பிரபாகரன் படுகொலை பற்றி இப்போது ஏன் பேசினார் ராகுல்?!

ராகுல் காந்தி

விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் மற்றும் அவரின் 12 வயது மகன் பாலச்சந்திரன் ஆகியோர் கொல்லப்பட்ட சம்பவம் வருத்தத்துக்குரியது என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

பிரபாகரனும், பாலச்சந்திரனும் 2009-ம் ஆண்டு கொல்லப்பட்டனர். இலங்கையின் இறுதிக்கட்ட போரின்போது அவர்கள் படுகொலை செய்யப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின. அந்தப் படுகொலை சம்பவங்கள் அரங்கேறி எட்டு ஆண்டுகளுக்குப் பின்னர், தற்போது காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி வருத்தம் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இறுதிக்கட்டப் போருக்கு இந்தியா ஆயுத உதவி செய்தது. 2009-ம் ஆண்டு நடைபெற்ற போரின்போது, இந்தியாவில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் இருந்தது. பிரதமராக மன்மோகன் சிங் பதவி வகித்தார். 

இந்த நிலையில், குஜராத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி மாணவர்களிடையே உரையாற்றினார். 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி மிக மோசமான தோல்வியைத் தழுவியது. அதற்குக் காரணம், அண்டை நாடான இலங்கைக்கு, விடுதலைப்புலிகள் அமைப்பை வீழ்த்துவதற்கு மத்திய அரசு உதவியதுதான் முக்கியக் காரணம் என்று பரவலாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதுபோன்ற சூழலில், "பிரபாகரனையும், அவரின் மகனையும் கொலை செய்த சம்பவம் குற்ற உணர்வை ஏற்படுத்துவதாகவும், அது வருத்தத்துக்குரியது" என்றும் ராகுல் காந்தி கூறியிருக்கிறார். அவர், "என் தந்தை ராஜீவ் காந்தி தமிழீழ விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டார். ஆனால், பிரபாகரன் கொல்லப்பட்டதும் நான் அவர் உடலைப் பார்த்தேன். ஏன் இவ்வாறு நடந்தது என்று நினைத்தேன். இந்த சம்பவம் மிகுந்த கவலையைக் கொடுத்ததுடன், குற்ற உணர்வை அளித்தது. நான் என் உணர்வுகளை பிரியங்காவிடம் தெரிவித்தேன். அவரும் பிரபாகரன் மற்றும் அவரின் மகன் உடல்களைப் பார்த்து என்னிடம் கவலை தெரிவித்தார்" என்றார்.

குஜராத் மாநிலத்தில் விரைவில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி, பி.ஜே.பி-யும், காங்கிரசும் அந்த மாநிலத்தில் இப்போதே தீவிர தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கியுள்ளனர். இரு கட்சிகளும் பரஸ்பர குற்றச்சாட்டுகளைத் தெரிவித்து வருகிறார்கள்.  

2009-ம் ஆண்டு மீண்டும் ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்ட ஐக்கிய முற்போக்குக் கூட்டணி, 2014-ல் மிகப்பெரும் தோல்வியைச் சந்தித்தது. இலங்கை அரசுக்கு ஆயுத உதவி மற்றும் போர் உத்தி உள்ளிட்ட உதவிகளை வழங்கி, விடுதலைப்புலிகள் அமைப்பின் வீழ்ச்சிக்கு காங்கிரஸ் தலைமையிலான அரசு காரணமாக அமைந்தது என்று பரவலான குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வந்தன. எனினும். தற்போதைய பி.ஜே.பி. அரசும் தொடர்ந்து இலங்கை அரசுடன் நட்புறவையே வளர்த்து வருகிறது.

"பிரபாகரன், அவரின் மகன் பாலச்சந்திரன் படுகொலை சம்பவம் குறித்து திடீரென்று ராகுல் காந்தி பேச வேண்டிய அவசியம் ஏன்?" என்ற கேள்வியும் எழாமல் இல்லை. குஜராத் மாநிலத் தேர்தல் மட்டுமல்லாது, 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கும் காங்கிரஸ் இப்போதே ஆயத்தமாகி வருகிறது என்பதையே ராகுலின் அண்மைக்கால நடவடிக்கைகள் வெளிப்படுத்துகின்றன.

மேலும், பிரியங்கா காந்தியை முன்னிலைப்படுத்தும் முயற்சிகளும் காங்கிரஸ் கட்சியில் அண்மைக்காலமாக வேகமெடுத்து வருகிறது. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன், பிரியங்கா தீவிர அரசியலில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் முன்னோட்டமாகவே ராகுல் காந்தி, தன் பேச்சில் பிரியங்காவையும் சுட்டிக்காட்டிப் பேசியுள்ளார் என்று தெரிகிறது.

காங்கிரஸ் கட்சியின் இத்தகைய வியூகங்கள் பலிக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!