Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

திருப்பூரில் பிரபல தொழிலதிபர் தற்கொலைக்கு கடன் தொல்லை காரணமா?

Tiruppur: 

திருப்பூரின் பிரபல தொழில் நிறுவனங்களில் ஒன்றான எஃப் & எஃப் பின்னலாடை ஏற்றுமதி நிறுவனத்தின் உரிமையாளர், சீனிவாசன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம், தொழில் துறையினர் மத்தியில் மிகப்பெரும் பதற்றத்தை உண்டாக்கியிருக்கிறது. கடந்த செவ்வாய்க்கிழமை இரவு, வீட்டில் வழக்கம்போல தூங்கச் சென்ற சீனிவாசன், அடுத்த நாள் காலை தன் படுக்கையறையில் உயிரற்றுக் கிடந்தார்.

திருப்பூர் வேலம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவருடைய மனைவி மோகனஸ்ரீ. இத்தம்பதிக்கு பூஜா என்ற மகளும், ஸ்ரீநாத் என்ற மகனும் இருக்கிறார்கள். திருப்பூரில், ஆறு இடங்களில் சீனிவாசனுக்குச் சொந்தமான பனியன் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. திருப்பூரின் ஏற்றுமதித் துறையில் மிகப்பெரிய அளவில் பெயர்பெற்ற சீனிவாசன், திடீரென தற்கொலைசெய்துகொண்டது பற்றி தொழிற்துறையைச் சார்ந்த அவரது நண்பர்கள் சிலரிடம் விசாரித்தோம்.

''சமீபத்தில், சீனிவாசன் தன் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட ரூபாய் 15 கோடி மதிப்பிலான பின்னலாடை சரக்குகளை விமானம்மூலம் வெளிநாட்டுக்கு அனுப்பியிருக்கிறார். ஆனால் அங்கு,  இவர் அனுப்பியிருந்த ஆடைகள் மதிப்பு இழந்துவிட்டதாகக் கூறி, சம்பந்தப்பட்ட வர்த்தகர் திருப்பி அனுப்பியதால், சீனிவாசனுக்கு மிகப்பெரிய அளவில் பண நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது. சீனிவாசனுக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு இந்தச் சம்பவம்தான் மிக முக்கியக் காரணமாகவும் இருந்திருக்கிறது. இதனால் கோடிக்கணக்கில் கடன் உண்டாகியிருந்த நிலையில், மத்திய பா.ஜ.க அரசின் சமீபத்திய பொருளாதார நடவடிக்கையாக ஏற்றுமதிக்கு வழங்கப்படும் ஊக்கத் தொகை, 7.5 சதவிகிதத்தில் இருந்து  2 சதவிகிதமாகக்  குறைக்கப்பட்டது, சீனிவாசனை மேலும் கடன் தொல்லையில் திணறவைத்திருக்கிறது.

கடுமையான கடன் நெருக்கடியில் சிக்கித் தவித்த சீனிவாசன், அதை உடனடியாக சமாளிப்பதற்காக கர்நாடக மாநிலத்தில் உள்ள அவரின் சாயப்பட்டறையை விற்பனைசெய்ய முயற்சித்திருக்கிறார். ஆனால் அதுவும் முடியாமல் போனதால், மேலும் மனமுடைந்துபோகும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது. தற்போது தீபாவளி சீசனும் நெருங்கிவிட, சீனிவாசனுக்கு கடன் கொடுத்த பலரும் தொடர்ச்சியாக நேரிலும், தொலைபேசியிலும் பணத்தைக் கேட்டு மிரட்டிய வண்ணம் இருந்ததால், வேறு வழி இன்றி தற்கொலைசெய்துகொள்ளும் முடிவை நோக்கி அவர் தள்ளப்பட்டுவிட்டதாகவும், அவருக்கு ரூபாய் 40 கோடி வரை கடன் இருப்பதாகவும் தெரிவித்தனர்.

பொதுவாகவே திருப்பூர் பின்னலாடைத் துறைக்கு தீபாவளிப் பண்டிகை மாதம்தான் மிக முக்கியமான வணிகம் நடைபெறும் காலகட்டம். ஆனால், தற்போதைய மத்திய அரசின் பண மதிப்பு இழப்பு நடவடிக்கை மற்றும் ஜி.எஸ்.டி நடவடிக்கை போன்ற தொடர் பொருளாதார தாக்குதல்களால், திருப்பூர் தொழில்துறையினர் பலரும் மிகப்பெரிய அளவில் வணிக ரீதியிலான சிக்கலில் மாட்டிக்கொண்டு விழிபிதுங்கி நிற்கிறார்கள்.

சீனிவாசனைப் போலவே, கடன் தொல்லையில் சிக்கித்தவிக்கும் பின்னலாடைத் தொழிலதிபர்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருப்பதுதான் திருப்பூர் தொழில்துறையின் தற்போதைய நிலைமை'' என்றனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement