தமிழகத்தை உலுக்கும் டெங்கு அரசியல்! பரபரக்கும் எதிர்க்கட்சிகள் | Dengu politics in tamilnadu

வெளியிடப்பட்ட நேரம்: 07:53 (13/10/2017)

கடைசி தொடர்பு:10:42 (13/10/2017)

தமிழகத்தை உலுக்கும் டெங்கு அரசியல்! பரபரக்கும் எதிர்க்கட்சிகள்

ஸ்டாலின் டெங்கு

“டெங்குக் காய்ச்சலால் உயிரிழப்பு ஏற்படக் கூடாது என்ற உறுதியோடு தமிழக அரசு செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. டெங்குவை ஒழிப்பதற்காக, தமிழகம் முழுவதும் 25,000 சுகாதாரப் பணியாளர்கள், 3,500 ஹெல்த் இன்ஸ்பெக்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். 250-க்கும் மேற்பட்ட நடமாடும் மருத்துவமனைகளும் அமைத்துள்ளோம். சாதாரண காய்ச்சலோடு மருத்துவமனைக்கு வருபவர்களுக்கும் டெங்கு பரிசோதனைகள் செய்யப்பட்டு, பரிபூரண நலத்தோடு வீடுகளுக்கு அனுப்பப்படுகிறார்கள். தமிழ்நாட்டில் டெங்குவால் 10 பேர் மட்டுமே இறந்திருக்கிறார்கள். 15 பேர் தீவிர சிகிச்சையில் இருக்கிறார்கள். இதுபோல் செயல்பட்டால் இன்னும் 10 நாள்களில் டெங்குக் காய்ச்சலை முழுமையாக ஒழித்துவிடலாம்” என ஆகஸ்ட் 9-ம் தேதி சேலத்தில் பேட்டியளித்தார் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர். அவர் சொல்லி இரண்டு மாதங்கள் கடந்துவிட்டன. ஆனால், நிலைமை கட்டுக்கடங்காமல் மோசமாகப் போய்க்கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் டெங்கு பாதிப்பு!

“தமிழகத்தில் பதினோராயிரம் பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். 40 பேர் இறந்திருக்கிறார்கள்” என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவிக்கிறார். அவர் கணக்கின்படி, தமிழகத்தில் டெங்குவால் பாதிக்கப்பட்ட விவரங்கள் இவை. தமிழகத்தில் சுகாதாரத்துறையைப் பொறுத்தவரை, மொத்தம் 43 மாவட்ட சுகாதார அலகாகப் பிரித்திருக்கிறார்கள். கடந்த 10-ம் தேதி நிலவரப்படி, தூத்துக்குடி மாவட்டம் முதலிடத்தில் இருக்கிறது. தூத்துக்குடியில் 1,134 பேர் டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அடுத்து சங்கரன்கோவில் பகுதியில் 1,039 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். கோயமுத்தூர் மாவட்டத்தில் பாதிப்பு 883 பேருடன் மூன்றாம் இடத்திலும், சென்னை மாநகராட்சி (880 பேர்) நான்காம் இடத்திலும், கன்னியாகுமரி (742 பேர்) ஐந்தாம் இடத்திலும் இருக்கின்றன. கள்ளக்குறிச்சி (99), விழுப்புரம் (96), வேலூர் (79), ராமநாதபுரம் (74), செய்யார் (72), பெரம்பலூர் (71), அறந்தாங்கி (66), பூந்தமல்லி (65), நாகப்பட்டினம் (58), நீலகிரி (55), திண்டுக்கல் (51), கரூர் (48), சிவகாசி (45), திருப்பட்டூர் (32), திருவாரூர் (29), அரியலூர் (25), சிவகங்கை (23), விருதுநகர் (11) ஆகிய மாவட்டங்களில் நூற்றுக்கும் குறைவானவர்களே டெங்குவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என தமிழக அரசின் கணக்கெடுப்பு சொல்கிறது. சுகாதாரத்துறையின் நெருக்கடி காரணமாக, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களுக்கு வைரஸ் காய்ச்சல் என்றே சொல்கிறார்கள். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களையும் கணக்கில் கொண்டால், தமிழகத்தில் நாற்பதாயிரத்துக்கும் மேற்பட்டோர் டெங்குவால் பாதிக்கப்பட்டிருப்பது புலப்படும்.

அமைச்சரின் வெற்று அறிவிப்புகள்! 

கடந்த ஜூலை மாதம் சட்டமன்றத்தில் டெங்கு குறித்து தி.மு.க. எம்.எல்.ஏ. எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பினார். அதற்குப் அன்புமணி டெங்குபதிலளித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர், "டெங்குக் காய்ச்சல் தொடர்பாக மருத்துவத்துறை இயக்குநர்களுடன் சேர்ந்து, நானும் பல்வேறு இடங்களில் ஆய்வுசெய்து வருகிறேன். டெங்குக் காய்ச்சலுக்குத் தேவையான மருந்துகள் போதிய அளவுக்கு கையிருப்பில் உள்ளன. எனவே, மக்கள் டெங்குக் காய்ச்சல் குறித்து அச்சமடையத் தேவையில்லை" என்று பதிலளித்தார். எனினும், டெங்குவால் தமிழகத்தில் தொடர்ந்து உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. நிலவேம்புக் கஷாயம் கொடுப்பது, மருத்துவமனைகளை ஆய்வுசெய்வது, கலந்தாய்வுக் கூட்டம் நடத்துவது என தமிழகம் முழுவதும் அமைச்சர் விஜயபாஸ்கர் சுற்றி வருகிறார். 'வியாழக்கிழமைதோறும் டெங்குக் கொசு ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப்படும்' என்றார். கடந்த சில நாள்களுக்கு முன் 'கொசு இல்லா இல்லம்' திட்டத்தைத் தொடங்கி வைத்தார். ஆனாலும், நாளுக்குநாள் டெங்கு பிரச்னை அதிகரித்து வருகிறதே தவிர, ஓய்ந்தபாடில்லை. 'டெங்குவைத் தடுக்க தமிழக அரசு சரியான நடவடிக்கை எடுக்கவில்லை' என தெரிவித்து எதிர்க்கட்சிகள் போராட்டங்களில் ஈடுபடத் தொடங்கின. 

களத்தில் குதித்த எதிர்க்கட்சிகள்!

"டெங்குவைப் பற்றி ஆட்சியாளர்களுக்குத் துளிகூட கவலையில்லை. வருமானவரித் துறையிடமிருந்தும், ஊழல் புகாரிலிருந்தும் எப்படித் தப்பித்துக்கொள்வது என்பதில் மட்டும்தான் கவனம் இருக்கிறது'' என்று எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி வருகிறார். முன்னாள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த அன்புமணி ராமதாஸ், “தமிழகத்தில் 11,500 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். 30 பேர் இறந்திருக்கிறார்கள் என்கிறார் அமைச்சர். ஆனால், 30 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 200 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இதையெல்லாம் சுகாதாரத்துறை அமைச்சர் மறைக்கிறார். டெங்குக் காய்ச்சலைக் கட்டுப்படுத்துவதில் இந்த அரசு தோல்வியடைந்து விட்டது” என்றார். 

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், தமிழகம் முழுவதும் டெங்குவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரில் சென்று உதவி செய்ய தன் கட்சித் தொண்டர்களை அனுப்பி இருக்கிறார். கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த தோழர்களும், தெருமுனைகள் தோறும் விழிப்புஉணர்வு பிரசாரத்தை தொடங்கி விட்டார்கள்.

டெங்கு விஜயபாஸ்கர்

நெருக்கடி நிலையில் தமிழக அரசு!

டெங்குவைக் கட்டுப்படுத்தவேண்டி அறிக்கைகள் ஒருபக்கம், களப்பணி இன்னொரு பக்கம் என எதிர்க்கட்சிகளெல்லாம் களத்தில் குதித்துவிட்டன. மக்கள் கூடும் இடங்களிலெல்லாம் அவர்கள் நிலவேம்பு கஷாயம் கொடுக்கத் தொடங்கி விட்டார்கள். இது ஆளும் கட்சிக்கு மிகப்பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால், டெங்குவைக் கட்டுப்படுத்த சுகாதாரத்துறை அமைச்சர், செயலாளருக்கு நெருக்கடி கொடுக்கிறார். சுகாதாரத்துறை அதிகாரிகள், தங்களுக்கு கீழ் உள்ளவர்களிடம் நெருக்கடி கொடுக்கத் தொடங்கிவிட்டார்கள். கல்லூரிகளிலும் பள்ளிகளிலும் விழிப்புஉணர்வுப் பேரணி நடத்துகின்றனர்.

காலையில் மீட்டிங்… மாலையில் ரிப்போர்ட்!

சுகாதாரத்துறை அலுவலகங்களில் உள்ளவர்கள், மாவட்ட வாரியாக, மண்டலவாரியாக என அடிக்கடி மீட்டிங் போட்டு சுகாதாரப் பணியாளர்களுக்கு அழுத்தம் தர ஆரம்பித்து விட்டார்கள். வார்டு வாரியாக பாதிக்கப்பட்டவர்கள், ஏரியா வாரியாக பாதிக்கப்பட்டவர்கள், இன்றைக்கு மருத்துவமனையில் சேர்ந்தவர்கள் என தனித்தனியாக லிஸ்ட் கேட்டு ஊழியர்களுக்கு அழுத்தம் தர ஆரம்பித்து விட்டார்கள். "தினமும் காலை 8 மணிக்கே வரவேண்டிய நிலை உள்ளது. இரவு எட்டு மணிக்குதான் அலுவலகத்தை விட்டு கிளம்புகிறோம். சில நேரங்களில் 9 மணியை கடந்துதான் வீட்டுக்குக் கிளம்புகிறோம். போதிய அளவில் சுகாதாரப் பணியாளர்கள் இல்லை. விடுமுறை நாள்களிலும் பணியாற்ற வேண்டிய சூழல் உள்ளது" என புலம்புகிறார்கள் சுகாதாரத் துறை ஊழியர்கள்.

உள்ளாட்சித் தேர்தலும்… டெங்குவும்!

உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாததால் தெருக்களில் தேங்கி நிற்கும் கழிவுகளை அகற்றவோ, சுத்தப்படுத்தவோ போதிய அளவில் நடவடிக்கை எடுப்பதில்லை. மேலும், கால்வாய் தூய்மைப்படுத்தும் பணியும், கொசு ஒழிப்புப் பணியும் ஒழுங்காக மேற்கொள்ளப்படுவதில்லை. உள்ளாட்சி பிரமுகர் இருந்தால், மக்கள் அவரைக் கேள்வி கேட்பார்கள். “ஊழல் ஒருபக்கம் நடந்தாலும், தூய்மையின் காரணமாக டெங்கு ஓரளவு கட்டுக்குள் வந்திருக்கும். டெங்கு நடவடிக்கை எடுப்பதாகச் சொல்லி அதிகாரிகளும், ஆளும் கட்சியினரும் கூட்டு கொள்ளையடிக்கிறார்கள். இப்படி இருக்க, டெங்கு எப்படி தமிழகத்தை விட்டுப் போகும்" என பொதுமக்கள் கொதிக்கத் தொடங்கி விட்டார்கள். இந்த நிலையில், பொதுமக்களின் அனுதாபங்களை அறுவடை செய்ய எதிர்க்கட்சிகள் களத்தில் குதித்து விட்டன.

எதிர்க்கட்சிகள், பொதுமக்கள், துப்புரவுப் பணியாளர்கள் என அனைவரின் கோபத்துக்கும் ஆளாகி இருக்கிறது தமிழக அரசு!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்