செழிப்பில் வலசைப் பாதைகள் ; சின்னாறில் குவிந்த அழகிய வண்ணத்துப்பூச்சிகள் !

ழை  நன்கு பெய்திருப்பதால், சின்னாறில் அபூர்வ வகை ஊதா இறகுகள்கொண்ட வண்ணத்துப்பூச்சிகள் தென்படத் தொடங்கியுள்ளன. அதேபோல, யானைகள் வலசைப் பாதையில் உள்ள நீர்நிலைகளும் நிறைந்துள்ளன. 

சின்னாறில் குவிந்த அழகிய பட்டர்ப்ளை

எதிர்பார்த்ததைவிட அதிகமாக, தென்மேற்குப் பருவமழை பொழிந்துள்ளது. தமிழகத்தின் வனப்பகுதிகள் செழிக்கத் தொடங்கியுள்ளன. கோவை மாவட்டம் ஆனைகட்டியில், இந்தக் காலத்தில்தான் வித விதமான வண்ணத்துப்பூச்சிகள் வருகை தரும். 2016-ம் ஆண்டு, வறட்சி காரணமாக கேரளத்திலிருந்து ஆனைகட்டிக்கு வண்ணத்துப்பூச்சிகள் வரத்து இல்லை. இதனால், இயற்கை ஆர்வலர்கள் வருத்தமடைந்திருந்தனர்.

வண்ணத்துப்பூச்சிகள் தென்படுவது, அந்தப் பகுதியின் செழிப்புக்கும் இதமான காலநிலைக்கும் அடையாளம் ஆகும். செப்டம்பர் முதல் டிசம்பர் வரை ஆனைகட்டிப் பகுதிக்கு அழகிய, விதவிதமான வண்ணத்துப்பூச்சிகள் வருகைதரும். பின்னர், இடம் பெயர்ந்துவிடும்.  2012-ம் ஆண்டு, அதிகபட்சமாக ஆனைகட்டிக்கு 4 லட்சம் வணத்துப்பூச்சிகள்  வந்திருந்தன. 

தற்போது , தமிழகத்தில் மழை ஓரளவுக்குப் பெய்திருப்பதால், இயற்கை ஆர்வலர்கள் வண்ணத்துப்பூச்சிகளின் வருகையை எதிர்பார்த்துக் காத்திருந்தனர். இந்நிலையில், சின்னாறில் அழகிய ஊதா வர்ண இறகு படைத்த வண்ணத்துப்பூச்சிகள் கூட்டம் கூட்டமாகத் தென்படத் தொடங்கியுள்ளன. 

நீர் நிறைந்து காணப்படும் மாவநல்லா தடுப்பணை

இதனால், இயற்கை ஆர்வலர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். விரைவில், ஆனைகட்டிக்கும் வண்ணத்துப்பூச்சிகள் வந்து குவியும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு மழை பொய்த்துப் போனதாலும் காலநிலை மாற்றத்தினாலும் வண்ணத்துப்பூச்சிகள் தமிழகத்துக்குள் இடம்பெயரவில்லை.

அதேபோல, தொடர் மழை காரணமாக கோவை, நீலகிரி மாவட்டத்தில் உள்ள யானை வலசைப் பாதைகளில் உள்ள தடுப்பணைகளில் நீர்  நிறைந்துள்ளன. இதனால், வன விலங்குகளின் தண்ணீர் பிரச்னையும் தீர்ந்துள்ளது. மேட்டுப்பாளையம், கக்கநல்லா, மாவநல்லா, முதுமலை, பண்டிப்பூர் ,சின்னாறு, மறையூர், வால்பாறை,சிறுவானி, ஆனைகட்டி, தெங்குமரஹாடா, சத்தியமங்கலம் , சிறியூர் வனப்பகுதியில் உள்ள நீர்நிலைகளில்  நீர் ததும்பிநிற்கின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!