தடகள போட்டி அழைப்பிதழில் தமிழ் புறக்கணிப்பு! அதிகாரிகளை விளாசிய அ.தி.மு.க எம்பி | Government invitation creates without Tamil language, MP scold officials,

வெளியிடப்பட்ட நேரம்: 14:30 (14/10/2017)

கடைசி தொடர்பு:11:05 (03/07/2018)

தடகள போட்டி அழைப்பிதழில் தமிழ் புறக்கணிப்பு! அதிகாரிகளை விளாசிய அ.தி.மு.க எம்பி

தடகள போட்டிக்கான அழைப்பிதழ்

தழிழை புறக்கணித்து ஆங்கிலத்தில் மட்டும் அழைப்பிதழ் அச்சடித்த  தமிழ்நாடு தடகள சங்கத்தினரை பாராளுமன்ற உறுப்பினர் அன்வர்ராஜா கண்டித்துப் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.

ராமநாதபுரத்தில் மாநில அளவிளான ஜூனியர் தடகளப் போட்டிகள் 3 நாள்கள் நடக்கிறது. இதற்கான துவக்கவிழா நேற்று ராமநாதபுரத்தில் நடந்தது. மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் நடந்த இந்த விழாவில், போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பதக்கங்கள் வழங்கவும், சிறப்புரை ஆற்றவும் தொகுதி எம்.பி.யான அன்வர்ராஜா அழைக்கப்பட்டிருந்தார். விழாவில் பங்கேற்பதாக குறிப்பிடப்பட்டிருந்த தடகள சங்க மாநில நிர்வாகிகள் தேவாரம், சைலேந்திரபாபு, டி.ஜி.பி. ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்காத நிலையில் சிறப்புரை ஆற்றத் துவங்கிய அன்வர்ராஜா,  எனது தோற்றத்தை வைத்து நான் வயதானவன் என யாரும் எண்ணிவிட வேண்டாம். இப்போது 100 மீட்டர் போட்டி வைத்தால்கூட நான் 15 நொடிகளில் ஓடி முடித்து விடுவேன். இதற்குக் காரணம் நல்ல பயிற்சியும், அதற்கான முயற்சியும்தான். கல்லூரியில் படிக்கும்போதே நான் பல்கலைக்கழக வீரராக விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றவன். அப்போதெல்லாம் இந்த அளவுக்கு ராமநாதபுரம் வளர்ச்சி அடையவில்லை. ஆனால், இப்போது தமிழக தடகள சங்கத்தின் மாநில நிர்வாகியே ராமநாதபுரத்தைச் சேர்ந்தவராக இருக்கிறார். 

விழாவில் உரையாற்றிய அன்வர்ராஜா
 

இந்நிலையில், உங்களுக்கு ஒரு வேண்டுகோளை விடுக்கிறேன். தமிழ்நாடு தடகள சங்கத்தின் சார்பில் நடத்தப்படும் இந்தப் போட்டிக்கான அழைப்பிதழ் முழுக்க முழுக்க ஆங்கிலத்திலேயே அச்சிடப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் அச்சிடுங்கள்; வேண்டாம் என சொல்லவில்லை. அதே நேரத்தில் ஒரு புறம் தமிழிலும் அச்சிடுங்கள். ஏன் இப்படி தமிழைப் புறக்கணிக்கிறார்கள் என தெரியவில்லை. வருங்கால தலைமுறையினர் எதை நோக்கிக் செல்கிறார்கள் என புரியவில்லை. ஆங்கிலம் என்பது ஒரு மொழிதானே தவிர, அது அறிவல்ல. சிலர் ஆங்கிலத்தை அறிவாக நினைக்கிறார்கள். தமிழைப் போலவே ஆங்கிலமும் ஒரு மொழிதான்.

தமிழில் படித்தவர்களில் அறிவாளிகள் இல்லையா. வள்ளுவன் ஆக்ஸ்போர்டு பல்கலையிலும், கம்பன் பிரிட்டிஷ் பல்கலையிலுமா பயின்றார்கள். அவர்கள் எழுதிய நூல்கள் இன்று உலக மொழி எல்லாவற்றிலும் மொழி பெயர்க்கப்படவில்லையா. மேலும், இங்கு பங்கேற்ற வீரர்கள் உறுதிமொழி எடுத்தனர். அதுவும் ஆங்கிலத்தில்தான் எடுத்தனர். இங்கு வந்திருப்பவர்கள் எல்லாம் ஆங்கிலம் மட்டுமே படித்தவர்களா? இவர்களில் எத்தனை பேருக்கு உறுதிமொழியில் என்ன கூறப்பட்டது என்றே தெரியாது. எனவே, ஆங்கிலம் என்பது மொழியே தவிர அது அறிவு என நினைக்கும் பழக்கத்தைக் கைவிட வேண்டும். பல்கலை பட்டமளிப்பில் தமிழ், ஆங்கிலம் இருக்கும். அது போல இனிவரும் விழாக்களுக்கான அழைப்பிதழில் தமிழ் கட்டாயம் இடம் பெற்றிருக்க வேண்டும்'' என ஒரு பிடிபிடித்தார்.