வெளியிடப்பட்ட நேரம்: 13:10 (14/10/2017)

கடைசி தொடர்பு:13:10 (14/10/2017)

'கட்சியைக் கைப்பற்றாமல் நுழைய மாட்டேன்'- ஓ.பன்னீர்செல்வம் சபதம்

தேனி மாவட்டத்தில் அடுத்த மாதம் 5-ம் தேதி நடக்க இருக்கும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடந்த சில வாரங்களாகவே தனது சொந்த ஊரான தேனிக்கு வரும் பன்னீர்செல்வம், முழுமையாக எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா ஏற்பாடு தொடர்பாகவே அதிகாரிகளுடனும், கட்சி நிர்வாகிகளுடனும் விவாதித்து வருகிறார். இந்நிலையில், விழா நடக்க இருக்கும் போடி விலக்குக்கு அருகில் உள்ள மைதானத்தில் முதல்கட்டமாக நடைபெறும் சீரமைப்புப் பணிகளை பன்னீர்செல்வம் நேரில் சென்றுபார்வையிட்டார். அந்த மைதானத்துக்கு அருகில்தான் மாவட்ட அ.தி.மு.க தலைமை அலுவலகம் உள்ளது.

மைதானத்தில் நீண்ட நேரம் செலவழித்த பன்னீர்செல்வம், மெதுவாக நடந்து சென்றாலே அ.தி.மு.க. அலுவலகத்துக்குச் சென்றுவிட முடியும். ஆனால், கடந்த முறை மைதானத்தைப் பார்க்க வந்தபோதும், தற்போதும் அவர் அந்த அலுவலகத்துக்குச் செல்லவில்லை. எம்.ஜி.ஆர் நூற்றாண்டுவிழா நடைபெற ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்துவரும் சூழலில், எம்.ஜி.ஆர் சிலை அமைந்துள்ள மாவட்ட கட்சி அலுவலகத்துக்கு ஏன் செல்வதில்லை என பன்னீர்செல்வத்தின் நெருங்கியவர்களிடம் விசாரித்தோம், "தற்போது துணைமுதல்வர் ஆன பிறகு, தங்கத்தமிழ்ச்செல்வன் பக்கம் இருந்த அனைவரும் பன்னீர்செல்வம் பக்கம் மாறிவிட்டனர். தங்கத்தமிழ்ச்செல்வனும், பெரியகுளம் எம்.எல்.ஏ. கதிர்காமு மட்டும் தான் மிச்சம்.

இந்த சூழலில், தேனி மாவட்ட கட்சியே பன்னீர்செல்வத்தின் கைகளில்தான். இருந்தபோதும், இன்றும் தேனி மாவட்ட அ.தி.மு.க மாவட்டச் செயலாளர் பதவி தங்கத்தமிழ்ச்செல்வனிடம்தான் உள்ளது. அந்தப் பதவியைப் பறித்து, பன்னீர்செல்வத்தின் நெருங்கிய வட்டத்தில் இருக்கும் முருக்கோடை ராமருக்கு கொடுக்க வேண்டும் என்பது பன்னீர்செல்வத்தின் ஆசை. அது நடந்தால்தான் முழுமையாக கட்சி தனது கட்டுப்பாட்டில் வரும் என்பது அவரது எண்ணம். அப்போதுதான் கட்சித் தலைமை அலுவலகத்துக்குள் செல்வார். இதை ஒரு சபதமாகவே தனது மனதுக்குள் வைத்துள்ளார் பன்னீர்செல்வம்" என்று கிசுகிசுக்கிறார்கள். என்னதான் தேனி மாவட்டத்தில் இருக்கும் கட்சி நிர்வாகிகள் அனைவரும் பன்னீர்செல்வத்தின் பக்கம் இருந்தாலும், மாவட்டச் செயலாளர் பதவி தங்கத்தமிழ்ச்செல்வனிடம்தான் உள்ளது என்பது குறிப்பிடத்தகுந்தது.