வெளியிடப்பட்ட நேரம்: 12:58 (13/10/2017)

கடைசி தொடர்பு:12:58 (13/10/2017)

எளியவர்களுடன் ஒரு நாள்... அசத்திய கரூர் டி.ஆர்.ஓ சூர்யபிரகாஷ்!

                       விவசாயியின் வீட்டில் டி.ஆர்.ஓ

‘விவசாயத்தையும், விவசாயிகளையும் அதிகார மட்டத்தின் கடைக்கோடி ஊழியர்கூட மதிப்பதில்லை' என்பதுதான் சமூகத்தின் ஒட்டுமொத்தக் குற்றச்சாட்டு. ஆனால், சாதாரண ஓர் ஏழை விவசாயியின் அழைப்புக்கு மதிப்பு கொடுத்து, விழா ஒன்றில் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளார் கரூர் மாவட்ட வருவாய் அலுவலர் (டி.ஆர்.ஓ) சூர்யபிரகாஷ்!

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி ஒன்றியத்தில் உள்ள குள்ளமாப்பட்டியைச் சேர்ந்த ரவி, தன் தோட்டத்தில் பத்தாயிரம் மரக்கன்றுகளை வளர்த்தெடுத்து அதனை மக்களுக்கு இலவசமாக வழங்கவும் விழா ஒன்றை ஏற்பாடு செய்தார். இந்த விழாவுக்குத் தலைமை தாங்க டி.ஆர்.ஓ சூர்யபிரகாஷைத் தயக்கத்தோடு அழைத்தார் ரவி. ஆனால், டி.ஆர்.ஓ சூர்யபிரகாஷோ தான் மட்டுமல்லாது கோட்டாட்சியர், அந்தப் பகுதி தாசில்தார் ஆகியோருடன் விழாவுக்குச் சென்று விவசாயி ரவியை நெகிழச் செய்துவிட்டார். 

எந்தவிதப் பந்தாவும் இல்லாமல் மரக்கன்றுகளை வழங்கிமுடித்த டி.ஆர்.ஓ, ரவி குடும்பத்தினர் கொடுத்த கூழை தரையில் அமர்ந்துகொண்டு குடித்தார். பின்னர் அந்த ஊர் மக்களை நோக்கி, ''உங்கள் ஊருக்கு என்ன வேண்டும்?'' எனக் கேட்டு குறித்துக்கொண்டார். ஆச்சர்யத்தில் விழி விரிய நின்று வேடிக்கைப் பார்த்த கிராம மக்களிடம், "நாங்க உங்க சர்வன்ட். நீங்க எங்களைப் பார்த்து அச்சப்படத் தேவையில்லை" என்று சொல்லி, குழுமி இருந்த மக்களை மூக்கின் மேல் விரல் வைக்கச் செய்தார்.

டி.ஆர்.ஓ சூர்யபிரகாஷ், மற்ற அதிகாரிகளிலிலிருந்து சற்று வித்தியாசமானவர்.  இலவசமாக மரக்கன்று வழங்கும் விழாவை யார் நடத்தினாலும் அந்த விழாவில், இவராகப் போய் கலந்துகொண்டு சிறப்பிப்பார். அதோடு, தன் பங்குக்கு பத்து மரக்கன்றுகளையும் வாங்கிக்கொண்டு மக்களுக்கு வழங்குவதும் இவரது வழக்கம். குறிப்பாக கரூர் மாவட்டத்தில் உள்ள 50-க்கும் மேற்பட்ட தனியார், அரசு பள்ளி - கல்லூரிகளில் நடைபெற்ற மரக்கன்று நடும் விழாக்களில் கலந்துகொண்டு நூற்றுக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டிருக்கிறார். அதோடு, கரூர் மாவட்டம் முழுக்க வருவாய் துறை அதிகாரிகள் மூலம் இதுவரை ஆயிரக்கணக்கான மரங்களை நட வைத்திருக்கிறார். மாவட்டம் முழுக்க ஒரு லட்சம் மரங்கள் வளர்ப்பதை லட்சியமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறார்.

டி.ஆர்.ஓ

இப்போது விவசாயி ரவி விஷயத்துக்கு வருவோம். தஞ்சாவூர் மாவட்டத்தில், பிஸினஸ் செய்து வந்த ரவி, அந்தப் பணத்தைக் கொண்டு கரூர் மாவட்டத்திலுள்ள தனது ஊரில், 20 ஏக்கர் மானாவாரி நிலத்தை வாங்கியிருக்கிறார். அதில், இயற்கை விவசாயம் பார்க்கக் கிளம்பிய ரவியைப் பார்த்து மொத்தக் கிராமமும், ''கோமாளிப் பய... பொட்டக்காட இவ்வளவு காசு கொடுத்து யாராச்சும் வாங்குவானா? அதுல இயற்கை விவசாயம் வேற. உருப்பட்ட மாதிரிதான்'' என்று ஏளனம் செய்துள்ளனர். 

ரவியோ, "நான் ஜெயித்துக் காண்பிக்கிற வரையில் கோமாளியாகவே இருந்துட்டுப் போறேன்" என்று பதில் அளித்ததோடு, தனது வயலுக்கு முன்பு 'கோமாளிப் பண்ணை' என்று போர்டும் எழுதிவைத்துவிட்டு தன் விவசாய வேலைகளில் கவனமாகிவிட்டார். கூடவே, இயற்கை விவசாயத்தின் மீது மக்களுக்கு விழிப்பு உணர்வு ஏற்பட வைக்க, பத்தாயிரம் மரக்கன்றுகளை  வழங்கும் விழாவுக்கும் ஏற்பாடு செய்தார். தனது முகநூல் பக்கத்தில் அதற்கான அழைப்பும் விடுத்தார். கரூர் மாவட்ட வருவாய் அலுவலர் சூர்யபிரகாஷ் மரம் வளர்ப்பதில் ஆர்வமானவர் என்பதைத் தெரிந்துகொண்டு, அவரது போன் நம்பரை வாங்கி, ''எனது விழாவுக்கு வர முடியுமா?'' என்று வாட்ஸப் மூலம் தயங்கித் தயங்கி அழைப்பு விடுத்திருக்கிறார். 


 டி.ஆர்.ஓ

 

''அன்னைக்கு கொஞ்சம் வேலைப்பளு அதிகம். இருந்தாலும் வரப் பார்க்கிறேன்'' என்று டி.ஆர்.ஓ பதில் அனுப்பியிருக்கிறார். 'அவர் எங்கே நாம் நடத்தும் நிகழ்ச்சிக்கு வரப்போகிறார்?' என்று நினைத்த ரவி, பெரிதாக எந்த ஏற்பாட்டையும் செய்யவில்லை. வழங்குவதற்கு பத்தாயிரம் மரக்கன்றுகள், வந்தவர்கள் குடிக்க கம்மங்கூழ், மதியம் சைவச் சாப்பாடு என்று சிம்பிளாக விழா ஏற்பாடுகளை செய்திருந்தார் ரவி. ஆனால், 11 மணிக்கு அவரது வயலில் மூன்று அரசாங்கக் கார்கள் பரபரப்பாக வந்து நின்றன. அவற்றிலிருந்து மாவட்ட வருவாய் அலுவலர் சூர்யபிரகாஷ், கோட்டாட்சியர் சரவணமூர்த்தி, அரவக்குறிச்சி வட்டாட்சியர் சந்திரசேகர் ஆகியோர் வரிசையாக இறங்க, ரவி ஆச்சர்யத்தில் வாயடைத்துப் போனார். கூடவே, 'மாவட்ட வருவாய் அலுவலர் வருகிறாராமே!' என்றப் பதற்றத்தில், அந்தப் பகுதி வருவாய் ஆய்வாளர் ரவிவர்மன், கிராம நிர்வாக அலுவலர் முருகவேல் ஆகியோர் பதறியடித்துக்கொண்டு வந்தனர். ''சார் நீங்க வர்றது தெரியாததால, எந்த ஏற்பாடுகளையும் செய்யலை. சேர்கள்கூட ரெடி பண்ணலை'' என்று ரவி பதற, அவரை ஆசுவாசப்படுத்திய டி.ஆர்.ஓ, ''ஒண்ணும் பதற வேண்டாம். நாங்களும் நீங்கள் கொடுக்கும் மரக்கன்றுகளை வாங்கத்தான் வந்திருக்கிறோம். உங்களுக்கு சேவை செய்யும் சாதாரண சர்வன்ட்கள்தான் நாங்க. எங்களைப் பார்த்து அச்சப்படத் தேவையில்லை'' என்றதோடு இரும்பு சீட்களால் வேயப்பட்ட கொட்டகையின் கீழ் போடப்பட்டிருந்த பாயில் மக்களோடு மக்களாகத் அமர்ந்துகொண்டார். வெயில் நேரம்... இரும்பு சீட் என்பதால், எல்லோருக்கும் வியர்த்து ஒழுகியது. வழியும் வியர்வையை  கைக்குட்டையால் துடைத்துக்கொண்ட டி.ஆர்.ஓ., ரவி ஏற்பாடு செய்திருந்த கம்மங்கூழை வாங்கி சுவைத்துக் குடித்தார்.

தொடர்ந்து ரவியைப் பற்றிக் கேட்டறிந்த டி.ஆர்.ஓ சூர்யபிரகாஷ், ''சபாஷ். பார்க்கும் தொழிலை விட்டுட்டு, விவசாயம் பார்க்க வந்ததே பெரிய விசயம். அதைவிட, ஊர்க்காரங்க அவச்சொல்லையும் மீறி பொட்டக்காட்டை வாங்கி  இயற்கை விவசாயம் பார்க்கக் கிளம்பியிருப்பது பாராட்டத்தக்க செயல். நாம நாமளா வாழணும். தப்பு செய்யத்தான் அடுத்தவங்களுக்கு அஞ்சணும். இதுபோல, நல்லது செய்ய யாருக்கும் அஞ்ச வேண்டியதில்லை. அவங்களால குறை சொல்லத்தான் முடியும். ஆனால், நீங்க செயல்வீரர். தொடர்ந்து எந்த விமர்சனத்துக்கும் அஞ்சாமல், இதே வழியில் செயல்படுங்கள்'' என்று ரவியை வாழ்த்தினார். தொடர்ந்து அங்கே மரக்கன்றுகள் வாங்க வந்திருந்த இயற்கை ஆர்வலர்களிடம், ''நான் பேச வேண்டியதில்லை. நீங்கள்தான் பேச வேண்டும்'' என்றவர் ஒவ்வொரும் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு பேசச் சொன்னார். எல்லோரும் ''உயரதிகாரி முன்பு திடீர்னு எப்படி பேசுறது?'' என்று தயங்க, அவர்களின் தயக்கம் தீர்த்துப் பேசவைத்தார். சரோஜா என்பவர், தான் இயற்கை விவசாயம் செய்வதை சாதாரணமாகச் சொல்ல, ''புரட்சி, மாற்றம் என்கிற வார்த்தைகளுக்கு உண்மையில் இவங்க பண்ற காரியம்தான் அர்த்தம்'' என்று சிலாகித்தார் டி.ஆர்.ஓ. 

டி.ஆர்.ஓ

அதோடு, ரவி உள்ளிட்ட ஊர் விவசாயிகளிடம், ''இந்தப் பகுதிக்கு நாங்க ஏதாவது செய்ய நினைக்குறோம். அதனால்தான், எல்லா அதிகாரிகளையும் அழைத்து வந்திருக்கிறேன். என்ன வேண்டும்?'' என்று கேட்டார்.

''இந்தப் பகுதியில் உள்ள ஈசநத்தத்தில், பெரிய ஏரி இருக்கு. அதிலிருந்து எங்கள் கிராமம் உள்ளிட்ட சில கிராமங்களுக்கு தண்ணீர் போக வேண்டிய வாய்க்கால்கள் தூர்ந்து கிடக்கு. அவற்றை தூர் வாரணும்'' என்று சில கோரிக்கைகளை வைத்தனர் உள்ளூர் மக்கள். அதைக் கவனமாகக் குறித்துக் கொண்ட டி.ஆர்.ஓ, அந்தப் பகுதி வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலரிடம் அதுபற்றி கூடுதல் விபரம் கேட்டுத் தெரிந்து கொண்டார். 

''விரைவில் நீங்கள் சொல்லும் குறைகள் தீர்க்கப்படும்'' என்றவர், தொடர்ந்து ரவி தோட்டத்தில், தனது கையால் மரக்கன்றுகளை நட்டார். கூடவே, கோட்டாட்சியர், தாசில்தாரை யும் மரக்கன்றுகள் நட வைத்தார். ரவியின் உறவுச் சிறுமி ஒருவர் துடிப்பாக இருக்க, அந்தச் சிறுமியையும் ஒரு மரக்கன்று நட வைத்தார். அதன்பிறகு, வந்திருந்தவர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினார். திடீரென ரவியிடம், ''மறுபடியும் இப்படி மரக்கன்றுகளைக் கொடுக்க வைத்து என்னைக் கெஸ்ட்டாக மாற்றுகிறீர்கள். நானும் இங்கே நீங்கள் வழங்கும் மரக்கன்றுகளை வாங்கத்தான் வந்தேன்'' என்று சொல்லி, ரவி வழங்கிய இரண்டு மரக்கன்றுகளைப் பெற்றுக் கொண்டார். 

''எப்போது வேண்டுமானாலும் எந்த உதவி வேண்டுமானாலும் என்னை அழையுங்கள்" என்று ரவியிடம் கூறிய டி.ஆர்.ஓ, கிளம்பத் தயாரானார். அப்போது மதிய சாப்பாடு தயார் செய்து கொண்டிருந்த மூதாட்டி ஒருவர், ''மதியம் இருந்து சாப்பிட்டுப் போறது?'' என்று கேட்க, ''எனக்கு நீங்க சமைக்கிறது பத்தாது. அப்படி சாப்பிடுவேன். பரவாயில்லையா?'' என்று கிண்டலடித்துவிட்டு, வாகனம் நோக்கி நகர்ந்தார். அப்போது, ஓரமாக நின்ற தனது தந்தையை டி.ஆர்.ஓ-வுக்கு அறிமுகப்படுத்தினார் ரவி. அவரைக் கையெடுத்துக் கும்பிட்ட டி.ஆர்.ஓ, "நல்ல மகனை பெற்றிருக்கிறீர்கள். கஷ்டகாலத்திலும் ஒரு லட்சம் செலவு பண்ணி பத்தாயிரம் மரக்கன்றுகள் வழங்கியிருக்கிறார். நீங்கள் மகனை நினைத்து பெருமைப்படுங்கள்'' என்று சொல்ல, ரவியும், அவரது தந்தையும் கண்கலங்கினர்.

மாவட்ட வருவாய் அலுவலர் சூர்யபிரகாஷிடம் பேசினோம்....

"நான் வழக்கமான அதிகாரியாக இருக்க விரும்பலை. உண்மையில் ஏழ்மை நிலைமையிலும் இயற்கை விவசாயத்தை ஊக்கப்படுத்த ரவி ஒரு லட்சம் ரூபாய் கடன் வாங்கி இப்படி மரக்கன்றுகளை வழங்கியிருக்கிறார். எனக்கும் இயல்பாகவே மரம் வளர்ப்பதில் அதிக ஈடுபாடு உள்ளது. கரூர் மாவட்டத்தில் யார் மரக்கன்றுகள் வழங்கினாலும், முதல் ஆளாகப் போய் நானும் அந்த நிகழ்ச்சியில் கலந்துக்கிறேன். அப்படித்தான் எனது வாட்ஸப்பில் தகவல் அனுப்பிய ரவியின் இந்த விழாவிலும் கலந்துகொண்டு நானும் இரண்டு மரக்கன்றுகள் பெற்றிருக்கிறேன். டி.ஆர்.ஓ-வாக பணிபுரிய எனக்கு அரசு சம்பளம் தருது. ஆனால், எந்த லாபமும் இல்லாத விஷயத்தில் ரவி இப்படி செயல்படுவதுதான் பெரிது. அவரின் இந்தச் செயலை ஊக்கப்படுத்தத்தான் நான் சர்ப்ரைஸா  விழாவில் கலந்துக்கிட்டேன். இந்தப் பகுதி விவசாயிகள் வைத்த கோரிக்கைகளும் விரைவில் நிறைவேற்றப்படும். இப்போது உள்ள பத்து வயசு பையனும் மரக்கன்றுகள் வளர்க்கணும். இயற்கையைக் காக்கணும்னு களத்தில் இறங்குறான். நான் இன்னமும் அதிகாரி தோரணையில் ரூமுக்குள் உட்கார்ந்திருந்தா நல்லாவா இருக்கும்? அதான், களத்துக்கு வருகிறேன். அதோடு, உழவையும், உழவனையும் மதிக்கத் தெரியாத யாரும் நல்லா வாழ முடியாது என்பதை நம்புகிறவன் நான்" என்றார்.

ஒவ்வொரு அதிகாரியும் இப்படி மாறிவிட்டால்....? நினைக்கவே நெஞ்சம் இனிக்கிறது!


டிரெண்டிங் @ விகடன்