லாரி ஓட்டுநர்களின் கில்லாடித்தனம்! பொறிவைத்துபிடித்த போலீஸ்

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை முத்துநகர் பகுதியில் 5 மணியளவில் சிறப்பு உதவி ஆய்வாளர் சுவாமி தாஸ் தலைமையில், நெடுஞ்சாலைத் துறை போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, புதிதாக அமைக்கப்பட்டு வரும் நான்கு வழிச்சாலை குருசடி தேவசகாயம் மவுண்ட் பகுதியிலிருந்து மங்கம்மாள் சாலை வழியாக நாகர்கோவில் செல்லும் நெடுஞ்சாலையில் வந்து சேரும் ரோடு வழியில் வந்த லாரியை மடக்கி சோதனை செய்வதற்காக நிறுத்தினர். 

லாரியை நிறுத்திய வேகத்தில் லாரியின் டிரைவரும், கிளீனரும்  தப்பியோடி விட்டனர். லாரியில் சங்கர் சிமென்ட் என்றும் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு தார்ப்பாய் போட்டு கட்டப்பட்டிருந்தது. சந்தேகமடைந்த போலீஸார் சோதனை செய்ததில் அந்த லாரியில் கடத்தல் மணல் இருந்ததும், சோதனைச் சாவடியில் சந்தேகம் வராமல் இருப்பதற்கு சங்கர் சிமென்ட் என்று ஸ்டிக்கர் ஒட்டபட்டிருந்ததும் தெரியவந்தது. பின்னர் அந்த லாரி ஆரல்வாய் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது. இதேபோல் மணல் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் பணியில் இருந்தபோது வேகமாக வந்த ஒரு டிப்பர் லாரி, மற்றும் தார்ப்பாய் போடப்பட்டு சங்கர் சிமென்ட் என்று ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட லாரியையும் மடக்கி விசாரணை நடத்தியபோது இந்த இரண்டு லாரிகளின் டிரைவர்கள், கிளீனர்களும் தப்பியோடிவிட்டனர்.

விசாரணையில் அந்த இரண்டு லாரிகளும் திருட்டு மணல் கொண்டுவந்தது தெரியவந்தது. அந்த லாரிகளும் ஆரல்வாய்மொழி காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டன. இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே நேரத்தில் 3 மணல் கடத்தல் லாரிகள் பிடிபட்டன.  மேலும், காவல்கிணறு பகுதி நான்கு வழிச்சாலையிலிருந்து நாகர்கோவில் வழியாக புதிதாக நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பகுதியில் இரவு நேரத்தில் ஆள் நடமாட்டம் இல்லாமல் இருப்பதால் கடத்தல்காரர்கள் இவ்வழியை தேர்ந்தெடுத்து தங்கள் கடத்தல் வேலையைச் செய்து வருகின்றனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!