விவசாயிகள்மீது போலீஸ் தடியடி... எம்.எல்.ஏ சட்டை கிழிப்பு... புதுச்சேரியில் பதற்றம்!

நிலுவைத் தொகையை வழங்கிடக்கோரி, புதுச்சேரி சர்க்கரை ஆலை முன் போராட்டம் நடத்திய விவசாயிகள்மீது போலீஸ் தடியடி நடத்தியதால், அந்தப் பகுதியில் பதற்றம் நிலவுகிறது.

புதுச்சேரி, திருக்கனூரை அடுத்த லிங்காரெட்டிப்பாளையத்தில், புதுச்சேரி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் சுமார் 450-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்துவருகின்றனர். புதுச்சேரி மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த சுமார் 18 ஆயிரம் விவசாயிகள், இந்த ஆலையில் உறுப்பினர்களாகவும் இருக்கின்றனர்.

கடந்த சில வருடங்களாக, இந்த ஆலை தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கிவருவதால், விவசாயிகளுக்கு வழங்கவேண்டிய சுமார் 10 கோடி ரூபாய் அளவில் நிலுவையில் இருக்கிறது. அதேபோல, அங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கும் கடந்த ஆறு மாதமாக சம்பளம் வழங்கப்படவில்லை. 2015-16-ம் ஆண்டுக்கு பிடித்தம்செய்யப்பட்ட கரும்புக் கடன் தொகை ரூ.3.5 கோடியைத் தமிழக அரசு தள்ளுபடிசெய்து அறிவித்தும் அது, விவசாயிகளுக்குத் தரப்படவில்லை. மேலும், தொழிலாளர் வைப்பு நிதிக்கான தொகை, தொழிலாளர் நலச் சங்கங்களுக்கு வழங்கவேண்டிய தொகை, காப்பீட்டுத் தொகை என சுமார் 27 கோடி ரூபாய் அளவுக்கு வழங்கப்படாமல் நிலுவையில் இருக்கின்றது.

அதைக் கண்டித்தும், நிலுவையில் இருக்கும் தொகைகளை உடனே வழங்கிடக் கோரியும், அரவைப் பணியை உடனே தொடங்க வேண்டும் என்கின்ற கோரிக்கைகளோடு சில தினங்களுக்கு ஆலை முன்பு தொழிலாளர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினர். அப்போது, ''ஆலை நஷ்டத்தில் இயங்குவதால் தனியாருக்குத் தாரை வார்க்க அரசு முயற்சி செய்கிறது” என்று அவர்கள் குற்றம் சுமத்தியிருந்தனர். இந்நிலையில், மீண்டும் இன்று நிலுவைத் தொகையை வழங்கிடக் கோரியும், துணைநிலை ஆளுநர் கிரண்பேடியைக் கண்டித்தும் மண்ணாடிப்பட்டு என்.ஆர்.காங்கிரஸின் எம்.எல்.ஏ டி.பி.ஆர் செல்வம் தலைமையில், 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் சர்க்கரை ஆலையை முற்றுகையிட முயற்சிசெய்தனர். அப்போது, போராட்டத்துக்கு அனுமதி இல்லை என்று போலீஸ் தரப்பில் சொல்லப்பட்டதால், இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றியதால், விவசாயிகள்மீது போலீஸ் தடியடி நடத்தியதில் சுமார் 10-க்கும் மேற்பட்ட விவசாயிகள் காயமடைந்தனர். இதில்,எம்.எல்.ஏ டி.பி.ஆர்.செல்வத்தின் சட்டை கிழிக்கப்பட்டதால், பதற்றம் அதிகரித்தது. அதைத் தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளையும், எம்.எல்.ஏ-வையும் கைது செய்தது போலீஸ். எம்.எல்.ஏ மீதான தாக்குதலைக் கண்டித்து, பெண்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் பதற்றம் நீடித்துவருகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!