டாஸ்மாக் கடைக்குச் சென்ற மதுபானங்கள் வழியில் கொள்ளை..!

நாகர்கோவில் டாஸ்மாக் குடோன் அருகே நின்ற லாரியில் ஒன்றரை லட்சம் மதிப்பிலான மதுவகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. நாகர்கோவில் கோணம் பகுதியில் டாஸ்மாக் குடோன் செயல்பட்டுவருகிறது. டாஸ்மாக் தலைமை அலுவலகமும் அங்குதான் உள்ளது. இந்தக் குடோனுக்குள் மதுவகைகள் வைப்பதற்குப் போதிய இடவசதி இல்லை. இதனால் சென்னை, கோவை போன்ற பல பகுதிகளில் இருந்து லாரிகளில் கொண்டு வரப்படும் மது பாட்டில்கள் பல வாரங்கள் காத்திருந்து குடோனில் இறக்கப்படும். கடந்த 5-ம் தேதி சென்னை மதுராந்தகத்தில் இருந்து கோணத்தில் உள்ள குடோனுக்கு மது வகைகள் வந்துள்ளன. குடோனில் இடம் இல்லாததால் மது பாட்டில்கள்  லோடு, கோணம் ரோட்டில் லாரியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

திடீரென நேற்று லாரி டிரைவர் மணிகண்டன் பார்க்கும்போது தார்பாய்கள் கிழிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. உடனே, அவர் லாரி உரிமையாளர் சரவணனுக்குத் தகவல் கொடுத்துள்ளார். சரவணன் வந்து தார்பாயை அகற்றிவிட்டுப் பார்த்தபோது மொத்தம் ஒன்றறை லட்சம் மதிப்பிலான மது பாட்டில்கள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து சரவணன் மாவட்ட எஸ்.பி.யிடம் புகார் அளித்தார். உடனே ஆசாரிபள்ளம் போலீஸார் விசாரணை நடத்த வேண்டும் என்று மாவட்ட எஸ்.பி உத்தரவிட்டார். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மதுவகைகள் சென்னையில் இருந்து வரும்போதே கொள்ளையடிக்கப்பட்டு விட்டதா? இல்லை என்றால் நாகர்கோவிலில் வைத்து கொள்ளையடிக்கப்பட்டதா? என்று போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!