முதல்வர் பழனிசாமி மாவட்டத்தில் இன்று அடுத்தடுத்து 3 குழந்தைகள் பலி! | Dengue: 3 children died in Salem District

வெளியிடப்பட்ட நேரம்: 17:15 (12/10/2017)

கடைசி தொடர்பு:17:15 (12/10/2017)

முதல்வர் பழனிசாமி மாவட்டத்தில் இன்று அடுத்தடுத்து 3 குழந்தைகள் பலி!

தமிழக முதல்வர் எடப்பாடியின் சொந்த மாவட்டமான சேலம் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் பல குழந்தைகள் மரணம் அடைந்து வருவது அன்றாடம் தொடர் கதையாகி வருகிறது. தமிழகத்திலேயே டெங்கு காய்ச்சலுக்குப் பலியானோர் எண்ணிக்கை சேலத்தில் அதிகம். நோய்த் தடுப்பு நடவடிக்கையில் இன்னும் சுணக்கம்காட்டி வருகிறார்கள். கொத்துக் கொத்தாய் குழந்தைகள் மரணம் அடைந்து வருவதால் மக்கள் கொதிப்படைந்து இருக்கிறார்கள்.

சேலம் சித்தரகோவில் செல்லும் வழியில் உள்ள நாயக்கன்பட்டியைச் சேர்ந்த வெங்கடாசலத்தின் 6 வயது மகள் இலக்கியா டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருந்தார். இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார்- ஜெயந்தி தம்பதிக்கு அபிநயா என்ற மகளும் அபிஷேக் என்ற மகனும் இருக்கிறார்கள். அபிநயாவுக்கு 9 வயது. 4 நாள்களுக்கு முன்பு காய்ச்சல் இருந்து வந்ததையடுத்து தேக்கம்பட்டியில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பார்த்து வந்தார்கள். அதையடுத்து ஓமலூருக்கு வந்தார்கள். நேற்று உயர் சிகிச்சைக்காக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு வந்தார்கள். சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 3:30 மணிக்கு அபிநயா மரணம் அடைந்தார்.

சேலம் கூட்டாத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் முத்துசாமி- சத்யா தம்பதியினர் 8 வயது மகள் கீர்த்தி. காய்ச்சல் காரணமாக கடந்த 10 நாள்களுக்கு முன்பு சேலம் அரசு மோகன்குமாரமங்கலம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 7-ம் தேதி டெங்கு காய்ச்சல் என்று கண்டறியப்பட்டது. அதையடுத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை 9:30 மணிக்கு மரணமடைந்தார். அடுத்தடுத்து குழந்தைகள் மரணம் அடைந்ததை அடுத்து அவர்களின் உடல்களை பெற்றோர்கள் எடுத்துச் செல்லும்போது உருண்டுபுரண்டு கத்தி கதறி அழுதுகொண்டு இந்த ஆட்சியாளர்களையும் அரசாங்கத்தையும் சாபம்விட்டுச் செல்லும்போது மிகுந்த வேதனையாக இருக்கிறது.

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் 500-க்கும் மேற்பட்டவர்கள் காய்ச்சல் காரணமாகச் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் 250-க்கும் மேற்பட்டவர்கள் குழந்தைகள். 82 பேருக்கு டெங்கு அறிகுறி இருப்பதாகக் கூறப்படுகிறது.