வெளியிடப்பட்ட நேரம்: 13:09 (13/10/2017)

கடைசி தொடர்பு:13:09 (13/10/2017)

கிருஷ்ணப்ரியாவுக்கு கட்சிப்பதவியா? தினகரனுக்கு சசிகலாவின் திடீர் உத்தரவு #VikatanExclusive

சசிகலா

இளவரசியின் மூத்த மகள் கிருஷ்ணப்ரியாவுக்கு, கட்சியில் பதவி கொடுப்பது தொடர்பான ஆலோசனையில் சசிகலாவும் தினகரனும் ஈடுபட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அ.தி.மு.க-வின் முழுக் கட்டுப்பாடும் சசிகலாவிடம் சென்றது. பொதுக்குழுவில் சசிகலா, தற்காலிக பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்து, அ.தி.மு.க-வின் சட்டமன்றக் குழுத் தலைவராகவும் தேர்வுசெய்யப்பட்டு, முதல்வராக காய் நகர்த்தப்பட்டது. இந்தச் சமயத்தில், சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு சிறைத்தண்டணை விதிக்கப்பட்டது. சிறைக்குச் செல்லும் முன், எடப்பாடி பழனிசாமியை முதல்வராகவும், கட்சியை வழிநடத்த டி.டி.வி.தினகரனை துணைப் பொதுச் செயலாளராகவும் நியமித்தார் சசிகலா.

சசிகலா சிறையிலிருந்த காலகட்டத்தில், காட்சிகள் மாறின. சசிகலாவுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கிய ஓ.பன்னீர்செல்வத்துடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கைகுலுக்கினார். அடுத்து, சசிகலா குடும்பத்தை அ.தி.மு.க-விலிருந்து ஓரம்கட்டும் நடவடிக்கையில், பன்னீர்செல்வமும் பழனிசாமியும் ஈடுபட்டனர். இருவரும் இணைந்து நடத்திய பொதுக்குழுவில், சசிகலாவின் தற்காலிக பொதுச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டது. தினகரனை கட்சிப் பதவியிலிருந்து நீக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. பதிலடியாக, எடப்பாடி பழனிசாமியை முதல்வர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 21 பேர் ஆளுநரிடம் மனு கொடுத்தனர். இதற்குப் பதிலடியாக, 18 எம்.எல்.ஏ-க்களை எடப்பாடி பழனிசாமி தரப்பு தகுதிநீக்கம் செய்தது. இந்த வழக்கு, நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்தச் சூழ்நிலையில், சசிகலாவின் கணவர் நடராசன், கல்லீரல் மற்றும் சிறுநீரகம் செயலிழந்ததால், உறுப்பு மாற்று அறுவை சிகிக்சைக்காக பெரும்பாக்கம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதனால், நடராசனைப் பார்க்க சசிகலா, சிறைத்துறையிடம் கேட்ட பரோலுக்கு  ஐந்து நாள்கள் அனுமதியளிக்கப்பட்டது. அதன்படி, கடந்த 7-ம் தேதி சென்னை வந்த சசிகலா, நடராசனைச் சந்தித்தார். கடும் நிபந்தனைகளுடன் பரோலில் வந்ததால், உறவினர்களைத் தவிர வேறுயாரையும் சந்திக்கவில்லை.

சசிகலா,கிருஷ்ணப்ரியா

சென்னை தி.நகரில் உள்ள இளவரசியின் மூத்த மகள் கிருஷ்ணப்ரியா வீட்டில் தங்கியிருந்தார். அப்போது கிருஷ்ணப்ரியா, சசிகலாவை அதிக அக்கறையுடன் கவனித்துள்ளார். கிருஷ்ணப்ரியாவின் கவனிப்பால் சசிகலா மனம்குளிர்ந்தார். ஐந்து நாள்களும் சசிகலாவுடனே இருந்த கிருஷ்ணப்ரியாவின் அனைத்து நடவடிக்கைகளும் பிடித்துப்போனது. இதனால், கிருஷ்ணப்ரியாவுக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்று தினகரனுடன் சசிகலா ஆலோசனை நடத்தியுள்ளார்.

ஏற்கெனவே கிருஷ்ணப்ரியா, தொண்டு நிறுவனம்மூலம் மக்கள் சேவையில் ஈடுபட்டுள்ளார்.  அதனால், அவருக்கு அ.தி.மு.க-வில் மாநில அளவில் முக்கியப் பொறுப்பு கொடுக்கலாம் என்று விவாதிக்கப்பட்டுள்ளது. அப்போது, இளைஞர், இளம் பெண் பாசறையில் மாநிலப் பொறுப்பு கொடுக்கலாம் என்று சசிகலா சொல்லியிருக்கிறார். அதற்கு, தினகரனும் கிரீன் சிக்னல் கொடுத்துள்ளார். பாசறைப் பதவியில் டாக்டர் வெங்கடேஷ் இருந்தார். அவரது பதவியை ஜெயலலிதா பறித்தார். தற்போது, சசிகலா குடும்பத்தைச் சேர்ந்த கிருஷ்ணப்ரியாவுக்கு பாசறையில் முக்கியப் பதவி கொடுக்கப்படவுள்ளதாக உள்விவர வட்டாரங்கள் தெரிவித்தன.

சசிகலா பரோலில் வந்திருந்த சமயத்தில், குடும்பத்தில் திருமண சம்பந்தம் தொடர்பாகவும் அவர் பேசியிருக்கிறார். ஆனால், ஏனோ அந்த திருமண சம்பந்தம் கைகூடவில்லையாம். இது, சசிகலாவுக்கு வருத்தமாம். அடுத்து, நடராசனின் உடல்நலம்குறித்த கவலை அதிக அளவில் அவரிடம் காணப்பட்டதாகச் சொல்கின்றனர் குடும்ப உறவினர். சசிகலாவுக்கு எவ்வளவோ ஆறுதல் சொன்னபோதிலும் அவரது மனநிலை மாறவில்லையாம். நடராசனை சசிகலா சந்தித்த பிறகு, அவர் மனதளவில் உற்சாகமாக இருக்கிறார். அதனால், அவரது உடல் நலமும் முன்னேறி வருவதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

பரோல் முடிந்து சிறைக்குப் புறப்பட்ட சமயத்தில், தினகரன் அங்கு இல்லை. திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி தொகுதி (தகுதிநீக்கம் செய்யப்பட்ட) எம்.எல்.ஏ. ஏழுமலையைச் சந்தித்து நலம் விசாரித்தார். அதன்பிறகு, தனியாகவே பெங்களூரு சென்றுவிட்டார். பரோல் கிடைத்தபோது சசிகலா, காரின் பின் இருக்கையில் அமர்ந்திருந்தார். ஆனால், பரோல் முடிந்து சிறைக்குச் செல்லும்போது, காரின் முன் இருக்கையில் கம்பீரமாக அமர்ந்திருந்தார். இதற்கு ஆதரவாளர்கள் கொடுத்த வரவேற்பு, நடராசனின் உடல்நல முன்னேற்றம், கட்சியில் சீனியர் கொடுத்த வாக்குறுதி ஆகியவை சசிகலாவுக்கு உத்வேகத்தைக் கொடுத்திருக்கிறது. சிரித்தமுகத்துடன் குழந்தைகளுக்குப் பெயர் சூட்டி மகிழ்ந்த சசிகலா, சிறை வளாகத்தில் கார் நுழைந்தபோது உற்சாகம் குறைந்திருந்தது. சசிகலாவை வரவேற்க சிறை வளாகத்தில் தொண்டர்களுடன் காத்திருந்த தினகரனிடம், பிரியா விடைபெற்றுக்கொண்டு சிறைக்குள் சென்றுவிட்டார். அப்போது, குடும்ப உறவுகளின் கண்களில் நீர் கசிந்தன.


டிரெண்டிங் @ விகடன்