''போக்குவரத்துத் தொழிலாளர்களுடைய பிரச்னைகளை உடனே தீர்க்க வேண்டும்!'' - விஜயகாந்த் வேண்டுகோள்

விஜயகாந்த்''போக்குவரத்துத் தொழிலாளர்களுடைய பிரச்னைகளை உடனே தீர்க்க வேண்டும்!'' என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தமிழக அரசைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ''தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துத் தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கேட்டு ஒரு வருடத்துக்கும் மேலாகப் போராடி வருகிறார்கள். போக்குவரத்துத் தொழிலாளர்களின் வருங்கால வைப்புநிதி, கூட்டுறவு நிறுவனக் கடன், ஆயுள் காப்பீட்டுத் தொகை, அஞ்சலகக் காப்பீட்டுத் தொகை போன்றவைகளுக்காகத் தொழிலாளர்களிடம் இருந்து பிடித்தம் செய்யப்பட்ட தொகையை அந்தந்த நிறுவனங்களில் செலுத்தாமல், நிர்வாகச் செலவுக்காகத் தொழிலாளர்களின் 6,500 கோடி ரூபாய் பணத்தை நிர்வாகம் எடுத்துச் செலவு செய்துவிட்டு, அரசுப் போக்குவரத்துக் கழகம் நஷ்டத்தில் இயங்குகிறது என்று நிர்வாகம் ஒவ்வொருமுறையும் கூறுகிறதே தவிர, அரசு வழங்க வேண்டிய டீசல் மானியத்தையும், இலவசப் பயணத்திட்டத்துக்காகப் போதிய நிதியை ஒதுக்காமலும், அத்துறை சிறப்பாகச் செயல்படுவதற்கு, நிர்வாகம் அரசிடம் போதுமான நிதியைப் பெறுவதை விட்டுவிட்டுத் தொழிலாளர்களின் பணத்தை எடுத்துச் செலவு செய்வதை நிர்வாகச் சீர்கேட்டை எடுத்துக்காட்டுகிறது.

தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடும்போது பொதுமக்கள் அதிகமாகப் பாதிக்கப்படுவார்கள் என்பதை நிர்வாகமும், அரசும் மனதில் வைத்துக்கொண்டு அவர்களுடைய பிரச்னைகளை உடனடியாகத் தீர்க்க நடவடிக்கை எடுக்கவேண்டும். தங்களால் நிர்வாகம் செய்யமுடியவில்லை எனில், போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களை அரசு ஊழியர்களாக அறிவித்துவிட்டு பொதுமக்கள் பாதிக்காத வண்ணம் சேவை செய்ய வழிவகை செய்ய வேண்டும்'' என்று அதில் கூறியுள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!