வெளியிடப்பட்ட நேரம்: 15:44 (13/10/2017)

கடைசி தொடர்பு:15:44 (13/10/2017)

சிங்கக்குட்டிக்கு பெயர் வைக்கும் முதல்வருக்கு டெங்குவை கவனிக்க நேரமில்லையா? -சீறும் எம்.எல்.ஏ

வண்டலூருக்குச் சென்று சிங்கக்குட்டிக்குப் பெயர் வைக்கும் முதல்வருக்கு, டெங்கு பாதிக்கப்பட்ட குழந்தைகளைப் பார்க்க நேரம் இல்லையா? என முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு முன்னாள் அமைச்சர் பூங்கோதை கண்டனம் தெரிவித்தார். 

டெங்கு ஆய்வில் எம்.எல்.ஏ

நெல்லை மாவட்டத்தில் டெங்கு பாதிப்பு அதிகரித்துவருகிறது. நெல்லையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், இன்றைய நிலவரப்படி 154 பேர் காய்ச்சல் காரணமாக சிகிச்சைபெற்றுவருகின்றனர். அவர்களுக்கு எடுக்கப்பட்ட சோதனையின் முடிவில் 54 பேருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் சிலருக்கு, சோதனை முடிவு வர வேண்டியது இருப்பதால், டெங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் ஆபத்து உள்ளது. ஆரம்ப சுகாதார நிலையங்கள், தென்காசி, சங்கரன்கோவில், அம்பாசமுத்திரம் உள்ளிட்ட மருத்துவமனைகள், காய்ச்சல் காரணமாக ஏராளமான நோயாளிகள் நாள்தோறும் வரத் தொடங்கியுள்ளனர். கடந்த சில தினங்களாகப் பெய்த மழைக்குப் பின்னர், நாள்தோறும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துவருவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில், தென்காசி மருத்துவமனையில் உள்ள வசதிகள்குறித்து ஆய்வுசெய்யவும், அங்கு சிகிச்சைபெறுபவர்களைச் சந்திக்கவும் முன்னாள் அமைச்சரும் தி.மு.க எம்.எல்.ஏ-வுமான பூங்கோதை ஆலடிஅருணா நேரில் சென்றார். 

மருத்துவர்களிடம் ஆலோசனை நடத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ’’தென்காசி அரசு மருத்துவமனையில் 30 பேர் டெங்கு பாதிப்பால் சிகிச்சைபெற்றுவருகின்றனர். தமிழகத்தில் டெங்கு பாதிப்பைத் தடுப்பதுகுறித்து பொதுமக்களுக்கு உரிய ஆலோசனைகளை வழங்கவும் விழிப்புஉணர்வை ஏற்படுத்தவும் தமிழக அரசு தவறிவிட்டது. தென்காசி மருத்துவமனையில், கடந்த 1987-ம் ஆண்டு எத்தனை மருத்துவர்கள் இருந்தார்களோ, அதே எண்ணிக்கையில்தான் தற்போதும் மருத்துவர்கள் இருக்கிறார்கள். 250 படுக்கை வசதிகள்கொண்ட இந்த மருத்துவமனையில், தற்போது 490 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். இடவசதி இல்லாமல் நிறைய நோயாளிகள் தரையில் படுக்கவைக்கப்பட்டுள்ளனர்.

டெங்கு நோயைக் கட்டுப்படுத்த, நிலவேம்புக் கஷாயம் வழங்க 16 கோடி ரூபாய் ஓதுக்கிடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், மருத்துவமனைகளில் தேவையான அடிப்படை வசதிகள்கூட செய்துகொடுக்கப்படவில்லை. இந்த மாவட்டத்தின் அமைச்சரான ராஜலெட்சுமி, இதுவரை எந்த மருத்துவமனைக்கும் சென்று பார்க்கவே இல்லை. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் உள்ள வண்டலூர் பூங்காவுக்குச் சென்று சிங்ககுட்டிக்கு பெயர் சூட்டுகிறார். அதற்கெல்லாம் நேரம் இருக்கும் அவருக்கு, டெங்குவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளைப் பார்க்கக்கூட நேரமில்லை. இந்த அரசு பதவி விலக வேண்டும்’’ என்றார்.