’தீபாவளியைக் கறுப்பு தினமாக அனுசரிக்க விவசாயிகள் முடிவு’

தென்மாவட்ட விவசாயிகளுக்கு நிலுவையிலுள்ள பயிர்க்காப்பீட்டுத் தொகையை வழங்காமல் ஏமாற்றி வரும் அரசைக் கண்டித்து 3 மாவட்டங்களில் தீபாவளியைக் கறுப்பு தினமாக அனுசரிக்க விவசாயிகள் முடிவுசெய்துள்ளனர். 

farmers rally

கடந்த 2 ஆண்டுகளாக நிலுவையிலுள்ள விவசாயிகளுக்கான பயிர்காப்பீட்டுத் தொகையை வழங்கிடாமல் அரசு இழுத்தடித்து வருவதைக் கண்டித்து, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பிச்சை எடுத்தல், தூக்குமாட்டுதல், ஒப்பாரி வைத்தல், மொட்டையடித்தல் என 10 நாள்கள் தொடர் போராட்டத்தை விவசாயிகள் நடத்தினர். பின், மாவட்ட ஆட்சியர் உடனான  பேச்சுவார்த்தை உடன்பாட்டால் தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டனர்.  ஆனால், தற்போதுவரை  பயிர்காப்பீட்டுத் தொகை வழங்க அரசு நடவடிக்கை எடுக்காததால் இந்த தீபாவளியை கறுப்பு தினமாக அனுசரிக்க விவசாயிகள் முடிவுசெய்துள்ளனர்.

மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ் மற்றும் எஸ்.பி.  மகேந்திரன் ஆகியோரிடம் மனு அளித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய உழவர் உழைப்பாளர் கட்சியின் தமிழ் விவசாயிகள் சங்க மாநிலத்தலைவர் நாராயணசாமி, ‘’கடந்த 2 வருஷமா நிலுவையிலுள்ள பயிர்க்காப்பீட்டுத் தொகையை இன்னமும் வழங்காமல், வயிற்றுக்குச் சோறு போடும் விவசாயிகளின் வயிற்றில் அடிக்கிறது மத்திய, மாநில அரசுகள். சமீபத்தில் தமிழகத்தில் பரவலாக மழை பெய்துள்ளது. பாசனத்துக்காக சில அணைகளில் தண்ணீரும் திறக்கப்பட்டுவிட்டது. விவசாயப் பணிகளைத் தொடங்க வேண்டிய இந்த நேரத்தில் செலவுக்குப் பணமில்லாமல் விவசாயிகள் திண்டாடி வருகின்றனர். விவசாயிகளின் பயிர்க்காப்பீட்டுத் தொகையை வழங்காமல் வேண்டுமென்றே காலம் தாழ்த்தி விவசாயிகளை ஏமாற்றி, அந்தப் பணத்தை ஊழல் செய்யப் பார்ப்பதாகவே தோன்றுகிறது. இதன்மூலம் அரசே விவசாயிகளை தற்கொலைக்கு தூண்டிக் கொண்டிருக்கிறது.

பயிர்க்கடன்களைத் தள்ளுபடி செய்யக்கோரி உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டதையடுத்து எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது விவசாயிகளை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. மத்திய அரசு விவசாயிகளுக்கு தனிபட்ஜெட் போட்டால் மட்டுமே இந்தியா முன்னேற்றம் காணும். தனிபட்ஜெட்டை வலியுறுத்தி 1 கோடி விவசாயிகளிடம் கையெழுத்து இயக்கத்தை துவக்கியுள்ளோம். தனிபட்ஜெட் இல்லாமல் மற்ற எந்தத் திட்டமும் விவசாயிகளுக்குப் பயனளிக்காது. விவசாயிகளை வஞ்சிக்கும் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து தூத்துக்குடி, நெல்லை மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களிலுள்ள விவசாயிகள் இந்தத் தீபாவளியை புறக்கணித்து கிராமங்களில் கறுப்புக்கொடி ஏற்றி கறுப்புதினமாக அனுசரிக்க இருக்கிறோம்’ என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!