Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

எடப்பாடி பழனிசாமியை வழி நடத்துவது யார்? போட்டுத் தாக்கும் பழ.கருப்பையா

எடப்பாடி குறித்து பழ கருப்பையா

‘நாடு எங்கே போகிறது?' என்கிற சிந்தனை கருத்தரங்கம், காரைக்குடி கவிஞர் கண்ணதாசன் மணி மண்டபத்தில் நடைபெற்றது. கருத்தரங்கிற்கு வந்திருந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பழ.கருப்பையாவை அவரது இல்லத்தில் சந்தித்தோம்.எடப்பாடி பழனிசாமி அரசு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்துப் பேசினார்.

"எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு, இவ்வளவு பிரச்னைகளுக்கு இடையேயும் எப்படி நீடிக்க முடிகிறது?

“ ‘ஆட்சியையும், கட்சியையும் எடப்பாடிதான் வழி நடத்துகிறார்' என்று பெருமையாகச் சொல்கிறார்கள். அது மெத்த சரி. ஆனால், எடப்பாடியை யார் வழி நடத்துகிறார் என்பதை அவர்கள் சொல்வதில்லை! சுயமாகச் செயல்பட்டு பழக்கமில்லாதவர் எடப்பாடி. முன்பு ஜெயலலிதாவின் உத்தரவின்பேரில் செயல்பட்டார். இப்போது மோடியின் உத்தரவின்பேரில் செயல்படுகிறார். அம்மா உத்தரவுப்படி, ஜி.எஸ்.டி-யை எதிர்ப்பது கொள்கை. மோடி உத்தரவுப்படி ஜி.எஸ்.டி-யை ஆதரிப்பது கொள்கை. 'பேடியின் கையில் இருக்கும் வாளால் என்ன பயன்?' என்பான் வள்ளுவன். அதேபோல் எடப்பாடி கையில் இருக்கும் ஆட்சியும் அப்படித்தான்.

"தர்மயுத்தம், ஊழல் ஆட்சி என்றெல்லாம் எடப்பாடியை விமர்சித்துவிட்டு அதே எடப்பாடி ஆட்சியில் ஓ.பி.எஸ். துணை முதல்வரானது பற்றி...?"

"ஆமாம்... அம்மாவின் ஆன்மா தன்னை வழி நடத்துவதாக வேறு சொல்லிக்கொண்டார். முக்கால் மணிநேரம் ஜெயலலிதா சமாதியில் தியானம் வேறு செய்தார். நல்லவேளை அதற்குள் செய்தியாளர்கள் வந்து விட்டார்கள்! இல்லாவிட்டால் தியான நேரம் வரம்பின்றி நீண்டு ஓ.பி.எஸ்-க்கு சிரமத்தை ஏற்படுத்தியிருக்கும். 'எடப்பாடியின் ஊழலுக்கு எதிராகப் போராட்டம்; தர்மயுத்தம்' என்றெல்லாம் கூறினார். ஆனால், அவர் இப்போது துணை முதல்வராகி விட்டார்.! தர்மயுத்தம் வென்று விட்டது. வெட்கம் கெட்டவர்கள்!"

ஜெயலலிதா

"அ.தி.மு.க-வை வழி நடத்துவதில் சசிகலா தோல்வியடைந்து விட்டாரே? அதற்கு என்ன காரணம்?"

"ஜெயலலிதா இறந்தவுடன் இன்னொரு ஜெயலலிதாவாக உருவாக சசிகலா முயன்றார். அவரைப்போல் கொண்டை போட்டுக்கொண்டார். அவரைப்போல் நாமம் வைத்துக் கொண்டார். அவரைப்போல் மிக மெதுவாக அரை நடை நடந்தார்! இப்படியே இன்னும் கொஞ்ச காலத்தை ஓட்டியிருப்பார். ஆட்சியிலும் அமர்ந்திருப்பார். ஆனால், முன்செய்த வினையால் சிறைவாசம் குறுக்கிட்டு விட்டது. எலி கூண்டுக்குள் அடைபட்டுவிட்டது. இனி அதன் தாவும் வரம்பு கூண்டளவுக்குத்தான். ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் நான்காண்டு சிறைவாசத்தை மேற்கொண்டிருப்பார். அப்போது அவருடைய கதியும் இதுதான்.

"கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ், தினகரன் அணியிலுள்ள எம்.எல்.ஏ-க்கள்மீது சபாநாயகர் நடவடிக்கை எடுப்பது சரியா?"

"எடப்பாடியை எதிர்ப்பது இவர்களின் அளவுகோல்படி என்றால், ஓ.பி.எஸ். இன்னும் பத்துப் பேரைக் கூட்டிக்கொண்டு, சட்டமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் மீது அரசை எதிர்த்து வாக்களித்தாரே அவர் மீது கட்சித் தாவல் சட்டம் பாய்ந்ததா?

சசிகலா ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் ஆளுநரைச் சந்தித்ததற்கே சட்டம் பாய்கிறது. சட்டமன்ற வளாகத்திற்கு வெளியே சபாநாயகர் செல்லாக்காசு. அவர் எடுத்த நடவடிக்கையும் செல்லாக்காசுதான்! சசிகலா எம்.எல்.ஏ-க்கள் 18 பேர் பதவியைப் பறிப்பது, திமுக எம்.எல்.ஏ- க்கள் 21 பேரை குட்காவைக் கொண்டு வந்து காட்டியதற்காகத் தற்காலிக நீக்கம் செய்து விடுவது. இருக்கிற கொஞ்சப்பேரை வைத்துக்கொண்டு அரசை நீட்டிக்கச் செய்வது; இது எல்லாவற்றிற்கும் மோடியின் ஆசிர்வாதம் உண்டு என்பதுதான் முக்கியமானது.

பழ கருப்பையா"பிஜேபி தமிழ்நாட்டில்... ?"

"பி.ஜே.பி-க்குத் தமிழ்நாட்டில் வேருமில்லை; தூருமில்லை. இங்கே மதரீதியாக அடையாளப்படுத்திக் கொள்ளும் போக்கில்லை. ராமன் வானரப்படையைப் பயன்படுத்திக்கொண்டது போல, சிதறிய அ.தி.மு.க.வை மோடி பயன்படுத்திக்கொள்ள விரும்புகிறார்".

"தமிழ்நாட்டில் நடிகர்கள் முதலமைச்சர் கனவில் அரசியல் பிரவேசம் எடுத்திருக்கிறார்களே…?"

"பருவ மழையை ஒட்டியது விவசாயம் என்பதுபோல, தேர்தலை ஒட்டியது அரசியல் என்று நடிகர்கள் நினைக்கின்றனர். இடஒதுக்கீட்டுக் கொள்கைக்கு முதல் அரசியல் சாசனச் சட்டத் திருத்தம் ஏற்படுத்தியாக வேண்டிய கட்டாயத்தை, பெரியார்  எதிர்க்கட்சி வரிசையில் இருந்துதான் சாதித்தார். அவர் ஆளும் கட்சியாக சாதிக்கவில்லை. அரசியல் என்றவுடனேயே ஆட்சியைப் பிடிப்பது என்று  கருதுகின்றனர். அரசியல் என்பது முதலில் எதிர்நிலை அரசியல்தான். நடிகர்கள் கடையைப் பரப்புவர்: தேர்தலில் போணியாகா விட்டால் மூடி விடுவர். இது பொதுப்பணியின் தன்மையில்லை" 

"அ.தி.மு.க. எதிர்காலத்தில் யார் கையில் இருக்கும்...?"

"அ.தி.மு.க-வே இருக்காது".

"சசிகலாவால் அமைச்சரானவர்கள் விசுவாசமற்றுப் போய்விட்டார்களே?"

"சசிகலா தன் சாதிக்காரர்கள் என்று பலபேரை உருவாக்கினார். தெர்மாகோல் ராஜூ ஓ.எஸ். மணியன், காமராஜ், விஜய பாஸ்கர் என்று எல்லோருமே சாதி அடிப்படையில் என்றென்றும் தன்னவர்கள் என்னும் சசிகலாவின் நம்பிக்கையில், சூனியத்தில் இருந்து அமைச்சர்களாக்கப்பட்டவர்கள். இப்போது அவர்கள் சசிகலாவுடன்  இல்லை என்பது வியப்பானது இல்லை. சாதி தன் ஏற்றத்திற்கு துணை புரியும் என்றால் சாதியை முன்னிலைப்படுத்துவார்கள். அவர்கள் தன்மீது கொண்டுள்ள விசுவாசம் மட்டுமே நிலையானது. பதவி நீட்டிப்பிற்குச் சாதி விசுவாசம் தடை என்றால் பகுத்தறிவாளர்களாக மாறி விடுவார்கள். இது, சசிகலாவுக்குப் புரிந்திருக்கவில்லை என்பது சசிகலாவின் குறையே ஒழிய, விசுவாசமற்றவர்களின் குறையில்லை".

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

நீங்கள் கீழே விழுபவரா, கெட்டியாகப் பற்றிக்கொள்பவரா? - பாசிடிவ் வார்த்தைகளின் பலம் உணர்த்தும் கதை! #MotivationStory
Advertisement

MUST READ

Advertisement