வெளியிடப்பட்ட நேரம்: 15:37 (12/10/2017)

கடைசி தொடர்பு:15:37 (12/10/2017)

சந்தானத்துக்கு முன்ஜாமீன் கிடைக்குமா?: மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

பணம் கொடுக்கல் வாங்கலில் வழக்கறிஞர் பிரேம் ஆனந்த் என்பவர் தாக்கப்பட்ட வழக்கில் முன்ஜாமீன் கோரி நடிகர் சந்தானம் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம் நாளைக்கு ஒத்திவைத்தது. 

கட்டுமான நிறுவனம் ஒன்றை நடத்தி வரும் சண்முகசுந்தரம் என்பவருக்கும், நடிகர் சந்தானத்துக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கலில் பிரச்னை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் இருதரப்பினருக்கும் கைகலப்பு ஏற்பட்டதாகவும், அதில், சண்முகசுந்தரம் ஆதரவாளரான வழக்கறிஞர் பிரேம் ஆனந்த் என்பவரை சந்தானம் தாக்கியதாகவும் தகவல்கள் வெளியாகின. இதில், காயமடைந்த பிரேம் ஆனந்த், சென்னையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்றார். அதேபோல் சந்தானமும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகத் தெரிகிறது. இந்த சம்பவம் தொடர்பாக வளசரவாக்கம் போலீஸார், நடிகர் சந்தானத்தின் மீது 3 பிரிவுகளின்  கீழ் வழக்குப்பதிவு செய்தனர். சந்தானம் தரப்பிலும் போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. போலீஸார் வழக்குப் பதிவு செய்ததை அடுத்து நடிகர் சந்தானம், தலைமறைவாக இருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. 

இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் சந்தானம் தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் சந்தானத்துக்கு முன்ஜாமீன் கொடுக்க வழக்கறிஞர் பிரேம்ஆனந்த் தரப்பில் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. பிரேம் ஆனந்த் உடல்நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய போலீஸாருக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம் நாளைக்கு ஒத்திவைத்தது.