வெளியிடப்பட்ட நேரம்: 17:35 (12/10/2017)

கடைசி தொடர்பு:19:02 (12/10/2017)

டெங்கு விழிப்பு உணர்வுக்கு இடையே, கைகழுவப்படும் மருத்துவ சேவை!- என்ன செய்கிறது அரசு?

எடப்பாடி பழனிசாமி

காசநோய் தொடர்பான மருத்துவ சேவைப் பணிகளை தனியார் மருத்துவமனைகளிடம் ஒப்படைப்பது தொடர்பான ஒப்பந்தம், சென்னை மாநகராட்சி மற்றும் ரீச் எனப்படும் தனியார் தொண்டு நிறுவனத்துக்கு இடையே கடந்த 9-ம் தேதி போடப்பட்டுள்ளது.

உலக சுகாதார அமைப்பின் அதிகாரி செளம்யா முன்னிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் இடையே  பரிமாறிக்கொள்ளப்பட்ட இந்த ஒப்பந்தத்தின் விளைவால், எதிர்காலத்தில் முற்றாக பொதுசுகாதாரத் துறையின் பணிகள் தனியார்வசம் சென்றுவிடுவதோடு, தனிநபர் மருத்துவ சிகிச்சைக்கு தானே முழு பொறுப்பேற்கவேண்டிய அவலம் உருவாகும்" என எச்சரிக்கிறார்கள் சமுக ஆர்வலர்கள். 

ரவீந்திரநாத்இதுகுறித்து சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜி.ஆர் ரவீந்திரநாத்திடம் பேசினோம்.

"மலேரியா தொடர்பான மருத்துவத் திட்டங்கள் ஏற்கெனவே தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டுவரும் நிலையில், எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றியது போன்று காசநோய் தொடர்பான சேவைத் திட்டங்களும் தனியார்வசம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. அந்தவகையில், காசநோய் ஒழிப்புப் பணியில் தனது பொறுப்பைத் தட்டிக் கழித்திருக்கும் மாநகராட்சியின் இந்தச் செயல் கண்டனத்துக்குரியது” என பேசத் தொடங்கிய அவர் தொடர்ந்து, "உலக அளவில் ஆண்டுதோறும் காசநோய்க்கு பாதிக்கப்படுபவர்களில் 27 விழுக்காட்டினரும், காசநோயால் இறப்பவர்களில் 29 விழுக்காட்டினரும் இந்தியாவில்தான் உள்ளனர். இங்கு 2014-ல் இரண்டு லட்சத்து 20 ஆயிரம் பேர் காசநோயால் இறந்துள்ளனர். காசநோய் ஒழிப்புக்குப் போதிய நிதி ஒதுக்காததால் 2015-ல், இந்த எண்ணிக்கை நான்கு லட்சத்து 80 ஆயிரமாக அதிகரித்தது. காசநோய்க்கு சிகிச்சை பெறுவோரில் 20 லட்சம் பேர் தனியார் மருத்துவமனைகளில் அவர்களின் சொந்த செலவில் சிகிச்சை பெறுகின்றனர். 

இந்நிலையில், நோயாளிகளுக்குத் தரமான இலவச சிகிச்சையை அரசு மருத்துவத் துறை மூலம் வழங்காமல், தனியாரிடம் அதை ஒப்படைப்பது தனியார் கார்ப்பரேட் மருத்துவமனைகளை மறைமுகமாக ஊக்குவிக்கவே வகைசெய்யும். இந்த நடவடிக்கை காசநோயை ஒழிக்க உதவாது. தமிழகத்தில் கடந்த மாதம் சிறப்பு முகாம்களின் மூலம் 27 லட்சம் பேர் பரிசோதிக்கப்பட்டனர். அவர்களில் 3,100 பேருக்கு காசநோய் உறுதிசெய்யப்பட்டு, பொது சுகாதாரத்துறை மூலம் சிகிச்சை தரப்பட்டு வருகிறது. இப்படி சிறப்பாகச் செயல்படும் பொது சுகாதாரத்துறையை வலுப்படுத்தாமல் தனியாரை ஊக்குவிப்பது எந்தவகையில் நியாயம்? 

டெங்கு

ஒவ்வொரு குடிமகனுக்கும் மருத்துவ சேவை அளிக்கும் தன் கடமையை தட்டிக் கழிக்கும்படியான அரசின் இந்த நடவடிக்கை கார்ப்பரேட் நிறுவனங்கள் கொழுக்கவே உதவும். இதனால் பொது சுகாதாரத்துறை பலவீனமாகி, எதிர்காலத்தில் ஏழை, எளிய மக்கள் மிகப்பெரிய பாதிப்புக்கு உள்ளாவார்கள். அரசின் இந்த நடவடிக்கை ஏழை, எளிய மக்களின் நலன்களுக்கு எதிரானதாகும்.

மத்திய அரசின் நிர்பந்தத்தால், கார்ப்பரேட் மருத்துவ நிறுவனங்களை ஊக்குவிப்பதற்காக தமிழக அரசும் மேற்கொள்ளும் இந்த நடவடிக்கை அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானதும்கூட. ஆரம்பத்தில் இந்த சேவைகளுக்காக அரசு, தனியார் அமைப்புகளுக்கு தாராளமாக நிதியுதவி செய்யும். பிறகு சிறிது சிறிதாக அதைக் குறைத்து ஒரு கட்டத்தில் முற்றாக நிதியுதவியை நிறுத்திக்கொள்ளும். இதனால் இறுதியில் சிகிச்சை பெறுவோரிடமே சிகிச்சைக்கான செலவை தனியார் நிறுவனங்கள் முழுமையாக வசூலிக்கத் துவங்கும். இதனால் எதிர்காலத்தில் மருத்துவ சுகாதார வசதி முழுக்க தனியார்வசம் சென்றுவிடும் அபாயம் உள்ளது. 

போதிய நிதிவசதி இல்லாததால் ஏற்கெனவே டெங்கு, சிக்குன்குனியா, பன்றிக் காய்ச்சல், ஜப்பானிய மூளைக் காய்ச்சல், மலேரியா போன்ற நோய்களைக் கட்டுப்படுத்துவதிலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு தரமான சிகிச்சை வழங்குவதிலும் மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. தற்போது தமிழகத்தில் பல உயிர்களைப் பலிவாங்கும் டெங்குக் காய்ச்சலைத் தடுக்க முடியாமல் தமிழக அரசு திணறிவருவதற்கு மிக முக்கியக் காரணம், பொது சுகாதாரத்துறை இப்படி பலவீனப்படுத்தப்பட்டதுதான்.

எடப்பாடி பழனிசாமி

கடந்த 2015-ம் ஆண்டு, தமிழக அரசு சென்னையில் உள்ள தனியார் புற்றுநோய் மருத்துவமனைக்கு 120 கோடி ரூபாய் நிதி உதவி அளித்தது. இந்த தொகையைக் கொண்டு, பல அரசு மருத்துவக் கல்லூரிகளில் புற்று நோய்க்கென தனிப் பிரிவையே உருவாக்கி இருக்க முடியும். கடந்த ஐந்து ஆண்டுகளில் ரூ. 1,600 கோடியை முதல்வர் காப்பீடு முலம் தனியார் மருத்துவமனைகள் லாபமாக ஈட்ட, தமிழக அரசு உதவியுள்ளது. இந்த ரூ.1,600 கோடியில் எட்டு மருத்துவக் கல்லூரிகளை உருவாக்கி இருக்க முடியும். இப்படி அரசியலமைப்புச் சட்டம் அறிவுறுத்திய கடமையை மீறி மத்திய அரசின் நிர்பந்தத்தினால் மக்கள் வரிப்பணத்தை தனியார் அமைப்புகள் மற்றும் மருத்துவ நிறுவனங்கள் வளர்ச்சியடையும் வகையில் அரசு செலவிட்டு வருகிறது. தமிழக அரசு இத்தகைய போக்கை மாற்றிக் கொள்ளவேண்டும்” என முடித்தார்.

எடுப்பார் கைப்பிள்ளை அல்ல தமிழக அரசு என்பதை நிரூபிப்பாரா முதல்வர் எடப்பாடி?!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்