Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஒருபக்கம் சாக்கடை; மறுபக்கம் பெருகும் டெங்கு கொசுக்கள்! அச்சத்தில் கரூர் மக்கள்

          டெங்கு

ஒரு டி.வி விளம்பரத்தில், 'நான் வளர்கிறேன் மம்மி' என்று ஒரு சிறுவன் காம்ப்ளான் போஷாக்கு பற்றி சிலாகிப்பான். கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் உள்ள பிள்ளாப்பாளையம் அருகே உள்ள ரயில்வே கேட் அருகில், தண்ணீர் தேங்கியும், குப்பைகள் குவிந்தும் கொசுக்களை,  'நாங்க பேஷா வளர்கிறோம் மக்களே..' என்று குஷியாகச் சொல்லும் அளவுக்கு டெங்கு கொசுக்கள் ஓங்குதாங்காக வளர்வதாக பொதுமக்கள் குமுறுகின்றனர். அந்தப் பகுதி சாலையில், இரண்டு பக்கமும் உள்ள வாய்க்கால்களில் தண்ணீர் தேங்கி, கொசுக்கள் எக்கச்சக்கமாகப் பெருகிக் கொண்டிருக்கின்றன. குப்பைகள்வேறு மலைபோல குவிந்துகிடக்கின்றன.


 

இது சம்பந்தமாக நம்மிடம் பேசிய அந்தப் பகுதி மக்கள், "பிள்ளாப்பாளையத்தில் டெங்கு காய்ச்சல் சிலருக்கு பரவி இருக்கு. பலபேருக்கு மர்மக்காய்ச்சல் உருவாகி இருக்கு. ஏற்கெனவே பக்கத்தில் உள்ள லாலாப்பேட்டையில் இரண்டு பேருக்கு டெங்கு காய்ச்சல் வந்துச்சு. அதனால், இந்தப் பகுதிகளில் டெங்கு கொசுக்கள் அதிகம் உற்பத்தியாகின்றன. அதற்கு ஏற்றவாறு இதுபோல தண்ணீர் தேங்கி, அது வடிய முடியாத அளவுக்கு வாய்க்கால்கள் தூர்ந்துபோய் கிடக்கின்றன. இங்குள்ள மக்கள் படிப்பறிவு அற்றவர்கள்.

டெங்கு ஜூரம், சாதாரண ஜூரம் எது வந்தாலும், மளிகைக் கடையில் விற்கிற அனாசின் பைவ் ஹன்ட்ரடு மாத்திரையை வாங்கி முழுங்கிட்டு, போர்வையைப் போர்த்திக்கிட்டு தூங்கும் அளவுக்குதான் அவர்களுக்கு அறிவு இருக்கு. அதனால், டெங்கு ஜூரம் வந்தாக்கூட அவர்கள் அதை சாதாரணமாக நினைத்துவிட்டு, உயிருக்கு ஆபத்தைத் தேடிக் கொள்ளும் அளவுக்கு இருக்கிறார்கள். இந்தப் பகுதியில், அரசு எந்தவித டெங்கு காய்ச்சல் முன் நடவடிக்கையையும் எடுக்கவில்லை. நிலவேம்புக் கஷாயம்கூட கொடுக்கவில்லை. மக்களும், 'எந்தக் காய்ச்சல் வந்தாலும் மகமாயி குணமாக்கிடுவா'ன்னு மகமாயியை மட்டும் மருந்தா நினைக்குறாங்க.

இந்தச் சூழலில்தான், இந்த ரயில்வே கேட் அருகே தண்ணீர் தேங்கியும், குப்பைகள் குவிந்தும் பல ஆயிரம் டெங்கு கொசுக்களை உற்பத்திசெய்துகொண்டிருக்கிறது. இந்தப் பகுதியில், அதனால் மக்களுக்கு டெங்கு காய்ச்சல் ஏற்படுவதற்கு முன்பு, பொதுப்பணித்துறை அதிகாரிகள் தண்ணீர் தேங்கி நிற்கும் அந்த வாய்க்காலைத் தூர்வாரி, இனி மழைநீர் அங்கே தேங்காத நிலையை ஏற்படுத்த வேண்டும். அதேபோல, ஊராட்சி சார்பாக இரண்டு பக்கமும் குவிந்துகிடக்கும் குப்பைகளை உடனே அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். கூடவே, இந்தப் பகுதியில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மாவட்ட மருத்துவத்துறை எடுக்க வேண்டும். நிலவேம்புக் கஷாயம் வழங்கப்பட வேண்டும். இல்லைனா, போராட்டம் நடத்துவோம்" என்றார்கள் ஆக்ரோஷமாக!.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement