வெளியிடப்பட்ட நேரம்: 12:20 (14/10/2017)

கடைசி தொடர்பு:15:59 (28/06/2018)

தரையில் படுக்கவைக்கப்படும் கர்ப்பிணிகள்... அவலத்தில் அரசு மருத்துவமனை!

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம்  அருகில் உள்ள கள்ளப்பள்ளியில் இயங்கி வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் எந்த வசதிகளும் இல்லை. டாக்டர்கள்  பணிக்கு குறிப்பிட்ட நேரத்துக்கு வராததால் செவிலியர்களே நோயாளிகளுக்கு வைத்தியம் பார்க்கும் அவலம் நடப்பதாக பகுதி மக்கள் புலம்பி வந்தனர். 'அதுகூட பரவாயில்லை. இங்கு மருத்துவ சோதனைக்கு வரும் ஐம்பதுக்கும் மேற்பட்ட கர்ப்பிணிகள் உட்காரவோ, படுக்கவோ வசதியில்லாததால், படிக்கட்டிலும், தரையிலும் படுக்கவும், உட்காரவும் செய்யும் கொடுமை நடக்கிறது' என்று கண்ணீர் வடிக்கிறார்கள் அந்த பகுதி மக்கள்.

இதுபற்றி நம்மிடம் பேசிய அந்தப் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர், "இந்த ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு நாள்தோறும்  பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்தவர்கள் சிகிச்சைக்காக வருகிறார்கள். இங்கு வசிக்கும் அனைவரும் படிப்பறிவற்ற ஏழைகள். அன்றாடங்காய்ச்சிகள். அதனால், வேறு மருத்துவமனைகளுக்குப் போகமுடியாத சூழலில் இருக்கிறார்கள். அதனால், அவர்களுக்கு இந்த கள்ளப்பள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை விட்டால் வேறு போக்கிடம் இல்லை. ஆனால், இங்கு பணிபுரியும் டாக்டர்கள் ஒழுங்காக பணிக்கு வருவதில்லை. சொந்த கிளினிக்கில் அநேக நேரம் இருந்துகொண்டு, ஆடிக்கு ஒரு தடவையும் அமாவாசைக்கு ஒருதடவையும் இங்கு பணிக்கு வருகிறார்கள். இதனால், நாள்தோறும் நூற்றுக்கணக்கில் இங்கு குவியும் நோயாளிகளுக்கு இங்கு பணிபுரியும் செவிலியர்களே சிகிச்சை அளிக்கிறார்கள். இங்கு எந்த வசதியும் இல்லை. டெங்குக் காய்ச்சல் தமிழகம் முழுவதும் பரவி வருகிறது. ஆனால், இந்த மருத்துவமனையில் எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இது ஒருபக்கம் இருக்க, இங்கே ஐம்பதுக்கும் மேற்பட்ட கர்ப்பிணிப் பெண்கள் மாதாந்திர மருத்துவ சோதனைக்கு வருகிறார்கள். ஆனால், காலையில் வரும் அவர்களை மதியத்துக்கு மேல்தான் டாக்டர்கள் செக்கப் செய்து அனுப்புகிறார்கள். இதனால், உட்காரவோ, படுக்கவோ வசதி இல்லாத அந்த மருத்துவமனையில் படிக்கட்டிலும், தரையிலும் உட்கார்ந்தும், படுத்தும் கர்ப்பிணிப் பெண்கள் அவஸ்தையோடு நேரத்தை ஓட்ட வேண்டிய நிலை. நோயாளிகள் தரையில்தான் வெற்றிலை, ஹான்ஸ் போட்ட எச்சிலை துப்பி வைக்கிறார்கள். அவற்றில் கர்ப்பிணிப் பெண்கள் உட்காருவதால், அந்த பெண்களுக்குப் பல நோய்கள் ஏற்பட வாய்ப்பிருக்கின்றன. இந்த கொடுமை ரொம்பநாளா நடக்குது. அதனால், மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட்டு இங்கு வரும் கர்ப்பிணிப் பெண்களுக்கு உடனே வைத்தியம் பார்த்து அனுப்பும் வகையில் செயல்படாத டாக்டர்களை செயல்பட வைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கணும். முப்பது படுக்கைகள் கொண்ட 24 மணி நேரமும் இயங்கும் மருத்துவமனையாக கள்ளப்பள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும். அப்போதுதான், இப்படி கர்ப்பிணிப் பெண்கள் தரையில் படுக்க வைக்கப்படும் கொடுமை தடுக்கப்படும். எங்க கோரிக்கைகள் நிறைவேறலன்னா, கர்ப்பிணிப் பெண்களை வைத்து சாலை மறியல் போராட்டம் நடத்துவோம்" என்றார் காட்டமாக.