சபாநாயகரை மிரட்டுவதா? - தினகரன் மீது 2 காவல்நிலையங்களில் புகார்!

சட்டப்பேரவை சபாநாயகர் தனபாலை மிரட்டும் வகையில் பேசியிருக்கும் டி.டி.வி. தினகரன்மீது, உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி அரக்கோணத்தில் 2 காவல்நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 


கடந்த 9-ம் தேதி, செய்தியாளர்களிடம் பேசிய அ.தி.மு.க. அம்மா அணியின் துணைப் பொதுச்செயலாளர் தினகரன், ’சபாநாயகரும் இந்த நாட்டின் குடிமகன்தான். பேரவைக்குள் வேண்டுமானால் அவருக்கு அதிகாரம்  இருக்கலாம். எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்க விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் முன்மாதிரி தீர்ப்பு இருக்கிறது. 18 எம்.எல்.ஏ-க்களைத் தகுதிநீக்கம் செய்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தால், சபாநாயகர் தனபாலை, யார் விட்டாலும் நான் விடப்போவதில்லை’ என்று பேசியிருந்தார். சபாநாயகர் தனபாலை மிரட்டுவது போல தினகரன் பேசியிருப்பதாக, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருந்தார். 

இந்த நிலையில், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த சபாநாயாகர் தனபாலை, தினகரன் மரியாதை குறைவாகவும் மிரட்டும் தொனியிலும் பேசியிருப்பதாக, அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி அரக்கோணம் நகரக் காவல்நிலையத்தில் அ.தி.மு.க-வினர் புகார் அளித்துள்ளனர்.  மேலும், தினகரன்மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, அரக்கோணம் கிராமியக் காவல்நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!