வெளியிடப்பட்ட நேரம்: 23:00 (12/10/2017)

கடைசி தொடர்பு:23:00 (12/10/2017)

திருப்பூரில் டெங்குக் காய்ச்சலால் சிறுமி மருத்துவமனையில் பலி! தொடரும் மரணங்கள்

திருப்பூர் மாவட்டம் மங்கலத்தை அடுத்துள்ள புக்கிலிபாளையம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருபவர் செல்வராஜ். பின்னலாடைத் தொழிலாளியான இவருக்கு சவுந்தர்யா என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். செல்வராஜின் குழந்தைகள் மூவருமே மங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து வந்த நிலையில், செல்வராஜின் இரண்டாவது மகளான சண்முகப்பிரியா கடந்த வாரம் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார். எனவே, சிறுமியை உடனடியாக மங்கலம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்திருந்தனர்.

அங்கு காய்ச்சல் குணமடையாததால்,  திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு சிறுமியை அழைத்துச் சென்றிருக்கிறார்கள். பின்னர் அங்கும் சண்முகப் பிரியாவின் உடலில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாததால், மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அனுமதித்திருந்தனர். அங்கு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்த சிறுமி சண்முகப் பிரியா சிகிச்சை பலனளிக்காமல் மருத்துவமனையிலேயே உயிரிழந்தார்.