வெளியிடப்பட்ட நேரம்: 17:55 (12/10/2017)

கடைசி தொடர்பு:17:55 (12/10/2017)

’வடகிழக்குப் பருவமழைக்கான அறிகுறி தோன்றவில்லை’: சென்னை வானிலை ஆய்வு மையம்

வடகிழக்குப் பருவமழை துவங்குவதற்கான அறிகுறி தென்படவில்லை என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


தமிழகம் முழுவதும் தென்மேற்குப் பருவமழைக் காலத்தில் நல்ல மழைப் பொழிவு கிடைத்துள்ள நிலையில், வடகிழக்குப் பருவமழை வரும் 20-ம் தேதி தொடங்கும் என்று கணிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், மத்திய கிழக்குக் கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அநேக இடங்களில் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்துள்ளது.

அடுத்த 2 நாள்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கும், மேற்கு மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்பு உண்டு. சென்னையில் அடுத்த இரண்டு நாள்களில் ஓரிருமுறை மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவித்தார். தென்மேற்குப் பருவமழை முழுவதுமாக விலகவில்லை என்று கூறிய அவர், 4-5 நாள்களில் படிப்படியாக விலகும் என்றும்  கூறினார். வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கான அறிகுறி இன்னும் தென்படவில்லை என்றும் வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.