வெளியிடப்பட்ட நேரம்: 14:30 (12/10/2017)

கடைசி தொடர்பு:14:30 (12/10/2017)

குண்டர் சட்டம் ரத்துசெய்யப்பட்டும் தேர்வெழுத அனுமதி மறுப்பு : மாணவி வளர்மதி

டந்த ஜூலை மாதம் 12 -ம் தேதி, ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து துண்டுப்பிரசுரம் விநியோகித்ததற்காக ,மாணவி கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். அதன் பிறகு, அவர் மீது 17-ம் தேதி குண்டர் சட்டம் போடப்பட்டது. இதைக் காரணம் காட்டி, அவர் இதழியல் படித்துவந்த பெரியார் பல்கலைக்கழகம் அவரை இடைநீக்கம் செய்தது. இதனிடையே, ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி, வளர்மதி மீதான குண்டர் சட்டத்தை ரத்துசெய்து, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. தற்போது, வருகைப்பதிவேடு இல்லை என்று மாணவி வளர்மதியைத் தேர்வெழுத பெரியார் பல்கலைக்கழக நிர்வாகம் அனுமதி மறுத்துவருவதை எதிர்த்து, இன்று மாணவர் கூட்டமைப்பு இணைந்து, செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. 

வளர்மதி

இதில் பேசிய மாணவர் கூட்டமைப்பினர், ஏற்கெனவே இடைநீக்கம் செய்யப்பட்ட ஒருவர் தொடர்ந்த வழக்கில், உயர் நீதிமன்றம் ’இடைநீக்கம் செய்யப்பட்ட மாணவரின் இடைநீக்கம் செய்யப்பட்ட காலத்தை கணக்கிலெடுக்காமல், அதற்குப் பிறகான காலத்தில் அவருடைய வருகை எண்ணிக்கையைவைத்துத் தேர்வெழுத அனுமதிக்க வேண்டும்’ என்று தீர்ப்பளித்துள்ளதைக் குறிப்பிட்டு, வளர்மதி ஒரேயொரு நாள்தான் விடுப்பு எடுத்திருக்கிறார் என்பதால், அவர் தேர்வெழுதத்  தகுதி உடையவர்தான் என்றும், தமிழக அரசு மற்றும் காவல்துறையின் பொய்க்குற்றச்சாட்டை உயர்நீதிமன்றம் நிராகரித்த பிறகும் இப்படி அவர் தேர்வெழுத மறுக்கப்படுவதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தனர்.