வெளியிடப்பட்ட நேரம்: 15:40 (14/10/2017)

கடைசி தொடர்பு:15:40 (14/10/2017)

ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட எம்.எல்.ஏ-க்களுக்கு எதிரான வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் தி.மு.க. புதிய மனு

ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 12 எம்.எல்.ஏ-க்களுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் தி.மு.க. சார்பில் கேவியட் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இழந்துவிட்டதாகக் கூறி ஆளுநரிடம் கடிதம் கொடுத்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரைத் தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார். இதை எதிர்த்து 18 எம்.எல்.ஏ-க்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடக் கோரி தி.மு.க. சார்பில் தொடரப்பட்ட வழக்கு விசாரணையுடன் அந்த வழக்கும் விசாரிக்கப்பட்டு வருகிறது.

மேலும், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டதுபோல, கடந்த பிப்ரவரி மாதம் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு எதிராக வாக்களித்த ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 12 எம்.எல்.ஏ-க்களையும் தகுதிநீக்கம் செய்து உத்தரவிட வேண்டும் என்று தி.மு.க. கொறடா சக்கரபாணி தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ரவிச்சந்திர பாபு, நவம்பர் 3-ம் தேதி தீர்ப்பு அளிக்க இருக்கிறார். 

இந்த வழக்கில் சபாநாயகர் அதிகாரவரம்பு குறித்தும் விசாரிக்கப்பட்டு வருகிறது. அதை விசாரிக்கும் அதிகாரம் உச்ச நீதிமன்றத்துக்கே இருக்கிறது என்று கூறி அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செம்மலை எம்எல்ஏ மனுத் தாக்கல் செய்ததாகக் கூறப்படுகிறது. இந்த மனு விசாரணைக்கு ஏற்றதா இல்லையா என்பதை உச்ச நீதிமன்றம் இன்னும் முடிவு செய்யவில்லை. இந்தநிலையில், எம்.எல்.ஏ-க்களைத் தகுதி நீக்கம் குறித்த வழக்கில் தங்கள் தரப்பு வாதத்தைக் கேட்காமல் தீர்ப்பு வழங்கக் கூடாது என்று கூறி தி.மு.க. தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.