''முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தில் டெங்கு சேர்ப்பு!'' -தமிழக அரசு மனுத்தாக்கல்!


தமிழக அரசு தலைமைச் செயலகம்

முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தில் டெங்குக் காய்ச்சலும் சேர்க்கப்பட்டுள்ளது'' என்று தமிழக அரசு பதில் மனுத் தாக்கல் செய்துள்ளது.

தமிழகம் தற்போது சிக்கித் தவிப்பது டெங்குவிடம் என்றால் அது மிகையாகாது. இதனால் சிறுவர்கள் முதல் பெரியவர்களின் உயிரிழப்புகள் நாளுக்குநாள் அரங்கேற, மறுபுறம் அதன் பாதிப்பால் மருத்துவமனையில் நோயாளிகள் அடைக்கலமாகிவருகின்றனர். இந்த நிலையில், தமிழக முதலமைச்சரின் விரிவான இலவச காப்பீட்டுத் திட்டத்தில் டெங்கு சேர்க்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன. 

இதுதொடர்பாக, ''தமிழக முதலமைச்சரின் விரிவான இலவச காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சை பெறும் நோய்களில், ‘டெங்கு’ காய்ச்சல் இடம்பெறாததால், தனியார் ஆஸ்பத்திரிகளில் இலவச சிகிச்சை வழங்குவது இல்லை. எனவே, இதுகுறித்து தகுந்த நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்'' என்று உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சூரியபிரகாசம் என்பவர் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், டெங்குக் காய்ச்சலைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும், அந்தக் காய்ச்சலுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்தும் அறிக்கை தாக்கல்\செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.

இந்த நிலையில், உயர் நீதிமன்ற உத்தரவின்படி, தமிழகச் சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஒரு பதில் மனுவைத் தாக்கல் செய்துள்ளார். அதில், ''டெங்குக் காய்ச்சலைப் பரப்பும் கொசுக்களை அழிக்க, வீட்டைச் சுற்றித் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பது உள்பட பல அறிவுரைகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. கொசுக்களைக் கட்டுப்படுத்த ரூ.13.95 கோடி செலவில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அனைத்து ஆஸ்பத்திரிகளிலும், 24 மணி நேரமும் இயங்கும் சிறப்புப் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளன. முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் டெங்குக் காய்ச்சல் ஏற்கெனவே சேர்க்கப்பட்டுள்ளது. டெங்குக் காய்ச்சலைக் கட்டுப்படுத்தவும், இந்தக் காய்ச்சலைப் பரப்பும் கொசுக்களை அழிக்கவும் தமிழக அரசு அனைத்து வகையிலும் நடவடிக்கை எடுத்து வருகிறது'' என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!