கண் அயர்ந்த வேன் ஓட்டுநர்... 3 பேரின் உயிரைப்பறித்த சிமென்ட் லாரி | Van coalided with Cement lorry; Three died on the Spot in Nellai District

வெளியிடப்பட்ட நேரம்: 13:30 (14/10/2017)

கடைசி தொடர்பு:13:30 (14/10/2017)

கண் அயர்ந்த வேன் ஓட்டுநர்... 3 பேரின் உயிரைப்பறித்த சிமென்ட் லாரி

நெல்லை மாவட்டம் கடையநல்லூர் அருகே வேனும் லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் ஒரு பெண் உள்ளிட்ட மூவர் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 8 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நெல்லை மாவட்டம், கடையநல்லூர் ரஹ்மானியாபுரத்தைச் சேர்ந்தவர் யூனுஸ். இவர் புனிதப் பயணமாக மெக்காவுக்கு இன்று அதிகாலை 2 மணிக்கு திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றார். அவரை வழியனுப்பி வைப்பதற்காக உறவினர்கள் அனைவரும் ஒரு வேனில் புறப்பட்டுச் சென்றனர். அதிகாலையில் அவரை வழியனுப்பிய பின்னர் சொந்த ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.

கடையநல்லூர் அருகே மக்களபுரம் மஸ்தார் தர்ஹா அருகே உள்ள சாலை வளைவில் வந்தபோது எதிரே சிமென்ட் லோடு ஏற்றியபடி வந்த லாரியுடன் நேருக்கு நேர் மோதியது. இதில், வேன் டிரைவர் மணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயம் அடைந்தவர்கள் உடனடியாக தென்காசி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். ஆனால், வழியிலேயே அப்துல் ரஹீம் என்பவரின் 10 வயது மகன் ரஷீத், காஜாமைதீன் என்பவரது மனைவி சைபுன்னிஸா ஆகியோர் உயிரிழந்தனர். 

இந்த விபத்தில் சிக்கிய மேலும் 8 பேருக்கு தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், மேல் சிகிச்சைக்காக அவர்கள் அனைவரும் நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்தச் சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதிகாலை நேரத்தில் வேன் டிரைவர் கண் அயர்ந்ததே விபத்துக்குக் காரணம் என்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.