வெளியிடப்பட்ட நேரம்: 23:30 (12/10/2017)

கடைசி தொடர்பு:11:36 (13/10/2017)

பருவத்துக்கு ஏற்ற விதைகள் இல்லை..! வேளாண்மைத் துறையைக் குற்றம்சாட்டும் விவசாயிகள் சங்கம்

தாமதமாக வந்த தண்ணீர். பருவத்திற்கு விதை கிடைக்காமல் விவசாயிகள் அவதி

மிக நீண்ட எதிர்பார்ப்புக்கு பிறகு தற்பொழுதுதான் காவிரி டெல்டா மாவட்டங்களின் ஆறுகளில் தண்ணீர் வரத் தொடங்கியுள்ளது. இதனால் விவசாயிகள் மிகுந்த ஆர்வத்தோடு சம்பா நெல் சாகுபடிக்கான பணிகளைத் தொடங்க ஆயத்தமாகியுள்ளார்கள். ஆனால் இதற்கு ஏற்ற விதை கிடைக்காததால் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளார்கள். வேளான்மைத் துறையின் பொறுப்பற்ற தன்மையினால் தான் தங்களுக்கு இந்த இக்கட்டான நிலை உருவாகியுள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகிறார்கள்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் துணைத் தலைவர் சுகுமாறன், ‘செப்டம்பர் 15 தேதிக்குள் தண்ணீர் கிடைத்து, விதைப்பு பணிகள் நிறைவடைந்தால் தான் வழக்கமான சம்பா நெல் சாகுபடியானது, வெற்றிகரமாக அமையும். அதற்கு மத்திய கால மற்றும் நீண்டகால வயதுடைய நெல் ரகங்கள் பொருத்தமாக இருக்கும். ஆனால் மிக தாமதமாக தற்பொழுதுதான் ஆறுகளில் தண்ணீர் வரத் தொடங்கியுள்ளது.

இதில் பின்பட்ட சம்பா தான் மேற்கொள்ள முடியும். இதற்கு 120 நாள் வயதுடைய குறுகிய கால நெல் ரகங்கள் தான் பொருத்தமானதாக இருக்கும். பனி மற்றும் கன மழைக்கு முன்பாகவே பூ பூக்கும் பருவம் நிறைவடைந்துவிடும். ஆனால் வேளாண் விரிவாக்க மையங்களில் 135 முதல் 140 நாள் வயதுடைய மத்தியக் கால நெல் ரகங்களின் விதைகள் மட்டுமே விற்பனைக்குத் தயாராக உள்ளது. இதனை சாகுபடி செய்தால் பூ பூக்கும் தருணத்தில் பனி மற்றும் கன மழை ஏற்பட்டு கடுமையான பாதிப்புகளைச் சந்திக்க நேரும். வேளாண் துறையினர் முன் கூட்டியே இதனை யோசித்து ஆக்கப்பூர்வமாக செயல்பட்டிருக்க வேண்டும். விவசாயிகளிடமாவது ஆலோசனை செய்திருக்க வேண்டும்' என்று தெரிவித்தார்.