வெளியிடப்பட்ட நேரம்: 19:23 (13/10/2017)

கடைசி தொடர்பு:19:23 (13/10/2017)

கல்லூரி கட்டுப்பாடுகளை எதிர்த்து மாணவர்கள் போராட்டம்..!

கோவையில், தனியார் கல்லூரி நிர்வாகம் கடுமையான கட்டுப்பாடுகளை விதிப்பதாகக் கூறி, மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

கோவை, காளப்பட்டியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 1,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை கல்லூரிக்குச் சென்ற மாணவர்கள், கால தாமதமாகச் சென்றதாகக் கூறி கல்லூரிக்குள் அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து, அங்கு வந்த 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்லூரி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இதனால் அந்தப் பகுதியில் சற்று நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர், அங்கு வந்த போலீஸார் மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர், மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, மாணவர்கள் கல்லூரிக்குள் வரும்போது விதிக்கப்பட்ட கடும் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதாக நிர்வாகத்தினர் கூறியதையடுத்து, மாணவர்கள் கல்லூரிக்குள் சென்றனர்.