிழகத்தின் மிகப்பெரிய சுகாதாரப்பிரச்னையாக உருவெடுத்துள்ளது டெங்கு பிரச்னை. மருத்துவ சிகிச்சையிலும், நோய் தடுப்பிலும் முதன்மையான மாநிலம் எனப் பெயர் பெற்றிருந்த தமிழகத்தில் அதிகரித்து வரும் டெங்கு நோய் பரவல் என்பது தமிழகத்தின் உடல்நலக்கட்டமைப்பில் உள்ள ஓட்டைகளை அம்பலப்படுத்தியுள்ளது. அடிமட்ட அளவில் சுகாதாரத் திட்டம் அழிந்துகொண்டு வருவதையும் இது உணர்த்துகிறது. மாநிலமெங்கும் டெங்குவின் பாதிப்பு அதிகரித்து வருவது என்பது பெரும் கவலையை ஏற்படுத்தி வருகிறது. அரசு தனது அலட்சியத்தால் இளம் குழந்தைகளை பலிவாங்கி வருகிறது என்ற விமர்சனமே பரவலாக முன்வைக்கப்படுகிறது.

வழக்கமாக இப்படியான நோய் பரவும்போது போர்க்கால அடிப்படையில் பல்வேறு துறையினரைத் திரட்டி சுகாதாரப் பணிகள் முடுக்கி விடப்படும். அதிகாரிகளின் ஆய்வுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு, களப்பணிகள் வேகப்படுத்தப்படும். ஆனால் இந்த முறை நோய் மிகத்தீவிரமாகப் பரவியும் அந்த வேகம் இல்லை. இந்தச் சூழலில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நேற்று (அக்.11) நடந்தது. 

இந்தக்கூட்டத்தில், 'தமிழகத்தின் தற்போதைய மிகப்பெரிய பிரச்னையான டெங்கு குறித்து விவாதிக்கப்படும். நோய் பரவுவதைத் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும்' என எதிர்பார்க்கப்பட்டது. முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில் இரண்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. ஒன்று டாஸ்மாக் மதுபானங்களின் விலையை உயர்த்துவது. இரண்டாவது, அரசு ஊழியர்களின் 7வது ஊதியக்குழு பரிந்துரை அமல்படுத்துவது தொடர்பான ஒப்புதலை வழங்குவது.

டெங்கு நோய் அமைச்சர்கள்

கூட்டத்தில், டெங்கு பிரச்னையைப் பற்றி விவாதித்தாகச் சொல்லப்பட்டாலும், எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்த எந்தத் தகவலும் வெளிப்படையாகத் தெரிவிக்கப்படவில்லை. மாறாக பீர் விலை இந்தளவு உயர்த்தப்படும்; குவார்ட்டர் விலை இந்தளவு உயரும் என்று மட்டுமே செய்திகள் வெளியாயின. இதன் மூலம் டெங்கு பிரச்னையில் எல்லாம் சரியாக நடக்கிறது எனக்காட்டிக்கொள்ளவே அரசு விரும்புகிறது என்பதையும், களத்தில் உள்ள உண்மைகளை இதன் மூலம் மறைத்து விடலாம் என முயல்கிறது என்பதையும் உணர முடிகிறது.

தமிழகத்தில் (அக். 9ம் தேதி வரை) 11,744 பேருக்கு டெங்குக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டதாகவும், இதில் 40 பேர் உயிரிழந்திருப்பதாகவும் சொல்கிறது அரசு தரப்புப் புள்ளி விவரம். ஆனால் களநிலவரம் வேறாக இருக்கிறது. டெங்குவுக்கு நூற்றுக்கணக்கானோர் இறந்ததாகச் சொல்லப்படுகிறது. நாள்தோறும் வெளியாகும் செய்திகள் இதை உறுதிப்படுத்துகின்றன. இந்தத் தகவலை எல்லாம் மறைப்பதிலேயே குறியாக இருக்கிறது அரசு. 

"டெங்குவால் இதுவரை அல்லாத அளவு உயிரிழப்பு இருக்கிறது. டெங்கு நோயாளிக்கு வேறு உடல் நல பாதிப்பு இருந்தால் அவர் டெங்குவால் இறந்தார் எனச் சொல்ல வேண்டாம் என்கிறது சுகாதாரத்துறை. இதனால் பலர் மர்மக் காய்ச்சலால் இறந்தார்கள் என்கிறார்கள்," என்ற பேச்சும் பரவலாக எழுந்து வருகிறது.

டெங்கு நோய்

அரசு வெளியிட்ட புள்ளிவிவரங்களில் இன்னொன்றையும் நாம் கவனிக்க வேண்டும். அதாவது 2012 லிருந்த டெங்கு பாதிப்பை விட இப்போது குறைவாக உள்ளதாகச் சொல்கிறது அந்தப் புள்ளி விவரம். 2012 ல் 13,204 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டதாகவும், 66 பேர் இறந்ததாகவும் சொல்கிறது அந்த விவரம். இதன் மூலம் இப்போது ஏற்பட்ட பாதிப்பு என்பது புதியது அல்ல. பெரியதும் அல்ல என்ற தோற்றத்தை சுகாதாரத்தை ஏற்படுத்த முயல்கிறது.

மறுபுறம், 'மக்களின் ஒத்துழைப்பு இருந்தால்தான் இதுபோன்று பரவும் நோய்களைத் தடுக்க முடியும். தண்ணீரைத் தேக்கி வைக்காதீர்கள். டயர், பிளாஸ்டிக்களைத் தேவையில்லாமல் போட்டு வைக்காதீர்கள். அதுதான் டெங்கு கொசு உருவாகக் காரணம்' எனச் சுகாதாரத்துறை திரும்பத் திரும்பச் சொல்கிறார்கள். மிகச்சரியானதுதான். ஆனால் எழுத்தறிவற்ற, விழிப்பு உணர்வற்ற மக்கள் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லித்தரும் காரியத்தையே அரசு சொல்லித்தரவில்லையே? பெரும்பாலான இடங்களில் கொசு ஒழிப்புப் பணிகள் நடக்கவே இல்லை. ஒரு மரணம் நடந்தால் அங்கு வந்து ஒரு படையே நிற்கிறது. கொழு  புழுவை ஒழிக்க எப்போது மருந்து அடித்தார்கள்? கொசுக்களை ஒழிக்க என்ன நடவடிக்கை எடுத்தார்கள் என்ற கேள்விகளுக்கெல்லாம் தமிழக அரசிடம் தெளிவான பதிலே இல்லை. வரும்முன் காப்போம் என்ற மெச்சத்தக்க நடவடிக்கையைப் பின்பற்ற வேண்டிய அரசு, வந்த பின்னரும் தீவிரம் காட்டாமல் இருப்பது மிகப்பெரிய முரண்.

டாஸ்மாக்

ஆனால் மறுபுறம் டாஸ்மாக் மதுபானங்களின் விலையை உயர்த்த ஒப்புதல் அளித்து, மதுவால் கிடைக்கும் வருவாயை இழக்காமல் இருக்க திட்டம் போடுகிறது அரசு. ஆண்டுக்கு 25 ஆயிரம் கோடி ரூபாயை ஈட்டித்தரும் டாஸ்மாக் வருமானம் குறையாமல் பார்த்துக்கொள்ள அக்கறை செலுத்தத் தொடங்கியிருக்கிறது. 25 ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்கு வரும் வருவாயைக் கடந்து 10 ஆயிரம் கோடி வரை இந்தத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் அரசியல்வாதிகளுக்கும், அவர்களின் நெருக்கமானவர்களுக்கும் வருமானத்தை அள்ளித்தருகிறது டாஸ்மாக். 

நோய் தடுப்பில் முன்னோடியான மாநிலம் என்பதை விட, அதிக லாபமீட்டும் பொதுத்துறை நிறுவனத்தில் முதன்மையான நிறுவனமாக டாஸ்மாக்கை வைத்திருப்பதிலும், மதுவிற்பனையை மாநிலத்தின் முதன்மை வருவாயாக முன்னிறுத்துவதிலுமே தமிழக அரசும், அமைச்சர்களும் பெருமை கொள்வார்கள் போல...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!