தடகள போட்டியில் மாநில அளவில் புதிய சாதனை படைத்த மதுரை மாணவி

மாநில அளவிலான ஜூனியர் தடகளப் போட்டியில் வட்டு எறிதல் பிரிவில் வைஷ்ணவ் கல்லூரி மாணவி காருண்யா மாநில அளவில் புதிய சாதனை படைத்தார். 

ஜுனியர் தடகள போட்டியில் மாநில சாதனை படைத்த மாணவி


 தமிழ்நாடு தடகள கழகம் மற்றும் ராமநாதபுரம் மாவட்ட தடகள கழகத்தின் சார்பில் 31-வது மாநில அளவிலான ஜூனியர் தடகள போட்டிகள் ராமநாதபுரத்தில் நடந்து வருகிறது. சீதக்காதி விளையாட்டு மைதானத்தில் 3 நாள்கள் நடைபெறும் இப்போட்டிகளில் தமிழகம் முழுவதிலும் இருந்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். தொடக்க நாளில் 100 மீ, 1000 மீ, நீளம் தாண்டுதல், ஈட்டி எறிதல், வட்டு எறிதல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன.

இந்தப் போட்டிகளில் பெண்களுக்கான வட்டு எறிதல் போட்டியில் சென்னை எம்.ஓ.பி. வைஷ்ணவ் பெண்கள் கல்லூரியின் இளங்கலை முதலாம் ஆண்டு மாணவியான காருண்யா மாநில அளவிலான சாதனை படைத்தார்.   20-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்ற இப்போட்டியில் மாணவி காருண்யா 40.33 மீட்டர் தூரம் வட்டு எறிந்து தனது முந்தைய சாதனையான 39.63 மீட்டர் தூரத்தை முறியடித்து மாநில அளவில் புதிய சாதனையை படைத்தார்.

மதுரை முத்துராமலிங்கம்- மரிய அருள் தம்பதியினரின் மகளான காருண்யா ஏற்கெனவே தாய்லாந்தில் நடைபெற்ற ஆசிய இளைஞர் தடகளப் போட்டியில் பங்கேற்றுள்ளார். மேலும், மாநில அளவில் நடைபெற்ற முதல்வர் கோப்பைக்கான போட்டியில் முதலிடம் பெற்றதுடன் மாநில மற்றும் தேசிய அளவில் நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்ந்து தடகளப் போட்டிகளில் பங்கேற்பதுடன் இந்தியாவின் சார்பில் ஒலிம்பிக் போட்டிகளிலும் பங்கேற்று பதக்கம் வெல்வதே தனது லட்சியமாக கொண்டுள்ளதாக மாணவி காருண்யா தெரிவித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!