Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வாகன நுழைவுக் கட்டண உரிமம் ரூ.2.26 கோடிக்கு ஏலம்! அதிர்ந்த ராமேஸ்வரம் நகராட்சி

ராமேஸ்வரம் நகராட்சி வாகன நுழைவு கட்டண வசூல் மையம்

பொதுமக்கள்-தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் எதிர்ப்பையும் மீறி ராமேஸ்வரம் நகராட்சி வாகன நுழைவுக் கட்டணம் வசூல் உரிமம் ஏலம் விடப்பட்டது. ராமநாதபுரத்தைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவரால் ரூ. 2,26,50,000-க்கு ஏலம் எடுக்கப்பட்டது.

புனிதத் தலமாகவும் சுற்றுலாத் தலமாகவும் விளங்கி வரும் ராமேஸ்வரத்துக்கு நாடு முழுவதும் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வாகனங்களில் வந்து செல்கின்றனர். இவ்வாறு வரும் வாகனங்களை நகராட்சிக்குச் சொந்தமான சுற்றுலா வாகனப் பேருந்து நிறுத்தத்தில் நிறுத்திக்கொள்ள நகராட்சி நிர்வாகத்தால் வாகன நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதன்படி ஆரம்பத்தில் நகராட்சி நிர்வாகமே இந்த வாகன வசூலை நடத்திவந்தது. பின்னர், தனியாருக்கு ஏலம் விடப்பட்டு கட்டணம் வசூலிக்கப்பட்டது. துவக்கத்தில் குறைந்த அளவு தொகையே வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் நுழைவுக் கட்டணம் வசூலிக்கும் உரிமை தனியார் கைகளுக்கு போன பின் நுழைவுக் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டு வசூலிக்கப்பட்டது. இதன்படி தனியார் பேருந்து மற்றும் லாரிகளுக்கு ரூ.150, கார் மற்றும் வேன்களுக்கு ரூ.100 என நாட்டில் எங்குமே இல்லாத அளவுக்குத் தன்னிச்சையாகக் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு வசூலிக்கப்படுகிறது.

மேலும் ராமேஸ்வரம் வரும் வாகனங்களில் 90% வாகனங்கள் நகராட்சி வாகன நிறுத்தத்தில் நிறுத்தப்படாமல், தங்கும் விடுதிகள், கோயில் மற்றும் தனியாருக்குச் சொந்தமான வாகன நிறுத்தங்களிலேயே நிறுத்தப்பட்டு வருகிறது. ஆனாலும் ஊருக்குள் நுழையும் வாகனங்கள் எங்கு நிறுத்தினாலும் அதற்கு நகராட்சி நிர்ணயித்துள்ள தொகையைச் செலுத்திய பின்னரே நகருக்குள் அனுமதிக்கப்படும். மேலும் விசேஷ நாள்களில் நகராட்சி எல்லைக்கு வெளியில் நிறுத்தப்படும் வாகனங்களிலும் நுழைவுக் கட்டணம் கட்டாயப்படுத்தி வசூலிக்கப்பட்டது. இதனால் சுற்றுலா வரும் பக்தர்கள் ஒரே வாகனத்துக்கு பல இடங்களில் கட்டணம் செலுத்தும் நிலை ஏற்பட்டது. மேலும் தேசிய நெடுஞ்சாலையில் டோல் கேட் அமைக்கப்பட்டு வசூல் செய்யப்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்புகள், மார்க்சிஸ்ட் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்தியதுடன், தேசிய நெடுஞ்சாலைத் துறையினரிடமும் முறையிட்டனர். இதையடுத்து தேசிய நெடுஞ்சாலையில் உள்ள டோல் கேட்டை அகற்றுமாறு தேசிய நெடுஞ்சாலை அதிகாரிகள் நகராட்சி நிர்வாகத்துக்கு பல முறை கடிதம் அனுப்பினர். 

ராமேஸ்வரம் நகராட்சி அலுவலகம் முன் குவிக்கப்பட்ட போலீஸார்
 

பொதுமக்களின் போராட்டம், நெடுஞ்சாலை துறையின் எச்சரிக்கை என எதைப் பற்றியும் கண்டுகொள்ளாத ராமேஸ்வரம் நகராட்சி நிர்வாகம் இன்று வாகன நுழைவுக் கட்டண உரிமத்துக்கான ஏலத்தை நடத்தியது. 7 பேர் கலந்துகொண்ட இந்த ஏலத்தின் நகராட்சி ஏல ஆரம்பத் தொகையாக ரூ.1,60,11,000 நிர்ணயிக்கப்பட்டது. இதில் அதிகபட்சமாக ரூ.1,60,11,000-க்கு ஏலம் கேட்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஒப்பந்தப் புள்ளிக்கான மனுக்கள் திறக்கப்பட்டன. இதில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவர் அதிகபட்சத் தொகையாக ரூ.2,26,50,800-க்கு டெண்டர் கோரியிருந்தார். இதையடுத்து அதிகபட்சத் தொகைக்கு டெண்டர் கோரிய சுப்பிரமணியனுக்கு வாகன நுழைவுக் கட்டணம் வசூலிக்கும் உரிமம் நகராட்சியால் வழங்கப்பட்டது. நகராட்சி வாகன நுழைவுக் கட்டண வசூல் உரிமத்துக்கான ஏலம் நடந்ததைத் தொடர்ந்து ராமேஸ்வரம் நகராட்சி அலுவலகம் முன்பு டி.எஸ்.பி மகேஷ் தலைமையில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement