'மெர்சல்' படத்துக்கு எதிரான மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'மெர்சல்' திரைப்படம் எப்போது ரிலீஸாகும் என்பது  கேள்விக்குறியாக உள்ளது. தீபாவளி ரிலீஸாக 'மெர்சல்' வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பல்வேறு பிரச்னைகள் 'மெர்சல்' படத்தை வெளியிடவிடாமல் தொடர்ந்து துரத்தி வருகிறது.

mersal

சிறிது நாள்களுக்கு முன்பு,  ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் 'மெர்சல்' என்ற பெயரில் படத்தை வெளியிடத் தடை விதிக்கக்கோரி வழக்குத் தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், 2014-ம் ஆண்டு ஏ.ஆர் ஃபிலிம்  ஃபேக்டரி எனும் நிறுவனம் `மெரசலாயிட்டேன்’ என்ற தலைப்பைப் பதிவுசெய்ததால், `மெர்சல்’ படத்துக்கு தடை விதிக்க வேண்டும்'' எனக் கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், 'மெர்சல்' என்ற பெயரில் படம் வெளியாக இடைக்காலத் தடை விதித்தது. 

இந்த வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது,  'மெர்சல்'  படத்துக்கான இடைகாலத் தடையை நீக்கி உத்தரவிட்டது. 'மெர்சல்' படத்தை வெளியிடவும் விளம்பரப்படுத்தவும் இருந்த தடை இதன்மூலம் நீக்கப்பட்டதால், விஜய் ரசிகர்கள் சந்தோஷத்தில் இருந்தனர்.  இந்நிலையில், 'மெர்சல்' படத்துக்கு எதிராக 'மெரலாயிட்டேன்' என்ற படத் தயாரிப்பாளர், உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள், இந்த வழக்கைத் தள்ளுபடிசெய்தனர். அதிகமாக கட்டணம் வசூலிக்கும் 41 திரையரங்குகளில் 'மெர்சல்' படம் ரிலீஸாவது தொடர்பான வழக்கு, தீபாவளிக்குப் பிறகு விசாரிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

ஆனாலும், 'மெர்சல்' திரைப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்தப் படத்தில் விலங்குகள் பயன்படுத்தப்பட்டிருப்பதால், விலங்குகள் நல வாரியத்திடமிருந்து அனுமதி பெற்றிருக்க வேண்டும். ஆனால், இன்னும் விலங்குகள் நல வாரியத்திடமிருந்து அனுமதி பெறாததால், திரைப்படம் வெளியாவதில் சிக்கல் எழுந்துள்ளது. குறிப்பாக, திரைப்படத்தில் புறாக்கள் வரும் காட்சிகள் கிராஃபிக்ஸ் என்பதற்கான எந்தச் சான்றிதழையும் படக்குழுவினர் சமர்ப்பிக்கவில்லையாம். இதனால்தான் சிக்கல் ஏற்பட்டிருப்பதாக திரைப்பட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!