கன்னியாகுமரிக்குள் அத்துமீறி நுழையும் கேரள மாநிலக் கழிவுகள்..!

கேரளா மாநிலத்திலிருந்து இறைச்சிக் கழிவுகள், மருத்துவக் கழிவுகள் உள்பட அனைத்து கழிவுகளும் குமரி மாவட்டம் வழியாகத் தமிழகத்துக்குக் கொண்டுவரப்பட்டு நடமாட்டமில்லாத இடங்களில் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் அந்த இடத்தில் சுகாதாரக்கேடு ஏற்பட்டு பல்வேறு நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே இதைத் தடுக்க சோதனைச் சாவடிகளில் தீவிரமாகக் கண்காணிக்க ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கழிவுகளுடன் வாகனங்கள் மாவட்டத்துக்குள் வருவது குறையவில்லை இப்படி வரும் வாகனங்களை அதிகாரிகள் தனிப்படை போலீஸார் மீண்டும் கேரளா எல்லையில் கொண்டு விடுகின்றனர்.

நேற்று அதிகாலை 4.30 மணியளவில் கொல்லங்கோடு காவல் நிலைய எல்லை வழியாகக் கழிவுகளுடன் 3 வாகனங்கள் வந்தன. இதில் 2 வாகனங்களைப் பொதுமக்கள் சிறைபிடித்தனர் .ஒரு வாகனம் தப்பி மாவட்டத்துக்குள் சென்றுவிட்டது. பிடிபட்ட 2 வாகனங்களையும் பொதுமக்களும் தனிப்பிரிவு போலீஸார் சேர்ந்து மாவட்ட எல்லையில் விட்டனர். ஆனால், அதில் ஒரு வாகனம் மற்றொரு சோதனைச்சாவடி வழியாக மீண்டும் வந்தது. அதை அடையாளம் கண்ட பொதுமக்கள் அந்த வாகனத்தைச் சுற்றி வளைத்து மடக்கினர். லாரியில் இருந்த ஓட்டுநர் குமரி மாவட்டத்தில் உள்ள ஒரு போலீஸ் ஆய்வாளரின் தம்பி எனக் கூறியுள்ளார். இதனால் அங்கு வந்த போலீஸார் அந்த வாகனத்தைப் பறிமுதல் செய்யவோ மீண்டும் கேரளாவுக்கு திருப்பி அனுப்பவோ தயங்கினர். இதையடுத்து பொதுமக்கள் அந்த வாகனத்தை குமரி எல்லையில் கொண்டு விட்டுவிட்டனர். கேரளாவிலிருந்து கழிவுகளுடன் வரும் வாகனங்களைப் பிடித்து கேரளா எல்லையில் விட்டால் மீண்டும் வேறு வழியாகத் திரும்பி வருகிறது. அந்த வாகனத்தைப் பறிமுதல் செய்தால் காவல் நிலையம் பகுதியில் நிறுத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால் அந்தப் பகுதி மக்கள் கடும் அவதி அடைகின்றனர். எனவே கழிவுகளுடன் வரும் வாகனங்களைப் பறிமுதல் செய்யும்போது கழிவுகளைக் கொட்டிவிட்டு வாகனத்தைப் பறிமுதல் செய்ய வேண்டும். இதற்குப் போதுமான இடவசதி ஏற்படுத்த வேண்டும். மேலும் இந்த வாகனங்களில் உள்ள கழிவுகளைக் கொட்டி புதைக்க மாவட்ட ஆட்சியர் சிறப்பு அனுமதி அளிக்க வேண்டும். இவ்வாறு செய்தால் கழிவுகளைக் கொண்டு வருவது தடுக்கப்படும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!