நடிகையை அவதூறாக பேசிய எம்.எல்.ஏ. மீது வழக்குப் பதிவு செய்ய கேரள நீதிமன்றம் உத்தரவு!

கேரளாவில் கடந்த பிப்ரவரி மாதம் மலையாள நடிகை கடத்தப்பட்டு பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். இந்தச் சம்பவம் மலையாள திரையுலகை மட்டுமல்ல, ஒட்டுமொத்த கேரளாவையும் அதிர்ச்சி அடையச் செய்தது. அதன்பின் பல்சர் சுனில், நடிகர் திலீப் போன்றவர்கள் அடுத்தடுத்து கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்தச் சம்பவம் குறித்து பேட்டி அளித்த பி.சி.ஜார்ஜ் எம்.எல்.ஏ., நடிகையின் பெயரைக் குறிப்பிட்டு சில கருத்துகளை சொல்லி இருந்தார். இதற்குப் பெண்கள் அமைப்புகள் மற்றும் பலரும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.

இந்த நிலையில், கொச்சி களமச்சேரியைச் சேர்ந்த கிரிஷ்பாபு என்பவர் கோழிக்கோடு குன்னமங்கலம் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில், ''பி.சி ஜார்ஜ் எம்.எல்.ஏ.வுக்கும் நடிகர் திலீப்புக்கும் நெருங்கியத் தொடர்பு உண்டு. இருவரும் சேர்ந்து சதித் திட்டம் தீட்டி உள்ளனர். நடிகையை அவமானப்படுத்தும் வகையில், அவருக்கு மிரட்டல் விடுக்கும் தொனியில் நடிகையின் பெயரை எம் எல்.ஏ  குறிப்பிட்டுப் பேசி வருகிறார். எனவே, எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், பி.சி.ஜார்ஜ் எம்.எல்.ஏ. மீது வழக்குப் பதிவு செய்ய கொச்சி மருத்துவக் கல்லூரி போலீஸாருக்கு உத்தரவு பிறப்பித்தது. நடிகை வழக்கில் தற்போது நடிகர் திலீப் ஜாமீனில் வெளிவந்துள்ள நிலையில், இந்தச் சம்பவம் கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!