வெளியிடப்பட்ட நேரம்: 13:20 (13/10/2017)

கடைசி தொடர்பு:13:20 (13/10/2017)

வகுப்பறையில் இயங்கும் ஆரம்ப சுகாதார நிலையம்! - பன்னீர்செல்வம் தொகுதியில் அவலம்

தேனி மாவட்டம், போடி தொகுதியின் நுழைவுவாயில் என்று சொல்லப்படும் பூதிப்புரம் கிராமத்தில், கடந்த பல ஆண்டுகளாக ஆரம்ப சுகாதார நிலையம் வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கை. அதன் அடிப்படையில் நிதி ஒதுக்கப்பட்டு, ஆரம்ப சுகாதார நிலையம் கட்டும் பணி நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், தற்காலிக ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். அதனால், பூதிப்புரம் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியின் கட்டடம் ஒன்றில் தற்காலிக ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டு, அந்தக் கட்டடம், மகப்பேறு பிரிவு, அவசர சிகிச்சைப் பிரிவு, பொது மருத்துவப் பிரிவு எனத்  தயாரானது.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன், அந்தக் கட்டடத்தைத் திறந்துவைக்க, தற்போதைய துணை முதல்வரும் அப்போதைய சூழலில் தர்மயுத்தத்தில் பிஸியாக இருந்தவருமான ஓ.பன்னீர்செல்வம் வருவதாக ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது. இதை எதிர்த்து, அப்பகுதியில் இருக்கும் சிலர் கண்டனக் கோஷங்களை எழுப்பியது மட்டுமல்லாமல், 'தொகுதிப் பக்கமே வராதவர் இந்தக் கட்டடத்தைத் திறந்துவைக்க வரக்கூடாது' என்று சொல்லி கறுப்புக்கொடி பிடித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதை அறிந்த பன்னீர்செல்வம், கட்டடத்தைத் திறந்து வைக்க வரவில்லை, மாறாக, கலெக்டரையே திறந்துவைக்க உத்தரவிட்டதாகச் சொல்லப்பட்டது. அதன்படி, இரவோடு இரவாக யாருக்கும் தெரியாமல் அதிகாரிகள் சிலரால் கட்டடம் திறக்கப்பட்டது.

அருகில் உள்ள வலையபட்டா, வாழையாத்துப்பட்டி, ஆதிப்பட்டி உட்பட, சுற்றியுள்ள 10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு இருக்கும் ஒரே ஆரம்ப சுகாதார நிலையமாகச் செயல்பட்டது. தற்போது, வேகமாகப் பரவிவரும் டெங்கு மற்றும் மர்மக்காய்ச்சலால், பூதிப்புரம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு காய்ச்சலோடு தினமும் நூற்றுக்கணக்கானோர் வந்து செல்கிறார்கள். இந்தச் சூழலில், கடந்த ஒரு வாரமாக கட்டடத்தின் மேற்கூரைப் பெயர்ந்து விழுந்த வண்ணம் உள்ளது. நோயாளிகள், மருத்துவ ஊழியர்கள் உட்பட ஆரம்ப சுகாதார நிலையத்துக்குள் வருபவர்களை அந்தக் கட்டடம் பதம் பார்க்காமல் அனுப்புவதில்லை. மேற்கூரை இடிந்து விழும்சூழலில் இருப்பதால், நோயாளிகள் அருகில்உள்ள தொடக்கப் பள்ளி வகுப்பறையில் வைத்து மருத்துவம் பார்க்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. மாணவர்கள் அருகில் உள்ள பள்ளிக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

தற்காலிக ஆரம்ப சுகாதார நிலையம், அந்தப் பழைய கட்டடத்தில் வர இருப்பதை அறிந்தே, மாவட்ட நிர்வாகம் அந்தக் கட்டடத்தைப் பராமரிக்க நிதி ஒதுக்கியது. அந்த நிதியில், கட்டடத்துக்கு வண்ணப்பூச்சு மட்டும் செய்துவிட்டு, மீதிப் பணத்தை என்ன செய்தார்கள் என்று தெரியவில்லை. சில லட்சம் ஒதுக்கி பராமரிப்பு செய்யப்பட்ட கட்டடம், தற்போது பூட்டு போடப்பட்டுக்கிடக்கிறது. இதை, மாவட்ட நிர்வாகமும் துணை முதல்வர் பன்னீர்செல்வமும் தங்களது கவனத்தில் எடுத்து, ஆரம்ப சுகாதார நிலையம் இயங்க உரிய இடம் ஒதுக்கித் தர வேண்டும் என்பதே அங்குள்ள மக்களின் எதிர்பார்ப்பு.