Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சேலம் மாநகரச் சுகாதார நல அலுவலர் திடீர் ராஜினாமா ஏன்? - அதிரவைக்கும் காரணம்

தமிழகத்திலேயே டெங்கு காய்ச்சலால் அதிக உயிரிழப்பு சேலம் மாவட்டத்தில் நடந்து வரும் நிலையில் சேலம் மாநகரச் சுகாதார அலுவலர் பிரபாகரன் ராஜினாமா செய்திருப்பது தமிழ்நாட்டையே சேலம் பக்கம் திரும்பிப் பார்க்கச் செய்திருக்கிறார்.

டெங்கு காய்ச்சல் தடுக்க முடியவில்லை என்று தார்மீகப் பொறுப்பேற்று ராஜினாமா செய்தாரா, இல்லை சாதிய பாகுபாட்டின் காரணமாக ராஜினாமா செய்தாரா, இல்லை மேல் அதிகாரிகளின் டார்ச்சரால் ராஜினாமா செய்தாரா எனப் பல கோணங்களில் அலசி ஆராயப்படுகிறது. ஆனால், இந்தக் காரணத்தால்தான் பிரபாகரன் ராஜினாமா செய்தார் என்று ஆணித்தரமாகக் கூறுகிறார்கள் அவருடைய நண்பர் வட்டாரத்தில் உள்ளவர்கள்.

இதுப்பற்றி அவர்களிடம் கேட்டபோது, ''பிரபாகரன் சேலம் மாவட்டம் மல்லூரைச் சேர்ந்தவர். பட்டியலின சமுதாயத்தில் பிறந்த இவர் நன்றாகப் படித்து நல்ல மதிப்பெண் பெற்று சேலம் அரசு மோகன்குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரியில் படித்து மருத்துவர் ஆனவர். இவர் மனைவி பெயர் இளவரசி. சேலம் செவ்வாய்ப்பேட்டையில் உள்ள அரசுப் பள்ளியில் ஆசிரியராக இருக்கிறார். இவர்களுக்கு 2 வயதில் சர்சின் என்ற மகன் உள்ளார். ஊட்டியில் நகர் நல அலுவலராக இருந்த இவர், கடந்த ஆகஸ்ட் மாதம் சேலத்துக்கு மாறுதல் கிடைத்து சேலம் மாநகரச் சுகாதார அலுவலராகப் பொறுப்பேற்றார். இவர் பொறுப்பேற்று இரண்டரை மாதம்கூட நிறைவேறவில்லை. மாநகராட்சி, நகராட்சிகளில் சுகாதாரப் பணிகளுக்கான மருந்து, தெளிப்பான்களைத் தமிழ்நாடு மருந்து சேவை கழகத்தின் பரிந்துரையில் அவர்கள் கூறும் நிறுவனத்தில் மருந்துகள் வாங்க வேண்டும். அதன் அடிப்படையில் சேலம் மாநகராட்சி பேராமவுண்டர் நிறுவனத்திடம் கொசு மருந்து 1 லிட்டர் 1,000 ரூபாய் வீதம் 1,000 லிட்டர் வாங்கி 2 வருடத்துக்கு வைத்துக்கொள்வது வழக்கம். ஆனால், அரசியல் காரணமாக பேராமவுண்ட் நிறுவனத்திடம் கொசு மருந்து வாங்காமல் நிட்டோபால்  நிறுவனத்திடம் தரம் குறைந்த விலையில் சுமார் 200 லிட்டருக்கு குறைவாக வாங்கினார்கள்.

ஆனால், ஒரு லிட்டர் 1,000 ரூபாய் வீதம் 1,000 லிட்டர் வாங்கியதுபோல பில் க்ளைம் செய்துகொண்டார்கள். அவர்கள் வாங்கிக் கொடுத்த மருந்தை அடித்தால் கொசு சுவைத்து சாப்பிட்டு மேலும் வளருகிறது. தற்போது அந்த மருந்தும் தீர்ந்து ஒரு வாரம் ஆகிறது. தினந்தோறும் டெங்கு காய்ச்சலால் பல குழந்தைகள் மரணம் அடைகிறார்கள். மாநகராட்சி சுகாதார நல அலுவலர் பிரபாகரன், கொசு மருந்து இல்லை. வாங்கிய மருந்துகள் எங்கே என்று கேட்டால் மாநகராட்சி கமிஷனர் சதீஸ் பதில் சொல்ல முடியாமல் திட்டுகிறார். மாவட்ட சுகாதாரத்துறையிடம் கடனாக 10 லிட்டர், 20 லிட்டர் என 50 லிட்டருக்கு மேலே வாங்கிவிட்டோம். மீண்டும் மாநகராட்சியில் வாங்கிய மருந்து எங்கே, மருந்து வாங்காமலேயே பில் எழுதி விட்டீர்களா, பொதுமக்களிடம் துண்டேந்திப் பிச்சை எடுத்து மருந்து வாங்குங்கள் என்று அவர்களும் திட்டுகிறார்கள். 

இந்த அபாயமான சூழ்நிலையில்கூட  குழந்தைகளின் மரணத்தைப் பார்த்தும் மனசாட்சி இல்லாமல் கடந்த 1-ம் தேதி 36 கைபுகைத் தெளிப்பான் மெஷின் மாநகராட்சி சார்பாக வாங்கி கலெக்டர் ரோகிணி துவக்கி வைப்பதுபோல அனைத்து தினசரி பேப்பரிலும் புகைப்படத்தோடு  நியூஸ் வந்தது. அந்த மெஷின் முறையாக வாங்கவில்லை. ஒரு மெஷினின் விலை 30,000. ஆனால் ஒரு மெஷின் 65,000 ரூபாய் என்று மாநகராட்சி கமிஷனர் சதீஸ் எழுதி சுகாதார நல அலுவலர் பிரபாகரனைக் கையெழுத்துப்போடச் சொல்கிறார். இந்தக் காரணத்தால்தான் பிரபாகரன் ராஜினாமா செய்துள்ளார்'' என்றார்கள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement