இன்று 'உலக முட்டை தினம்!' : சில சுவாரஸ்யத் தகவல்கள்! #WorldEggDay | #WorldEggDay - Important facts about Egg

வெளியிடப்பட்ட நேரம்: 14:20 (13/10/2017)

கடைசி தொடர்பு:14:21 (13/10/2017)

இன்று 'உலக முட்டை தினம்!' : சில சுவாரஸ்யத் தகவல்கள்! #WorldEggDay

ன்று, 'உலக முட்டை தினம்.' 1996 முதல் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் வரும் இரண்டாவது வெள்ளிக்கிழமை, உலக முட்டை தினமாகக் கொண்டாடப்பட்டுவருகிறது. முட்டையின் நன்மைகள்குறித்தும், அதிலுள்ள சத்துகள் மற்றும் அதன் முக்கியத்துவங்களை மக்களுக்குத் தெரியபடுத்துவதுதான் இந்த நாளின் நோக்கம். புரதச்சத்துகள் அதிகம் இருக்கும் கோழி முட்டை நம்மிடையே பிரபலமாக இருந்தாலும், உலகளவில் முட்டைக்கான சந்தையில், கோழிமுட்டை மட்டுமன்றி வாத்து, காடை, கௌதாரி போன்றவற்றின் முட்டைகளும் பிரபலமானவை.

உலக முட்டை தினம்

குறைந்த விலையில் கிடைக்கப்பெறும் அதிக ஊட்டச்சத்துகொண்ட உணவு, முட்டை மட்டும்தான். எனவே, வளரும் குழந்தைகள் ஒரு நாளைக்கு ஒன்று என்ற கணக்கில் சாப்பிடலாம் என்கின்றனர் மருத்துவர்கள். ஊட்டச்சத்துகள் மட்டுமன்றி, உடலுக்குத் தேவையான அனைத்து வைட்டமின் சத்துகளும் முட்டையில் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, வைட்டமின்கள் - ஏ, பி 12, பி 2, பி 5, இ முதலியவை, கோலின், சீயாந்தீன் போன்ற கனிமச்சத்துகளும் முட்டையில் நிறைந்துள்ளன. 

மஞ்சள் கரு

கொழுப்புச் சத்துகளின் இருப்பிடமாக மஞ்சள் கரு இருப்பதால், அதை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். இதயப் பாதிப்பு இருப்பவர்கள், வயதானவர்கள், உடலில் கோளாறு இருப்பவர்கள், சர்க்கரை நோயாளிகளெல்லாம் மஞ்சள் கருவை தவிர்ப்பது நல்லது. கோழியின் உணவுமுறை எப்படி என்பதைப் பொறுத்தே, மஞ்சள் கருவின் நிறமும் அடர்த்தியும் அமையும் என்பதால், மஞ்சள் கருவின் நிறத்தைவைத்து அதன் தன்மையை முடிவுசெய்வது தவறு. அதேபோல, பச்சை முட்டையைக் குடிப்பது பாக்டீரியல் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதால், அதையும் தவிர்த்துவிடலாம். பல வீடுகளில், வளரும் குழந்தைகளுக்கும், பருவம் அடைந்த பெண்களுக்கும் பச்சை முட்டை கொடுக்கும் வழக்கம் உண்டு. இதுபோன்ற விஷயத்தில் பெற்றோர் கவனமாக இருத்தல் அவசியம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க