`மாட்டுக் கோமியத்தில் நோய் எதிர்ப்புசக்தி!' - அமைச்சர் அன்பழகன் தகவல் | KP Anbalagan states about Medicinal values of Cow Urine

வெளியிடப்பட்ட நேரம்: 12:07 (13/10/2017)

கடைசி தொடர்பு:13:25 (13/10/2017)

`மாட்டுக் கோமியத்தில் நோய் எதிர்ப்புசக்தி!' - அமைச்சர் அன்பழகன் தகவல்

'மாட்டுச்சாணத்திலும் கோமியத்திலும் நோய் எதிர்ப்புசக்தி உள்ளது' என்று உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார்.

தமிழகத்தை அச்சுறுத்திவரும் டெங்கு காய்ச்சலால் நாளுக்கு நாள் உயிரிழப்பு அதிகரித்துவருகிறது. அரசு மருத்துவமனையில் காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் குவிந்துவருகிறார்கள். டெங்கு காய்ச்சலுக்குக் காரணமான ஏடிஸ் கொசுவைக் கட்டுப்படுத்த முடியாமல், தமிழக அரசு திணறிவருகிறது. சாலையோரங்கள் மற்றும் பொது இடங்களிலும் குப்பைகள் மலைபோல் தேங்கிக்கிடக்கின்றன. இதன்மூலம் உற்பத்தியாகும் கொசுக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இதனிடையே,  கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கொசுவைக் கட்டுப்படுத்த நேற்று ஒரு புது ஐடியாவைத் தெரிவித்தார். "டெங்கு கொசு வருவதற்குக் காரணம், அந்தக் காலம்போல பெண்கள் வீட்டில் சாணி தெளிச்சு, மெழுகிக் கோலம் போடுவதில்லை, அந்தப் பழக்கம் மறைந்துவிட்டது. அதனால்தான் கொசு அதிகமாக உற்பத்தியாகிறது. அந்தக் காலத்தில் கொசு வரவில்லை" என்று கூறினார்.

இந்த நிலையில், மாட்டுச்சாணத்திலும் கோமியத்திலும் நோய் எதிர்ப்புசக்தி இருப்பதாக, உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார். சென்னையில், இன்று நடைபெற்ற இந்திய சர்வதேச அறிவியல் திருவிழாவில் பங்கேற்றுப் பேசியபோது இவ்வாறு தெரிவித்த அவர், அறிவியல் கண்காட்சியில் பங்கேற்கும் மாணவர்களுக்கு, உபகரணங்களைப் பெற்றோர் செய்துதரக்கூடாது என்றும் மேலை நாடுகளை ஒப்பிடும்போது, அறிவியலில் நம் மாணவர்களின் ஈடுபாடு குறைவுதான் என்றும் கூறினார்.