வெளியிடப்பட்ட நேரம்: 13:40 (13/10/2017)

கடைசி தொடர்பு:17:49 (09/07/2018)

’ஒரு பக்கம் டெங்கு, மறுபக்கம் பா.ஜ அரசு’- முஸ்லிம் லீக் தேசியச் செயலாளர் காட்டம்!

இந்திய மக்களை ஒருபக்கம் டெங்குவும் மறுபக்கம் பா.ஜ அரசும் வாட்டி வதைப்பதாக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் அகிலஇந்தியச் செயலாளரான குர்ரம்அனீஸ் உமர் தெரிவித்தார்.

முஸ்லீம் லீக்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் அகில இந்திய மாநாடு, தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற உள்ளது. இதுகுறித்து ஆலோசனை நடத்த வந்துள்ள அக்கட்சியின் அகில இந்தியச் செயலாளரான குர்ரம்அனீஸ் உமர், நெல்லையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, ’’பாரதிய ஜனதா தலைமையிலான மத்திய அரசு, மக்களுக்கு எந்தவிதமான நலனையும் செய்யவில்லை. மத்திய அரசால் தமிழகத்துக்கு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த இந்தியாவுக்குமே பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதனால், மக்கள் அனைவரும் மத்திய அரசுமீது கடும் அதிருப்தியில் உள்ளனர். வரும் தேர்தலில், மக்கள் அதை வெளிப்படுத்துவார்கள்.

மக்களிடம் மத்திய அரசு தோல்வியடைந்துவருகிறது. அதன் வெளிப்பாடாகவே, சமீபத்தில் நடந்த மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தலில் அக்கட்சிக்கு பெரிய தோல்வி கிடைத்தது. விரைவில் நடைபெற இருக்கும் குஜராத், உத்தரகாண்ட் தேர்தலிலிலும் பா.ஜ அரசு பெரும் தோல்வியைச் சந்திக்கும். மத்திய அரசின் தவறான அணுகுமுறை காரணமாக, நாட்டின் பொருளாதார வளர்ச்சி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. 

ஜி.எஸ்.டி வரி விதிப்பால் நாட்டின் வணிகம் பெரிதும் பாதிப்படைந்துவிட்டது. வணிகர்கள், தொழில் அதிபர்கள் பெரும் சிரமங்களைச் சந்தித்துவருகிறார்கள். ஜி.எஸ்.டி வரி குறித்து தெளிவான விளக்கத்தை மத்திய அரசு வெளிப்படுத்தத் தவறியதால், நாட்டின் வணிகம் பாதிப்படைந்துள்ளது. பிரதமர் மோடியைப் பொறுத்தவரை நாடுகளைச் சுற்றிப் பார்ப்பதிலும் மக்களுக்குப் பலன் அளிக்காத செயல்களைச் செய்வதிலும் மட்டுமே ஆர்வம் காட்டிவருகிறார். 

முஸ்லீம் லீக் செயலாளர்

தமிழகத்தில் டெங்கு பாதிப்பு அதிகரித்துவருகிறது. அதைக் கட்டுப்படுத்த தமிழக அரசு தவறிவிட்டது. இந்த நோயைக் கட்டுப்படுத்தும் வகையில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட சுகாதார நிலையங்களில் போதுமான மருத்துவர்கள் இல்லை என்பது வேதனைக்கு ரியது. ஒரு பக்கம்  டெங்குவும், மறுபக்கம் பா.ஜ அரசும் மக்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவருகின்றன. 

தமிழகத்தில், தி.மு.க-வுடன் கூட்டணியில் நீடிக்கிறோம்.  வரும் உள்ளாட்சித் தேர்தல் மட்டும் அல்லாமல், வரும் சட்டமன்றத் தேர்தலிலும் தி.மு.க-வுடன் கூட்டணியில் நீடிப்போம். இப்போது தேர்தல் வந்தாலும் தமிழகத்தில் தி.மு.க கூட்டணி வெற்றிபெற்று ஆட்சியமைக்கும் நிலைமையே இருக்கிறது’’ என்றார். கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் முகமது அபுபக்கர், கட்சியின் நெல்லை கிழக்கு மாவட்டத் தலைவர் எல்.கே.எஸ்.மீரான் ஆகியோர் உடனிருந்தனர்.